திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக்கும் சதி! திமுக அரசின் கையாலாகாத்தனம்!! சீமான் அதிரடி!
பல நூறு ஆண்டுகளாக இருக்கக்கூடிய இந்த வழிபாட்டுத்தலங்களால் எந்தச் சமயத்தவரிடையேயும் எந்த மோதலும் இதுவரை நிகழ்ந்ததில்லை என சீமான் கூறினார்.
சென்னை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றும் விவகாரத்தை வைத்து மதுரை மண்ணை இன்னொரு அயோத்தியாக மாற்றும் சூழ்ச்சியில் இந்துத்துவ அமைப்புகள் ஈடுபட்டுள்ளதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையான அறிக்கை வெளியிட்டுள்ளார்.
“நீதித்துறையே இந்த மதவாதிகளின் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு துணைபோகிறதா?” என்று கேள்வி எழுப்பிய சீமான், “மதம் கடந்த ஒற்றுமையை போற்றி வந்த மதுரை மண்ணில் மத மோதலை உருவாக்கும் இந்துத்துவ அரசியலை தொடக்கத்திலேயே முறியடிக்க வேண்டும்” என்று தமிழர் இன உணர்வோடு ஓர்மைப்படுமாறு மக்களை அழைப்பு விடுத்துள்ளார். அதேநேரம், திமுக அரசையும் “கையாலாகாத்தனம்” என்று சாடியுள்ளார்.
சீமான் வெளியிட்ட அறிக்கையில், “பல நூறு ஆண்டுகளாக மலை உச்சியின் இடது புறத்தில் சிவன் கோயிலும், வலது புறத்தில் சுல்தான் சிக்கந்தர் அவுலியா தர்காவும் அமைந்து, ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகளாக மதநல்லிணக்கத்தோடு வாழ்ந்து வரும் மதுரை மக்களின் அமைதியை சீர்குலைக்கும் முயற்சியே இது” என்று குற்றம் சாட்டினார்.
இதையும் படிங்க: ரஷ்ய சுற்றுலா பயணிகளுக்கு குட் நியூஸ்!! புடின் முன்னிலையில் மோடி அறிவித்த அசத்தல் திட்டம்!
“இராமஜென்ம பூமி என்று சொல்லி பாபர் மசூதியை இடித்தவர்கள், இப்போது திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக்க நினைக்கிறார்கள். ‘சிக்கந்தர் மலை’ என்று எந்த இஸ்லாமியரும் சொல்லாத பெயரை புகுத்தி, ‘மலையை ஆக்கிரமிக்கிறார்கள்’ என்று அவதூறு பரப்பி மத உணர்வைத் தூண்டுவது ஆபத்தான அரசியல்” என்று சீமான் கொித்தார்.
அவர் மேலும் கூறுகையில், “குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்று சொல்லும் இந்துத்துவர்கள், தமிழக மலைகள் எல்லாம் கனிமவளமாக அள்ளிச் செல்லப்படும்போது எங்கே போனார்கள்? முருகன் கோயில்களுக்கு குடமுழுக்கு செய்ய வழியில்லாமல் இருக்கும்போது எங்கே போனார்கள்? இப்போது வாக்கு வேட்டைக்காகவா முருகன் மீது பற்று?” என்று கேள்வி எழுப்பினார். சிக்கந்தர் தர்காவில் ஆடு-கோழி பலியிடும் முறை நூறு ஆண்டுகளாக இருந்தாலும், அதை சிக்கலாக்கி அரசியல் ஆதாயம் தேடுவதாகவும் விமர்சித்தார்.
திமுக அரசையும் சீமான் விட்டுவைக்கவில்லை. “2024-ல் சிக்கந்தர் தர்காவில் நேர்த்திக்கடன் செலுத்த வந்த அபுதாஹிரை போலீசார் தடுத்தபோது, அரசு நடவடிக்கை எடுத்து மக்களுக்கு விளக்கம் அளித்திருந்தால் இன்றைக்கு இந்தப் பிரச்சனை வந்திருக்காது. தும்பை விட்டு வாலைப் பிடிக்கிறது திமுக. ‘இந்து விரோதி’ என்று மதவாதிகள் பரப்பும் அரசியலுக்கு பயந்து சமரசம் செய்துகொள்ளும் கையாலாகாத்தனமே இந்த நிலைக்கு கொண்டு வந்திருக்கிறது” என்று சீமான் கடுமையாக சாடினார்.
சீமானின் இந்த அறிக்கை, திருப்பரங்குன்றம் விவகாரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையான தொனியில் அமைந்துள்ளது. “தமிழர் எனும் இன உணர்வோடு ஓர்மைப்படுவோம்” என்று மக்களை அழைப்பு விடுத்துள்ள சீமான், மதுரை மண்ணின் நல்லிணக்கத்தை காப்பாற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இந்த அறிக்கை, 2026 தேர்தலுக்கு முன் மத அரசியலை மையப்படுத்திய போட்டியை மேலும் சூடேற்றும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். சீமானின் இந்த நிலைப்பாடு, தமிழகத்தில் மதநல்லிணக்கம் vs மதவாத அரசியல் என்ற புதிய விவாதத்தை தொடங்கியுள்ளது.
இதையும் படிங்க: இதுலாம் முதல்வர் பண்ணுற காரியமா? இவ்ளோ தப்பு பண்ணிட்டு சுப்ரீம் கோர்ட் எதுக்கு போறீங்க! அண்ணாமலை விளாசல்!