ராகுல்-கிரண் ரிஜிஜு அவசர சந்திப்பு... முக்கிய மசோதாக்களில் உடன்பாடு எட்டப்படாததால் மீண்டும் முடங்கும் நாடாளுமன்றம்!
பார்லி., மழைக்கால கூட்டத்தொடர், கடந்த 20ல் தொடங்கியது. வரும் 13 வரை நடக்கவுள்ள நிலையில், எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால், லோக்சபா மற்றும் ராஜ்யசபா முடக்கப்பட்டு வருகின்றன.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடர்ந்து அமளியில் நடைபெற்று வரும் நிலையில், முக்கிய மசோதாக்களை நிறைவேற்றுவது தொடர்பாக மத்திய அரசும், காங்கிரஸும் இடையே நடந்த அவசர ஆலோசனை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த மாதம் 20-ஆம் தேதி தொடங்கிய மழைக்கால கூட்டத்தொடரில், நீட் விவகாரம், ராமர் கோவில் நன்கொடை தொடர்பான குற்றச்சாட்டுகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதன் காரணமாக மக்களவை மற்றும் மாநிலங்களவையின் நடவடிக்கைகள் பல நாட்களாக பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த சூழலில், மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்துடன் தொடர்புடைய தொகுதி மறுவரையறை மசோதா மற்றும் வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை திருத்த மசோதா உள்ளிட்ட முக்கிய சட்டங்களை நிறைவேற்ற எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பை பெற மத்திய அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது.
இதையும் படிங்க: டெல்லியில் சசி தரூரின் ‘மாம்பழ விருந்து’... ராகுல் ஏன் வரவில்லை? காங்கிரஸில் மீண்டும் பரபரப்பு!
சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற சந்திப்பில், இந்த மசோதாக்களை விவாதித்து நிறைவேற்ற காங்கிரஸ் ஆதரவு வழங்க வேண்டும் என்று கிரண் ரிஜிஜு கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு பதிலளித்த ராகுல் காந்தி, காங்கிரஸின் நிலைப்பாடு முறையாக அறிவிக்கப்படும் என்றும், தங்கள் தரப்பின் கவலைகள் தீர்க்கப்படாத வரை இந்த மசோதாக்களுக்கு ஆதரவு வழங்க முடியாது என்றும் தெரிவித்ததாக தகவல்கள் கூறுகின்றன.
மேலும், ராமர் கோவில் நன்கொடை தொடர்பான சர்ச்சை மற்றும் மாணவர்கள் மீது போலீசார் நடத்தியதாக கூறப்படும் தடியடி சம்பவம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்றத்தில் நேரடியாக விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் ராகுல் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
இந்த பேச்சுவார்த்தையில் இரு தரப்புக்கும் இடையே ஒருமித்த கருத்து உருவாகாததால், நாடாளுமன்றத்தில் மீண்டும் முடக்கம் நீடிக்கும் சூழல் உருவாகியுள்ளது. இதற்கிடையில், தொகுதி மறுவரையறை மசோதாவை தற்போதைய கூட்டத்தொடரில் நிறைவேற்ற முடியாவிட்டால், ஆகஸ்ட் 16 முதல் 18 வரை சிறப்பு கூட்டத்தொடரை கூட்ட மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனிடையே, வங்கியாளர்களின் கணக்குப் புத்தக சான்றுகள் தொடர்பான புதிய மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. அதேபோல், உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை உயர்த்தும் மசோதாவும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், எதிர்க்கட்சிகளின் தொடர் போராட்டத்தால் நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றன.
இதையும் படிங்க: சென்னை வந்தடைந்தார் ராகுல்காந்தி! காங்., நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு! மாமல்லபுரத்தில் இன்று பேசப் போவது என்ன?