×
 

சபரிமலை தங்கம் திருட்டு! காங்., - கம்யூ மாறி மாறி புகார்! கேரள அரசியலில் விஸ்வரூபம் எடுக்கும் விவகாரம்!

சபரிமலை கோயில் தங்கம் திருட்டு வழக்கு தொடர்பாக, முக்கிய விஐபிக்கள் பலரிடமும் விசாரணை நடந்து வரும் நிலையில், கேரள அரசியலில் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கத் திருட்டு வழக்கு கேரள அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. முக்கிய விஐபிக்கள் பலரிடம் விசாரணை நடந்து வரும் நிலையில், ஆளும் கம்யூனிஸ்ட் அரசு, காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகள் இடையே கடும் மோதல் வெடித்துள்ளது.

2019-ல் சபரிமலை கோயில் புனரமைப்பு பணிகள் நடந்தபோது, துபாவபாரகர் சிலைகளுக்கு தங்க முலாம் பூசும் பணியில் 4.5 கிலோ தங்கம் திருட்டுப் போனதாக புகார் எழுந்தது. கோயில் கதவுகளுக்கு பயன்படுத்திய தங்கத்திலும் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு வந்தது. 

கேரள உயர் நீதிமன்றம் நியமித்த சிறப்பு கமிஷனர் அறிக்கையில் முறைகேடு உறுதியானது. இதையடுத்து உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து, சிறப்பு விசாரணைக் குழு (SIT) அமைத்து விசாரணையை தீவிரப்படுத்தியது.

இதையும் படிங்க: ஐயப்பன் தங்கத்தை வீட்ல வச்சு பூஜை பண்ணா செல்வம் கொட்டும்! விசாரணையில் உளறிக் கொட்டிய ஜெயராம்!

இதுவரை திருவிதாங்கூர் தேவசம் போர்டு முன்னாள் தலைவர் உட்பட 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசுக்கு இதில் பெரும் பங்கு இருப்பதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது.

கேரள சட்டசபையில் நேற்று இந்த விவகாரம் பெரும் அமளியை ஏற்படுத்தியது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசியதாவது: “ஐயப்பன் கோயில் தங்கத் திருட்டு வழக்கில் முதல்வர் அலுவலகத்தின் தலையீடு அதிகம் உள்ளது. கைதான சிலர் ஜாமினில் வெளியே வந்துவிட்டனர்.

முக்கிய குற்றவாளி உன்னி கிருஷ்ணனும் விரைவில் வெளியே வருவார். குற்றவாளிகளை காப்பாற்ற கம்யூனிஸ்ட் அரசு செயல்படுகிறது. SIT விசாரணை தோல்வியடைவதற்கு முதல்வர் அலுவலக அழுத்தமே காரணம்” என்று குற்றஞ்சாட்டினர்.

இதற்கு ஆளுங்கட்சி எம்எல்ஏக்கள் கடும் கூச்சலிட்டு அமளியில் ஈடுபட்டனர். காங்கிரஸ் எம்எல்ஏக்களை பேச விடாமல் தடுத்தனர். “காங்கிரஸார் திட்டமிட்டு பழி போடுகின்றனர்” என்று கூறி எதிர்ப்பு தெரிவித்தனர். சபையில் கடும் கூச்சலும் கோஷமும் நிலவியது.

இதற்கிடையே பாஜகவும் களமிறங்கியுள்ளது. சபரிமலை தங்கத் திருட்டில் ஆளும் கம்யூனிஸ்ட் மற்றும் எதிர்க்கட்சி காங்கிரஸ் இரண்டுக்கும் தொடர்பு இருப்பதாக பாஜக குற்றம்சாட்டியது. இதை கண்டித்து பாஜக இளைஞர் அணியினர் நேற்று சட்டசபை நோக்கி பேரணியாக சென்றனர். போலீசார் தடுத்து நிறுத்தினர். போராட்டம் தீவிரமடைந்ததால் தண்ணீர் பீச்சி அடித்தும், கண்ணீர் புகை குண்டுகள் வீசியும் போலீசார் கலைத்தனர்.

முக்கிய விஐபிக்கள் பலரிடம் SIT விசாரணை நடந்து வரும் நிலையில், கேரள அரசியல் விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஐயப்பன் கோயில் தங்கத் திருட்டு வழக்கு தேர்தல் நெருங்கும் நிலையில் பெரும் அரசியல் ஆயுதமாக மாறியுள்ளது. 

இதையும் படிங்க: சபரிமலை தங்கம் திருட்டு!! விசாரணை வலையில் ஜெயராம்!! வாக்குமூலத்தில் வெளியான திடுக்கிடும் தகவல்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share