3 தேதிகள் குறித்துக் கொடுத்த ராகுல்காந்தி!! அத்தனையும் வேஸ்ட்! காங்., மாநாடு தள்ளிப்போகும் காரணம்?!
காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையில், காங்கிரஸ் -எம்.பி., ராகுல் பங்கேற்கும் தேர்தல் பிரசார மாநாட்டுக்கு அனுமதி கிடைக்காததால் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், காங்கிரஸ் கட்சி தீவிர பிரசாரத்துக்கு தயாராகி வருகிறது. கிராம கமிட்டிகளில் 2 லட்சம் உறுப்பினர்களை சேர்த்து ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள காங்கிரஸ், மார்ச் 5-ம் தேதி காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையில் பெரும் மாநாடு நடத்த திட்டமிட்டது. இம்மாநாட்டில் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளதால், கட்சியினரிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.
ராகுல் காந்திக்கு மார்ச் 3, 5 தேதிகளில் ஏதேனும் ஒரு நாளில் வர முடியும் என ஒப்புதல் அளித்திருந்தார். ஆனால் மார்ச் 3-ம் தேதி தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்தம் நடைபெறுவதால், மார்ச் 5-ம் தேதி மாநாட்டை நடத்த முடிவு செய்யப்பட்டது. படப்பை பகுதியில் மைதானமும் தேர்வு செய்யப்பட்டது.
ஆனால் போலீசாரிடம் அனுமதி கோரியபோது, நிலையான செயல்பாட்டு விதிகளின் கீழ் 5,000 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்க முடியும் என்றும், அதற்கு மேல் தொண்டர்கள் கூடுவதாக இருந்தால் 15 நாட்களுக்கு முன்பே விண்ணப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. மார்ச் 5-க்கு இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில் போதிய அவகாசம் இல்லாததால், மாநாடு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நான் சொல்றபடி செய்யுங்க! திமுக கூட்டணி வேணும்னு கேளுங்க!! மாவட்ட தலைவர்களுக்கு செல்வப்பெருந்தகை சைலண்ட் ஆர்டர்!
இதற்கிடையே, தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்போ அல்லது பின்னரோ மாநாடு நடத்தலாம் என்பது குறித்து மாவட்ட தலைவர்களுடன் வீடியோ கான்பரன்ஸ் கூட்டம் நடைபெற்றது. அதில் தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரீஷ் ஷோடங்கர், தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் செல்வப்பெருந்தகை கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார் – “திமுக கூட்டணிக்கு எதிராக பொதுவெளியில் யாராவது கருத்து தெரிவித்தால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தி பங்கேற்கும் மாநாடு தள்ளிவைக்கப்பட்டது காங்கிரஸ் தொண்டர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், தேர்தல் அறிவிப்பு வெளியான பிறகு மீண்டும் பெரிய அளவில் மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் காங்கிரஸ் – திமுக கூட்டணி வலுவாக செயல்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இத்தகைய நிகழ்ச்சிகள் கட்சியின் தேர்தல் உத்தியில் முக்கிய பங்கு வகிக்கும்.
இதையும் படிங்க: தோல்வி பயத்துல என்னலாம் பண்ணுறாங்க பாருங்க!! அஞ்சி ஆயிரம்! தேர்தல் நேரத்து பணம் - திமுகவின் Patchwork-ஐ விளாசும் இபிஎஸ்!