EPS-க்கு புதிய தலைவலி? எடப்பாடி கூட்டத்தை புறக்கணித்த எஸ்.பி. வேலுமணி! அதிமுகவில் மீண்டும் உட்கட்சி பூகம்பம்?
எடப்பாடி பழனிசாமி தலைமையில் கோவை மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தை கோவை மாவட்ட நிர்வாகியும், தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினருமான SP வேலுமணி புறக்கணித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் கோவையில் நடைபெற்ற மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தை முன்னாள் அமைச்சர் மற்றும் தொண்டாமுத்தூர் தொகுதி எம்.எல்.ஏ. எஸ்.பி. வேலுமணி புறக்கணித்தது, கட்சிக்குள் மீண்டும் உட்கட்சி அரசியல் குறித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்ட நிர்வாகிகள் மற்றும் முக்கிய நிர்வாகிகளுடன் தேர்தலுக்குப் பிந்தைய கட்சி செயல்பாடுகள், அமைப்பு வலுப்படுத்தல் மற்றும் அடுத்தகட்ட அரசியல் பணிகள் குறித்து ஆலோசிக்க இந்தக் கூட்டம் நடத்தப்பட்டது. ஆனால், கோவை அரசியலில் முக்கிய தலைவராகக் கருதப்படும் எஸ்.பி. வேலுமணி இதில் பங்கேற்காதது அரசியல் வட்டாரங்களில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
கடந்த காலத்தில் அதிமுகவில் கோவை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர், அமைப்பு செயலாளர் மற்றும் தலைமை நிலைய செயலாளர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளை வகித்தவர் வேலுமணி. சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, கட்சியின் எதிர்காலம் மற்றும் நிர்வாக அமைப்பு தொடர்பாக அவர் தனித்த நிலைப்பாட்டில் செயல்பட்டதாக கூறப்பட்டது. அப்போது சில எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் தனி அணியாக செயல்பட்டதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியானது.
இதையும் படிங்க: எடப்பாடிக்கு எதிரான அதிருப்தி அணியின் அடுத்த மூவ்! அதிமுகவில் அரசியல் கணக்கு! பரபரப்பு தகவல்!
இதையடுத்து, கோவை மாவட்ட அமைப்பில் மாற்றம் செய்து, வேலுமணிக்கு பதிலாக செ.ம. வேலுசாமி மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டார். பின்னர் இரு தரப்பினரும் மீண்டும் இணைந்து செயல்படுவதாக அறிவிக்கப்பட்டாலும், வேலுமணியை ஆதரித்த நிர்வாகிகளுக்கு மாவட்ட செயலாளர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகள் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், வேலுமணிக்கு கட்சியின் துணை பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டது. ஆனால், தன்னை ஆதரித்த நிர்வாகிகளுக்கு உரிய பொறுப்புகள் வழங்கப்படாத சூழலில், அந்தப் பதவியை ஏற்றுக்கொள்வது சரியாக இருக்காது என்று தெரிவித்து, எடப்பாடி பழனிசாமிக்கு அவர் கடிதம் எழுதியதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், இன்று நடைபெற்ற கோவை மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் வேலுமணி பங்கேற்காதது மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது. இது சாதாரண நிகழ்வா அல்லது கட்சிக்குள் நிலவும் கருத்து வேறுபாட்டின் வெளிப்பாடா என்பது குறித்து பல்வேறு அரசியல் விவாதங்கள் எழுந்துள்ளன.
ஆனால், வேலுமணி கூட்டத்தில் பங்கேற்காததற்கான அதிகாரப்பூர்வ காரணம் இதுவரை வெளியிடப்படவில்லை. அதேபோல், அதிமுக தலைமையும் இந்த விவகாரம் குறித்து எந்த விளக்கமும் அளிக்கவில்லை. எனவே, அடுத்த சில நாட்களில் வெளியாகும் அதிகாரப்பூர்வ தகவல்களே இந்த விவகாரத்தின் உண்மையான நிலையை தெளிவுபடுத்தும் என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
இதையும் படிங்க: "எடப்பாடி பழனிசாமியின் 5 நாள் ஆலோசனை... அதிமுகவில் வரப்போகும் அதிரடி மாற்றங்கள்?"