×
 

ஓ.பி.எஸ்-ஐ வச்சுக்கலாமா வேணாமா? அதிமுகவுக்கு அட்வாண்டேஜா? குழம்பி தவிக்கும் திமுக தலைமை!

முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தால் அரசியல் ஆதாயம் கிடைக்குமா என, தி.மு.க., தலைமை குழப்பம் அடைந்துள்ளது.

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 நெருங்கி வரும் நிலையில், முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் அரசியல் எதிர்காலம் குறித்து திமுக தலைமை குழப்பத்தில் உள்ளது. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பன்னீர்செல்வம் மீண்டும் கட்சியில் சேர முயற்சித்தார்.

பாஜக மேலிடமும் இதற்கு முயற்சி செய்தது. ஆனால் அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி அவரை சேர்க்க மறுத்துவிட்டார். தேர்தல் நெருங்கும் நிலையில் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் பன்னீர்செல்வம் திணறி வருகிறார்.

இதனால் அதிருப்தி அடைந்த அவரது ஆதரவாளர்கள் திமுக, அதிமுக, தவெக என பல்வேறு திசைகளில் சென்று கொண்டிருக்கின்றனர். புதிதாக கட்சி தொடங்கி அதிமுக கூட்டணியில் இணையுமாறு பாஜக தரப்பில் யோசனை வைக்கப்பட்டது. ஆனால் புதிய கட்சி தொடங்குவதற்கு அவர் தயங்குகிறார். நடிகர் விஜயின் தவெகவில் இணையுமாறு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விடுத்த அழைப்பையும் பன்னீர்செல்வம் நிலுவையில் வைத்துள்ளார்.

இதையும் படிங்க: வைத்திலிங்கம் முகத்தில் இருந்த சோர்வு! நிம்மதி உங்களுக்கும் இருக்காது! எனக்கும் இருக்காது! போட்டு உடைத்த ஸ்டாலின்!

இதற்கிடையே திமுக கூட்டணியில் இணையுமாறு அமைச்சர் சேகர்பாபு வாயிலாக பன்னீர்செல்வத்திடம் வலியுறுத்தப்பட்டது. ஆனால் திமுக கூட்டணியில் சேர்ந்தால் பழனிசாமி சொன்ன குற்றச்சாட்டுகள் உண்மையாகிவிடும் என்பதால் அவர் தயங்குகிறார். இந்நிலையில் பன்னீர்செல்வம் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தால் கிடைக்கும் சாதக-பாதகங்கள் குறித்து திமுக தலைமை ஆலோசித்து வருகிறது.

திமுக வட்டாரங்கள் தெரிவிப்பதாவது: பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக தேனி, மதுரை, சிவகங்கை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் முக்குலத்தோர் சமுதாய ஓட்டுகள் உள்ளன. இவை எம்ஜிஆர்-ஜெயலலிதா விசுவாசிகளின் ஓட்டுகள். திமுக கூட்டணிக்கு பன்னீர்செல்வம் ஆதரவளித்தால் அந்த ஓட்டுகள் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒருவேளை தேர்தலில் இருந்து பன்னீர் ஒதுங்கினால் அது அதிமுக எதிர்ப்பு ஓட்டுகளாக மாறி திமுகவிற்கு கிடைக்க வாய்ப்புள்ளது.

சமீபத்தில் பன்னீர்செல்வம் ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் திமுகவில் சேர்ந்தார். இதனால் டெல்டா மாவட்டங்களில் பலன் கிடைக்குமா என திமுக சார்பில் எடுக்கப்பட்ட சர்வேயில் அதிமுக ஆதரவு ஓட்டுகள் திமுகவிற்கு ஓரளவுக்கு மட்டுமே கிடைக்க வாய்ப்புள்ளது என தெரிய வந்துள்ளது. 

இதனால் தென் மாவட்டங்களில் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு தற்போது இருக்கும் ஆதரவு குறித்து தீவிரமாக விபரங்களை திரட்டி வருகிறது திமுக. இதனாலேயே பன்னீர்செல்வம் விஷயத்தில் என்ன முடிவெடுப்பது என புரியாமல் திமுக தடுமாறி வருகிறது.

இதையும் படிங்க: அமித்ஷா பேச்சுக்கு கட்டுப்பட்டது ஏன்? டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் உடைத்து பேசிய உண்மை!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share