×
 

அன்புமணியின் ஊழல் வழக்கை சிபிஐ விசாரிக்கணும்!! ராமதாஸ் தீர்மானம்! பாமகவில் முற்றும் மோதல்!

நிலுவையில் உள்ள அன்புமணி மீதான ஊழல் வழக்கோடு, கட்சியின் சின்னம், தலைவர் சம்மந்தமான விஷயத்தில் அன்புமணி நடவடிக்கைகளையும் மோசடி வேலைகளையும் சேர்த்து சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையிலான கூட்டத்தில் திர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திண்டிவனம்: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் தீவிரமடைந்துள்ளது.

இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸ் தலைமையில் பாமக நிர்வாகக் குழு கூட்டம் டிசம்பர் 17 அன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் ராமதாஸ் உள்ளிட்ட 22 நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

கூட்டத்துக்கு முன்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், “என் பெயரை அன்புமணி பயன்படுத்தக்கூடாது. அவர் அன்புமணி ராமதாஸ் அல்ல, அன்புமணி மட்டுமே. பாமக கட்சிப் பெயரையும் பயன்படுத்தி தவறு செய்கிறார்கள். அன்புமணிக்கு கட்சியே இல்லை, உறுப்பினரும் இல்லை. பாமகவை கைப்பற்ற அவர் பம்மாத்து வேலை செய்கிறார். இதை வன்மையாக கண்டிக்கிறேன்” என்று கூறினார்.

இதையும் படிங்க: அன்புமணிக்கு எந்த உரிமையும் இல்ல! வேணும்னா தனிக்கட்சி துவங்கட்டும்! ராமதாஸ் தடாலடி!

மேலும், “அன்புமணி பாமக தலைவர் இல்லை என்பது வழக்கில் தெளிவாகியுள்ளது. 46 ஆண்டுகளாக கஷ்டப்பட்டு வியர்வை சிந்தி பாமகவை ஆலமரம் போல் வளர்த்தேன். 96 ஆயிரம் கிராமங்களுக்குச் சென்று கட்சியை வளர்த்தேன். ஆலமரத்தின் கிளை நுனியை வெட்ட நினைப்பவர்கள் கீழே விழுந்துவிடுவார்கள். நான் வளர்த்த பூந்தோட்டத்தில் சில குரங்குகள் செடிகளை நாசம் செய்கின்றன” என்று கடுமையாக விமர்சித்தார்.

இதைத் தொடர்ந்து நடைபெற்ற நிர்வாகக் குழு கூட்டத்தில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அன்புமணி தரப்பினர் ஒட்டுக் கேட்பு கருவி வைத்து தந்தைக்கு ஆப்பு வைத்ததாகக் கூறப்படும் சம்பவத்தில் போலீசார் நடவடிக்கை எடுக்காததை கண்டனம் செய்தது. அன்புமணி தேர்தல் ஆணையத்தில் பொய்யான ஆவணங்கள் கொடுத்து ஏமாற்றியதாகக் கூறி, அவர் மீது விசாரணை நடத்த வலியுறுத்தியது. நிலுவையில் உள்ள ஊழல் வழக்குகளுடன், கட்சி சின்னம் மற்றும் தலைவர் பதவி தொடர்பான மோசடிகளையும் சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று கோரியது.

மேலும், வரும் சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி தொடர்பான முடிவுகள் எடுக்கவும், பேச்சுவார்த்தை நடத்தவும், வியூகங்கள் வகுக்கவும் ராமதாஸுக்கு முழு அதிகாரம் வழங்குவது உள்ளிட்ட தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

இம்மாத இறுதியில் சேலத்தில் பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ள நிலையில், இன்றைய நிர்வாகக் குழு கூட்டம் அதற்கு முன்னோட்டமாக அமைந்தது. பாமகவின் உட்கட்சி பிரச்சினை தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது.

இதையும் படிங்க: அன்புமணி தலைவர் கிடையாது!! டெல்லி ஐகோர்ட்டே சொல்லியாச்சு!! பாமக நிறுவனர் ராமதாஸ் பரபரப்பு அறிக்கை!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share