கூடங்குளம் அணு உலை ஆபத்து: பெட்ரோலை வைத்து கொள்ளை; மத்திய அரசை அட்டாக் செய்த சபாநாயகர் அப்பாவு!
கூடங்குளம் அணு மின் நிலையத்தால் ஏற்படும் அபாயங்கள் குறித்துக் கவலை தெரிவித்த சபாநாயகர் அப்பாவு, எரிபொருள் விலை உயர்வு தொடர்பாக மத்திய அரசை கடுமையாக விமர்சித்தார்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய அண்ணல் அம்பேத்கரின் கனவுகள் நிறைவேறும் வகையில் தாயுமானவர் திட்டத்தின் மூலம் தமிழக அரசு வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தந்திருப்பதாகச் சபாநாயகர் மு. அப்பாவு பெருமிதம் தெரிவித்தார். இதற்கிடையே, மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்த அவர், கூடங்குளம் அணு உலை ஆபத்து, பெட்ரோல் விலை உயர்வு, மற்றும் அண்மைக்காலச் சட்டம்-ஒழுங்கு விவகாரங்கள் குறித்துப் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார்.
செய்தியாளர்களைச் சந்தித்த சபாநாயகர் அப்பாவு, கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உருவாகும் அணுக்கழிவுகளால் பெரும் ஆபத்து உருவாகும் சூழல் இருப்பதாகவும், இதனால் மீனவர்களின் வாழ்வாதாரமும் குடியிருப்புக்களும் கடுமையாகப் பாதிக்கப்படும் என்று எச்சரித்தார். இந்த அணு உலை பாலைவனப் பகுதிகளில் ஆரம்பிக்கப்பட வேண்டிய ஒன்று என்று அவர் தெளிவுபடுத்தினார்.
சர்வதேச அரசியல் குறித்துப் பேசிய அவர், ரஷ்ய அதிபர் இந்தியாவிற்கு வருகை தந்து பிரதமர் மோடியை ஆரத் தழுவியது குறித்து பேசிய அவர், ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெயை நான்கு தொழிலதிபர்கள் இறக்குமதி செய்வதால் இந்திய மக்களுக்கு எந்த நலனும் இல்லை என்று எடுத்துரைத்தார். "40 ரூபாய்க்கு விற்கக்கூடிய பெட்ரோலை 100 ரூபாய்க்கு விற்பனை செய்கிறார்கள்; அவர்கள் சொல்வது நியாயமா?" என்று கேள்வி எழுப்பிய சபாநாயகர், அவர்கள்தான் அந்தக் கொள்ளையைச் செய்து கொண்டிருக்கிறார்கள் என்று மத்திய அரசையும், அதன் ஆதரவாளர்களையும் குற்றம் சாட்டினார்.
இதையும் படிங்க: காலி மது பாட்டில்கள் திட்டம்: "இது கூடுதல் சுமைதான்''.. 'நமது துறை' என்று செயல்பட அமைச்சர் முத்துசாமி வேண்டுகோள்!
மேலும், காவலர்களைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அடித்துத் தாக்கியது நியாயமா என்றும், அவர்கள் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கடும் கோரிக்கை வைத்தார். எவ்வாறு பாபர் மசூதியை இடித்தார்களோ, சதி செய்து காந்தியைக் கொன்றார்களோ அவ்வாறே திட்டமிட்டுச் சிலர் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்று கடுமையான விமர்சனத்தை முன்வைத்த அவர், மக்கள் இது போன்ற அநியாயத்திற்குத் துணை போக வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.
வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்துப் பேசிய அவர், ஏற்கனவே மாவட்ட நிர்வாகம் கொடுத்த படிவங்கள் வாங்கப்பட்டுள்ளதாகவும், அதில் ஆள் இல்லாதவர்கள், இடம்பெயர்ந்தவர்கள், இறந்தவர்கள், இரட்டை வாக்காளர்கள் விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இந்தத் திருத்தப் பணிகளில் இழப்பு ஏற்படாமல் இருக்க, அதிகாரிகள் இடம்பெயர்ந்தவர்களுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும், இறந்தவர்களின் வடிவங்களை இதோடு இணைக்க வேண்டும் என்றும், தகவல் தெரிவித்து முடித்த பின்பே நீக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: டிட்வா புயல் பாதிப்பு: பாதிக்கப்பட்ட இலங்கைக்கு தமிழக அரசு சார்பில் நிவாரண உதவி!