சேகர் பாபு VS ரமேஷ்... நேருக்கு நேர் வார்த்தை போர்... சட்டப்பேரவையில் அனல் பறக்க மாறி, மாறி அட்டாக்...!
இன்றைய அறநிலையத்துறை மானியக்கோரிக்கையின் போது முன்னாள் அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, இந்நாள் அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் இடையே காரசார விவாதம் நடைபெற்றது.
இன்றைய அறநிலையத்துறை மானியக்கோரிக்கையின் போது முன்னாள் அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, இந்நாள் அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் இடையே காரசார விவாதம் நடைபெற்றது.
திமுக எம்.எல்.ஏவும், முன்னாள் அறநிலையத்துறை அமைச்சருமான சேகர் பாபு பேசியதாவது: 10 கல்லூரிகளில் இரண்டு கல்லூரிகளின் கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டுவிட்டன. மீதம் திருச்செந்தூர் கோயில் சார்பிலும், அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் சார்பிலும் கட்டப்பட வேண்டிய கல்லூரிக் கட்டிடங்கள் கட்டப்படுமா?. அப்போது அறிவிக்கப்பட்ட அந்த ஆறு கல்லூரிகள், கடையம், லால்குடி, வேலூர் போன்ற மாவட்டங்களில் அறிவிக்கப்பட்ட அந்த ஆறு கல்லூரிகளும் இந்த ஆட்சியில் கட்டப்படுமா?
அதோடு, நீதியரசர் தீர்ப்பிலே ஒன்றைக் குறிப்பிட்டிருக்கின்றார். அந்தந்த திருக்கோயிலின் சார்பில் நிதி இருந்தால் கல்லூரிகளைக் கட்டலாம். இல்லை என்கின்றபோது, நிச்சயமாக அரசு அதற்கு உதவி செய்ய முன்வர வேண்டும் என்று வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இது எங்கள் முதல்வர் கண்ட 10 கல்லூரிகளுடைய கனவு. அந்தக் கனவை இந்த ஆட்சி நிறைவேற்ற வேண்டும் என்று இந்த நேரத்தில் கேட்டுக்கொள்கிறேன்.
இதையும் படிங்க: எங்களுக்கு கார் வேண்டாம்..! "நிதி நெருக்கடி"..! சட்டப்பேரவையில் உதயநிதி திட்டவட்டம்.!!
தங்க முதலீட்டுத் திட்டம், திருக்கோயிலில் ஆன்மிக வளர்ச்சிக்கும் மக்களுடைய அடிப்படைத் தேவைகளுக்கும் எப்படியெல்லாம் வருமானத்தை ஈட்டினோம் என்பதற்கு ஒரே ஒரு உதாரணம். கேட்பாரற்று மூட்டை மூட்டையாகக் கட்டி வைக்கப்பட்டிருந்த தங்கங்கள், யாரும் கேட்பாரற்று கிடந்தன.
அந்தத் தங்கங்களை மூன்று நீதியரசர்கள் கொண்ட குழு அமைத்து, மூன்று மண்டலங்களாகப் பிரித்து, அந்தத் தங்கத்தினுடைய பலவகை பொன் இனங்கள் எந்தெந்த தெய்வத்திற்கு காணிக்கையாக வந்ததோ, அந்தத் தெய்வங்களுக்கு பயன்படுத்த முடியாத தங்கங்களை நீதியரசர்களை வைத்து முழுமையாக வீடியோ பதிவு செய்து, அந்தத் தங்கத்தைப் பிரித்து, பாரத ஸ்டேட் வங்கியின் வாயிலாக ஒன்றிய அரசுக்குச் சொந்தமான மும்பையில் இருக்கின்ற தங்க உருக்காலைக்கு அனுப்பப்பட்டது.
கொண்டு செல்லப்படும் தங்கத்தின் அளவு எவ்வளவு, உருக்கிய பிறகு கிடைக்கின்ற தங்கத்தின் அளவு எவ்வளவு என்பதற்கான சான்றிதழோடு, இதுவரையில் திருக்கோயிலுக்குச் சேர்த்த தங்கத்தின் அளவு 111 கிலோ. அந்தத் தங்கத்தின் மூலம் வருகின்ற ஆண்டு வருவாய் ரூ.20 கோடி.
இப்படி ஆட்சி அதிகாரத்தில் இருக்கின்றபொழுது இறைவனுக்குச் சொத்து சேர்த்து, அந்தச் சொத்தின் வாயிலாக இறைவனுக்குத் திருப்பணியைச் செய்த ஒரு அரசு உண்டு என்றால், அதுதான் திராவிட மாடல் அரசு; திராவிட ஆன்மிக மாடல் அரசு.
மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இந்த சபையில் பல நேரங்களில் "காணோம், காணோம்" என்ற வார்த்தையை நாம் கேள்விப்பட்டோம். நான் சொல்லிக்கொள்கிறேன். சூரியனை வானத்தில் காணலாம். சந்திரனை நட்சத்திரங்களுக்கு நடுவில் காணலாம். பக்த பிரகலாதன் சொன்னான், "ஆண்டவனை எங்கே காண்கிறீர்கள்?" என்றால், "தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார்" என்றான்.
அந்த வகையில், திராவிட மாடல் ஆட்சியில் ஆன்மிகத்தில் உருவாக்கப்பட்ட பக்தர்களுடைய நன்மைகள், அது ஒரு பசி போக்குகின்ற அன்னதானத் திட்டமாக இருந்தாலும் சரி, கட்டணம் இல்லாத இலவசத் திருமணமாக இருந்தாலும் சரி, அது விளக்குப் பூஜையாக இருந்தாலும் சரி, மருத்துவமனைகளாக இருந்தாலும் சரி, எங்கெல்லாம் லட்சக்கணக்கான மக்கள், பக்தர்கள் பயன்பட்டார்களோ, அங்கெல்லாம் எங்கள் உயிரினும் மேலான திராவிட மாடல் ஆட்சியுடைய நாயகனைக் காணலாம், காணலாம், காணலாம் என்று பதிவு செய்கிறேன் என்றார்.
அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் பேசியதாவது: 3,000 கோயில்களுக்கு குடமுழுக்கு செய்யப்படும் என்ற அறிவிப்பு இந்த ஆட்சியின் பின்னடைவு என்று மாண்புமிகு உறுப்பினர் அவர்கள் குறிப்பிட்டுச் சொல்லியிருந்தார்.
ஒரு விஷயத்தை இங்கே தெளிவுபடுத்த விரும்புகிறேன். கடந்த ஐந்து ஆண்டுகளில் 2,494 திருக்கோயில்களுக்கு திருப்பணிகளை பொது நல நிதியில் செய்வோம் என்று அதற்கான திட்டங்களை எல்லாம் தீட்டிவிட்டு, இன்றைக்கு நீங்கள் பார்த்தீர்கள் என்றால், அந்த மொத்த மதிப்பீட்டில் இன்னும் ரூ.392 கோடி நிலுவையில் இருக்கிறது. திருப்பிச் செலுத்தாமல் நிலுவையில் இருக்கிறது.
அதில் முழுமையாகத் திருப்பணிகள் முடிந்த கோயில்கள் இருக்கின்றன. பாதியில் திருப்பணிகள் நிற்கக்கூடிய கோயில்கள் இருக்கின்றன. இன்னும் தொடங்கப்படாத பணிகள் இருக்கின்றன. ஏறத்தாழ ரூ.400 கோடி அளவுக்கு திருப்பிச் செலுத்த வேண்டிய தொகை நிலுவையில் இருக்கிறது.
அதுமட்டுமில்லாமல், கடந்த ஐந்து ஆண்டுகளுக்கான சட்டமன்ற அறிவிப்புகளை எடுத்துப் பார்த்தீர்கள் என்றால், 2021-22 முதல் 2025-26 வரைக்கும் மொத்தம் 844 சட்டமன்ற அறிவிப்புகளை மாண்புமிகு உறுப்பினர் அவர்கள் முன்னாள் அமைச்சராக இருக்கும்போது வழங்கியிருந்தார்.
அந்த அறிவிப்புகளைப் பொறுத்தவரைக்கும், இன்றைக்கு மட்டும் பார்த்தீர்கள் என்றால், 79 அறிவிப்புகள், அந்த அறிவிப்புகளில் 79 அறிவிப்புகள் சுமார் ரூ.418 கோடி நிதி இல்லாமல் தொடங்கப்படாத நிலையில் இருக்கின்றன.
வெறும் சட்டமன்ற அறிவிப்புக்காக எண்ணிக்கையைக் கூட்டிக் கூட்டி அறிவித்துவிட்டு, அதையெல்லாம் நாங்கள் ரத்து செய்யக்கூடிய இடத்துக்குத் தள்ளிவிடாமல், என்ன செய்ய முடியுமோ, நிதிநிலையைக் கருத்தில் கொண்டு அதைத் தெளிவாக அறிவித்திருக்கிறோம்.
3,000 என்பதை முதலில் நாங்கள் முடித்துவிட்டு, அதற்குப் பிறகு 4,000 என்ன, 5,000 என்ன, முடிந்தால் 6,000 கூட நாங்கள் செய்வோம். ஆனால், வாக்குறுதியில் ஒன்றைக் கொடுத்துவிட்டு, அடுத்து அதை ரத்து செய்யக்கூடிய சூழலுக்கு நிச்சயமாக எங்களுடைய ஆட்சி இருக்காது என்றார்.
இதையும் படிங்க: மோடி அமைச்சரவையில் திமுகவுக்கு இடம்? வடமாநில ஊடக தகவலால் தமிழக அரசியலில் திடீர் திருப்பம்!