21 நாட்கள் உண்ணாவிரதம்! மோசமானது உடல்நிலை!! சோனம் வாங்சுக் வலுக்கட்டாயமாக மருத்துவமனையில் அனுமதி!
சோனம் வாங்சுக் உடல்நிலை மோசமானதால் அவர் காவல் துறையினரால் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டார். இதையடுத்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக டெல்லியில் நடைபெற்று வரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்றுள்ள சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் உடல்நிலை மோசமடைந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 21 நாட்களாக தொடர்ந்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக காவல்துறையினர் அவரை பாதுகாப்புடன் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம் போராட்டக்காரர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியின் ஜந்தர் மந்தரில் நடைபெற்று வரும் இந்த போராட்டத்தில், நீட் தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது. போராட்டக்குழுவினர் வரும் 20-ந்தேதி நாடாளுமன்றம் நோக்கி அமைதியான பேரணி நடத்தி, தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுவை சமர்ப்பிக்கத் திட்டமிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: தமிழகத்தின் நீட் டாப்பர்! தேசிய அளவில் 12வது இடம்... யார் இந்த வெங்கடபதி வேலாயுதம்?
மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுவதற்கு முன் தனது ஆதரவாளர்களிடம் பேசிய சோனம் வாங்சுக், உடலால் மிகவும் பலவீனமாக இருந்தாலும் மன உறுதி குறையவில்லை என்று தெரிவித்தார்.
"20-ந்தேதி நடைபெறும் அமைதிப் பேரணியில் அதிகமானோர் கலந்து கொண்டு நமது கோரிக்கையை நாடாளுமன்றத்தில் வலியுறுத்த வேண்டும். அதற்காக நான் எந்த விலையும் கொடுத்து அந்த நாள் வரை உயிருடன் இருப்பேன்" என்று உணர்ச்சிபூர்வமாக கூறினார்.
மேலும், "நீங்கள் அந்த பேரணியில் பங்கேற்காமல் போனாலோ அல்லது அது வெற்றியடையாமல் போனாலோ, நான் பேயாகக் கூட திரும்பி வருவேன்" என்று நகைச்சுவையாக பேசியது அங்கிருந்தவர்களை சிரிக்க வைத்ததுடன், சமூக வலைதளங்களிலும் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
சோனம் வாங்சுக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஜந்தர் மந்தர் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ள நிலையில், போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அவரது உடல்நிலை குறித்து மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், அடுத்தகட்ட மருத்துவ அறிக்கைக்காக அவரது ஆதரவாளர்கள் காத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: பார்லி., மழைக்காலத் தொடர்! ஜூலை 19-ல் அனைத்துக் கட்சி கூட்டம்... மத்திய அரசு அழைப்பு!