எனக்குன்னே வருவீங்களா டா?... விசிலடிச்சான் குஞ்சுகளால் விஜய்க்கு வந்த வினை... தவெகவை பொளந்தெடுத்த பத்திரிகையாளர் மன்றம்...!
ஊடகங்களையும், பத்திரிகையாளர்களையும் கீழ் தரமாக விமர்சிக்கும் வகையில் பதிவிட்டு வரும் தமிழக வெற்றிக் கழகத்தினரை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டித்துள்ளது.
விஜய் - சங்கீதா விவகாரத்து விவகாரம் வெளியானதில் இருந்தே சோசியல் மீடியாக்களில் தமிழக வெற்றிக் கழகத்தினர் தங்களது கோபத்தை எதிர்க்கட்சிகளான திமுக, அதிமுக, பாஜக மீது கொட்டித் தீர்த்து வந்தனர். ஒருபக்கம் சோசியல் மீடியா இன்ஃபுளூயன்சர்களை வைத்து விஜய்க்கு ஆதரவாக பேச சொன்னதாகவும் பி.ஆர். நிறுவனத்தின் ஆடியோ வெளியாகி சர்ச்சையானது. இதனிடையே தமிழ் செய்தி ஊடகங்கள் விஜய்க்கு எதிரான செய்திகளை பரப்ப உள்ளதாகவும், தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ ஐ.டி. விங்க் வெளியிடும் செய்திகளை மட்டுமே பகிர வேண்டும் என்றும் ஒரு தகவல் காட்டுத்தீ போல் வாட்ஸ் அப் உள்ளிட்ட சோசியல் மீடியாக்களில் வைரலாகி வந்தது.
இதனையடுத்து தமிழ் ஊடகங்களை கண்டிக்கிறோம் என்ற பெயரில் தமிழக வெற்றிக் கழகத்தினர் மீடியாக்களின் பெயரை மாற்றி அந்நிறுவனம் குறித்தும் ஆபாசமான பதிவுகளைபதிவிட்டு வருகின்றனர். இதனை சென்னை பத்திரிகையாளர் மன்றம் கடுமையாக கண்டித்துள்ளது.
இதையும் படிங்க: சொன்னா கேளுங்கம்மா..! தஞ்சையில் தவெக நிகழ்ச்சி...!! கைக்குழந்தையுடன் வந்த பெண்ணை திருப்பி அனுப்பிய போலீஸ்..!!
இதுகுறித்து பத்திரிகையாளர் மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஊடகங்களையும் ஊடகவியலாளர்களையும் குறிவைத்து கீழ்த்தரமாக பதிவிட்டுவரும் தமிழக வெற்றிக் கழகத்தினரை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது. பதிவுகள் நீக்கப்படுவதுடன், இந்த அறுவெறுக்கத்தக்க நடவடிக்கையை உடனே நிறுத்தாவிட்டால் சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கிறோம்.
தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்தவர்கள் சமூக வலைதளங்களில் பல முன்னணி செய்தித் தொலைக்காட்சிகளின் பெயர்களிலும், மேலும் பல கற்பனையான ஊடக நிறுவனங்களின் பெயர்களிலும் பக்கங்களைத் தொடங்கியுள்ளனர். அந்த குறிப்பிட்ட சமூக வலைதளப் பக்கங்களில் பல முன்னணி பத்திரிகையாளர்கள் குறித்து உண்மைக்குப் புறம்பான மற்றும் நாகூசும் வகையிலான தகவல்களை திட்டமிட்டு பரப்பி வருகின்றனர்.
அதேபோல், தமிழ்நாட்டின் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் குறித்தும், உண்மைக்குப் புறம்பான தகவல்களையும், கீழ்த்தரமான விமர்சனங்களையும் திட்டமிட்டு பதிவிட்டு வருகின்றனர். தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், கட்சி வேறுபாடின்றி இதுபோல் போலியான பக்கங்களை உருவாக்கி ஒரு கட்சியை சேர்ந்தவர்கள் மற்றொரு கட்சியை விமர்சிப்பது வழக்கமான ஒன்றாக மாறியுள்ளது.
ஆனால், ஒரு குறிப்பிட்ட கட்சியை சேர்ந்த பலர், திட்டமிட்டு பல ஊடகங்களின் பெயரிலேயே போலியான பக்கங்களை உருவாக்கி, ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகங்களுக்கு எதிராக இதுபோல் கீழ்த்தரமான தாக்குதலை நடத்துவது தமிழகம் இதுவரை கண்டிராத மிகவும் மோசமான மற்றும் அபாயகரமான நடவடிக்கையாகும். ஊடகங்கள் மீதும், ஊடகவியலாளர்கள் மீதும் தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்தவர்கள் நடத்தியுள்ள இந்த இணையவழித்தாக்குதல், ஊடகங்களையும், ஊடகவியலாளர்களையும் வெளிப்படையாக மிரட்டுவதற்குச் சமமாகும். இது அப்பட்டமான கருத்துச் சுதந்திர ஒடுக்குமுறை மற்றும் மனித உரிமை மீறலுமாகும்.
மேலும், உண்மைக்குப்புறம்பான இதுபோன்ற செய்திகளை வெளியிடுவது தமிழக மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தி அமைதியை சீர்குலைத்து சட்டம் ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தும் நடவடிக்கையாகும். ஆகவே, இந்த கீழ்த்தரமான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள தமிழக வெற்றி கழகத்தை சேர்ந்தவர்களை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது.
ஊடகங்களையும், ஊடகவியலாளர்களையும் மிரட்டும் வகையிலும், திட்டமிட்டு பொதுவெளியில் அவமானப்படுத்த வேண்டும் என்ற குற்ற நோக்கத்துடனும் செயல்பட்டுள்ள தமிழக வெற்றிக் கழகத்தினர் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்துகிறது. இதுபோன்ற கீழ்த்தரமான நடவடிக்கையில் ஈடுபட்ட தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்தவர்கள் மீது அக்கட்சியின் தலைவர் திரு.விஜய் அவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்துகிறது.
இதையும் படிங்க: டெல்லி போய் அமித் ஷா காலை...எடப்பாடி பழனிசாமியை விளாசித் தள்ளிய நாஞ்சில் சம்பத்...!