தவெகவுடன் விரைவில் கூட்டணியா?... அன்புமணியின் அதிரடி முடிவு என்ன?... உண்மையை போட்டுடைத்த செளமியா...!!
‘மதுவில்லா தமிழகம்’ இயக்கம் குறித்துப் பேசிய அவர், இளம் தலைமுறையினரைக் குடிப்பழக்கத்திலிருந்து பாதுகாக்க மதுவிலக்கு அவசியம் என்றார்.
தவெக அமைச்சரவையில் இடம்பெறப்போவதாக வெளியாகும் தகவல்கள் வதந்தி என்றும் தற்போதைக்கு கூட்டணி தொடர்பாக எந்த முடிவும் இல்லை என திருச்செந்தூரில் சுவாமி தரிசனம் செய்ய பிறகு சௌமியா அன்புமணி பேட்டி.
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக பசுமை தாயகம் அமைப்பின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான சவுமியா அன்புமணி இன்று வருகை தந்தார்.
கோவிலுக்கு வருகை தந்த அவருக்கு பாமக சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து பேட்டரி கார் மூலம் கோவில் முன்பகுதிக்கு வந்த சவுமியா அன்புமணி, அங்கிருந்து கடற்கரைக்கு சென்று கடலில் கால் நனைத்து வழிபாடு மேற்கொண்டார்.
இதையும் படிங்க: மது இல்லாத் தமிழகம்! மகாத்மா காந்தி ஜெயந்தியில் சௌமியா அன்புமணி தொடங்கிய புதிய இயக்கம்!
இதையடுத்து கோவிலுக்குள் சென்ற அவர், சுப்பிரமணியசுவாமி, வள்ளி-தெய்வானை, சண்முகர், தட்சிணாமூர்த்தி, சத்ரு சம்ஹார மூர்த்தி உள்ளிட்ட சன்னதிகளில் சுவாமி தரிசனம் செய்தார். தரிசனம் முடித்துவிட்டு கோவிலில் இருந்து வெளியே வந்த சவுமியா அன்புமணி, செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது பேசிய அவர், திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்க வேண்டும் என்றும், ஆற்றைப் பாதுகாக்கும் வகையில் விழிப்புணர்வுப் பிரச்சாரப் பயணம் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றார்.
தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பது பல ஆண்டுகளாகத் தொடரும் பிரச்சினை என்று குறிப்பிட்டார். ஆறு, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளில் கழிவுநீரைக் கலப்பது சட்டப்படி குற்றம் என்றும், கழிவுநீர் சுத்திகரிப்பு மற்றும் குப்பை மேலாண்மையை முறையாகச் செயல்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
உலக வங்கி நிதியுதவியுடன் தாமிரபரணியைத் தூய்மைப்படுத்துவதற்குப் பதிலாக, நடைபாதை மற்றும் அலங்கார நிழற்குடைகள் அமைக்க ரூ.59 கோடியில் திட்டம் தயாரிக்கப்பட்டதாகவும், இதற்கு எதிராகத் தாமிரபரணி பாதுகாப்புச் சங்கத்தினர் நீதிமன்றத்தை அணுகியதாகவும் தெரிவித்தார்.
மேலும், தாமிரபரணி ஆற்றில் புதிய கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படாது என்ற திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது என்றும், ஏற்கெனவே உள்ள படித்துறைகள் மற்றும் பாரம்பரியக் கோயில்களைப் புனரமைத்தாலே போதுமானது என்றும் கூறினார்.
தொடர்ந்து, ‘மதுவில்லா தமிழகம்’ இயக்கம் குறித்துப் பேசிய அவர், இளம் தலைமுறையினரைக் குடிப்பழக்கத்திலிருந்து பாதுகாக்க மதுவிலக்கு அவசியம் என்றார். ஊடகங்கள், பொதுமக்கள், பெண்கள் மற்றும் இளைஞர்கள் இந்த இயக்கத்தில் இணைந்து குரல் கொடுக்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.
டாஸ்மாக் வருவாய்க்கு மாற்றாக ஊழலற்ற நிர்வாகம் மற்றும் கனிமவளங்களை முறையாக முறைப்படுத்துதல் உள்ளிட்ட வழிகளில் அரசின் வருவாயைப் பெருக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
அரசியல் தொடர்பான கேள்விகளுக்கு அளித்த பதிலில், இந்த இடைத்தேர்தலில் பாமக யாருக்கும் ஆதரவு அளிக்காது என்பதே கட்சியின் நிலைப்பாடு என்று சௌமியா அன்புமணி கூறினார். விவசாயக் கூட்டுறவுக் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் பாமக தொடர்ந்து வலியுறுத்தும் என்றார்.
ஊழலில் ஈடுபடும் அரசு அதிகாரிகளின் சொத்துகளைப் பறிமுதல் செய்ய வேண்டும் என்ற நீதிமன்றத்தின் உத்தரவு மகிழ்ச்சியளிப்பதாகக் குறிப்பிட்ட அவர், அமைச்சரவையில் இடம்பெறப்போவதாக வெளியாகும் தகவல்கள் வதந்தி என்றும் மறுத்தார். தற்போதைக்கு கூட்டணி தொடர்பாக எந்த முடிவும் இல்லை என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தவெக ஆட்சிக்கு தற்போது ஆபத்தில்லை! ஆனா 5 வருசம் நீடிக்குமா? சிபிஎம் பாலகிருஷ்ணன் விமர்சனம்!