திருமணம் செய்ய விரும்பிய பாக்., பெண்!! வரதட்சணையாக வாஜ்பாய் கேட்டது இதைத்தான்! ராஜ்நாத்சிங் தகவல்!
“தன்னை திருமணம் செய்ய விரும்பிய பாகிஸ்தான் பெண்ணிடம், மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய், அந்நாட்டையே வரதட்சணையாக கேட்டார்,” என, நம் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்து உள்ளார்.
லக்னோ: மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் 101வது பிறந்தநாள் நாடு முழுவதும் நேற்று (டிசம்பர் 25) கொண்டாடப்பட்டது. இதனையொட்டி உத்தரப் பிரதேசம் லக்னோவில் கவிதை வாசிப்பு நிகழ்ச்சி மற்றும் 'ராஷ்ட்ர பிரேரணா ஸ்தல்' திறப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வாஜ்பாயுடன் தொடர்புடைய சுவாரஸ்யமான நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டார்.
ராஜ்நாத் சிங் பேசியதாவது: வாஜ்பாய் சிறந்த நிர்வாகத் திறன் கொண்டவராக மட்டுமல்ல, நகைச்சுவை உணர்வு மிக்கவராகவும் இருந்தார். அவருடன் நெருக்கமாக பழகியவர்களே இதை நன்கு அறிவர். 1999ஆம் ஆண்டு பாகிஸ்தான் பயணத்தின் போது நடந்த ஒரு சம்பவத்தை குறிப்பிட்ட ராஜ்நாத் சிங், “அப்போது வாஜ்பாயின் பேச்சால் ஈர்க்கப்பட்ட ஒரு பாகிஸ்தான் பெண் செய்தியாளர், அவரை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகக் கூறினார்.
ஆனால் வரதட்சணையாக காஷ்மீரை தர வேண்டும் என்று நிபந்தனை விதித்தார். அதற்கு சிரித்துக்கொண்டே வாஜ்பாய், 'நான் உங்களை திருமணம் செய்து கொள்ள தயார். ஆனால் வரதட்சணையாக பாகிஸ்தான் நாடு முழுவதையும் தர வேண்டும். சம்மதமா?' என்று கேட்டார்” என்று கூறினார்.
இதையும் படிங்க: 101-ஆவது பிறந்தநாள்!! அடல் பிகாரி வாஜ்பாய் நினைவிடத்தில் மோடி, முர்மு மரியாதை!
இந்த பதிலில் வாஜ்பாயின் நகைச்சுவை உணர்வு மட்டுமல்ல, காஷ்மீர் இந்தியாவின் பிரிக்க முடியாத பகுதி என்ற அவரது உறுதியான நிலைப்பாடும் வெளிப்பட்டதாக ராஜ்நாத் சிங் தெரிவித்தார். 1999ஆம் ஆண்டு போக்ரான் அணு சோதனைக்குப் பிறகு இந்தியா-பாகிஸ்தான் உறவில் ஏற்பட்ட விரிசலை சரிசெய்யும் வகையில் லாகூர் பேருந்து பயணம் மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது. அப்போது டெல்லியில் இருந்து லாகூருக்கு பேருந்தில் சென்ற வாஜ்பாய், இரு நாடுகளுக்கும் இடையே அமைதியை ஏற்படுத்த முயன்றார்.
வாஜ்பாய் அரசியல் எதிரிகளை விமர்சிக்கும் போதும் கண்ணியத்தை கடைப்பிடித்தவர் என்றும், எல்லை மீறி பேசியதில்லை என்றும் ராஜ்நாத் சிங் புகழாரம் சூட்டினார். வாஜ்பாயின் இத்தகைய குணநலன்கள் இன்றும் தலைவர்களுக்கு முன்மாதிரியாக உள்ளதாக அவர் கூறினார்.
இதையும் படிங்க: ரூ.230 கோடியில் தேசிய நினைவிடம்!! தாமரை வடியில் அதிநவீன அருங்காட்சியகம்! இன்று மோடி திறந்து வைப்பு!