×
 

முதல்வர் விஜய்க்கு நன்றி! அவரை நேரில் சந்திக்க வேண்டும்! யூடியூபர் சவுக்கு சங்கர் விருப்பம்!

முதலமைச்சர் விஜய் நேரம் கொடுத்தால் அவரை சந்திக்க தயாராக இருக்கிறேன் என யூடியூபர் சவுக்கு சங்கர் விருப்பம் தெரிவித்தார்.

சென்னை: புழல் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர், முதலமைச்சர் விஜய்க்கு நன்றி தெரிவித்ததோடு, அவருக்கு நேரம் கிடைத்தால் சந்திக்க தயாராக இருப்பதாக அறிவித்துள்ளார்.

முந்தைய தி.மு.க. அரசின் போது அவதூறு பரப்பிய வழக்குகளில் கைது செய்யப்பட்டு, குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சவுக்கு சங்கர், தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு விடுவிக்கப்பட்டார். சிறை வாசலில் அவரை ஆதரவாளர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.

சிறை வாசலில் செய்தியாளர்களிடம் பேசிய சவுக்கு சங்கர், “மக்கள் கவனித்ததால் மு.க.ஸ்டாலின் தோல்வியடைந்தார். தி.மு.க. ஆட்சியை தூக்கி எறிந்து, கொளத்தூரிலேயே ஸ்டாலினை மண்ணைக் கவ்வ வைத்ததன் மூலம் எனது மூன்றாண்டு காலப் பணி வீணாகவில்லை” எனக் கூறினார்.

இதையும் படிங்க: சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்துக்கு எதிரான ஆட்கொணர்வு மனு!! நாளை உயர்நீதிமன்றத்தில் விசாரணை!

முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. கூட்டணி அரசு ஐந்தாண்டு காலம் முழுமையாக நீடித்து, மக்களுக்கு பல நலத்திட்டங்களை வழங்க வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்தார். குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டதில் முதலமைச்சர் விஜய்யின் நேரடி தலையீடு இருந்ததாகவும், அதனால் வெறும் இரண்டு நாட்களில் விடுதலை ஆனதாகவும் அவர் பாராட்டினார்.

“முதலமைச்சர் விஜய் நேரம் கொடுத்தால் அவரை சந்திக்க தயாராக இருக்கிறேன்” என சவுக்கு சங்கர் தெளிவாகக் கூறினார். தி.மு.க. ஆட்சியில் ஊடகவியலாளர்களை சிறையில் அடைத்த கொடுங்கோல் முறையை கடுமையாக விமர்சித்த அவர், தற்போதைய கூட்டணி ஆட்சியில் ஜனநாயகம் மேலும் வலுப்பெறும் என நம்பிக்கை தெரிவித்தார்.

“சாதி, மதம் கடந்து த.வெ.க. ஆட்சியை பிடித்துள்ளது. பட்டியல் இனத்தைச் சேர்ந்த 8 பேருக்கு அமைச்சரவையில் இடம் கொடுத்ததை பாராட்டுகிறேன். முதலமைச்சர் ஒவ்வொன்றையும் கவனித்துக் கொண்டிருக்கிறார்” என அவர் புகழ்ந்தார்.

தி.மு.க. தலைவர் ஸ்டாலின் 5 மாதங்களில் ஆட்சிக்கு வருவார் எனக் கூறியதற்கு, “கடந்த தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம் என சொன்னவருக்கு வயதாகிவிட்டது, விட்டுவிடுங்கள்” என சவுக்கு சங்கர் பதிலளித்தார்.

சவுக்கு சங்கரின் இந்தப் பேட்டி தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதிய அரசுக்கு ஆதரவாக அவர் வெளிப்படுத்தியுள்ள நிலைப்பாடு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

இதையும் படிங்க: சிங்கப்பெண் சிறப்பு படைக்கு பிரத்யேக சீருடை!! முதல் கையெழுத்தில் மாஸ் காட்டிய முதல்வர் விஜய்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share