வரலாறு தெரியாதவர்கள் மிரட்டி பார்க்கிறார்கள்!! ஒரு சூரியன்! ஒரு சந்திரன்! ஒரே திமுக!! - ஸ்டாலின் சரவெடி!
திமுகவின் வரலாறு தெரியாத சிலர் மிரட்டிப்பார்க்கின்றனர்; சிலர் திமுக போல் வெற்றி பெறுவோம் என பகல் கனவு காண்கின்றனர் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) 75வது ஆண்டு விழாவை ஒட்டி, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற அறிவு திருவிழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசினார். “திமுகவின் வரலாறு தெரியாத சிலர் நம்மை மிரட்டிப் பார்க்கின்றனர். திமுக போல் வெற்றி பெறுவோம் என பகல் கனவு காண்பவர்கள் அறிவிலிகள்.
திமுக போல் வெற்றி பெற அறிவும் உழைப்பும் தேவை. ஒரு சூரியன், ஒரு சந்திரன் போல் ஒரு திமுகதான். இப்படி ஒரு இயக்கம் இந்த மண்ணில் மீண்டும் தோன்ற முடியாது” எனக் கடுமையாக விமர்சித்தார். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில் திமுகவை வீழ்த்த முயல்வதாகவும் குற்றம்சாட்டினார்.
வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற இவ்விழாவில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர். முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், “அறிவொளியைப் பரப்புவதே திமுகவின் தலையாய கடமை. இவ்விழாவுக்கு ‘அறிவு திருவிழா’ என்று துணை முதல்வர் உதயநிதி பொருத்தமான பெயர் வைத்துள்ளார்.
இதையும் படிங்க: தப்பு பண்ணிருந்தா என்னை அரஸ்ட் பண்ணுங்க!! 2 மாநிலத்தில் வாக்குரிமை? பிரசாந்த் கிஷோர் ஆவேசம்!!
ஏதோ கட்சியைத் தொடங்கினோம், அடுத்த முதல்வர் நான் என்று அறிவித்தோம் என ஆட்சிக்கு வரவில்லை. திமுக தலைவர்களில் இருந்து கடைக்கோடி தொண்டர்கள் வரை சுற்றிச் சுழன்று உழைத்தார்கள். திமுக உழைத்த உழைப்பு சாதாரணமானது அல்ல” என்றார்.
“ஒடுக்குமுறையில் இருந்து மக்களை மீட்ட இயக்கம் திமுக என ராகுல் காந்தி கூறியுள்ளார். பீஹார் முதல்வராக விரைவில் வரப்போகும் தேஜஸ்வி யாதவ் திமுகவை வரலாறாகப் பார்க்கிறார். மாநிலக் கட்சியான திமுகவை அகில இந்திய தலைவர்களும் பாராட்டி கட்டுரை எழுதியுள்ளனர்” எனப் பெருமிதம் தெரிவித்தார்.
மேலும், “வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை ஏன் அவசர அவசரமாக நடத்த வேண்டும்? தேர்தல் நேரத்தில் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் இப்பணி நடக்கிறது. அனைத்துக் கட்சிகளும் எதிர்த்தபோதிலும் ஏன் நடத்துகின்றனர்? கொள்கை ரீதியாக திமுகவை வீழ்த்த முடியாததால், தேர்தல் ஆணையம் மூலம் வீழ்த்த முயல்கின்றனர். களத்தில் உழைக்கும் திமுகவினர் போலி வாக்காளர் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். யாருடைய வாக்குரிமையும் பறிபோகாமல் திமுகவினர் பணியாற்ற வேண்டும்” என அறிவுறுத்தினார்.
திமுகவின் 75 ஆண்டு பயணத்தைப் பெருமைப்படுத்திய முதல்வர், கட்சியின் உழைப்பு, அறிவு, கொள்கை உறுதி ஆகியவற்றை வலியுறுத்தினார். வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் முறைகேடு நடக்கலாம் என எச்சரித்து, கட்சியினரை விழிப்புடன் இருக்கக் கேட்டுக் கொண்டார். இவ்விழா, திமுகவின் பலத்தை வெளிப்படுத்தியதாக அமைந்தது.
இதையும் படிங்க: இனி டிலே ஆகாது!! கவர்னர் ஆர்.என்.ரவி மும்முரம்! 3 மாதங்களில் 95% மசோதாக்களுக்கு ஒப்புதல்!!