×
 

தவெக விஜய் அரசு மூன்று மாதமாவது தாங்குமா?'- கேள்விக்குறியோடு இந்த ஆட்சி நடப்பதாக மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

6 மாதம் தவெக ஆட்சி தாங்கும் என்று நினைத்தேன். ஆனால், நடக்கக் கூடிய நிகழ்வுகளால், 5 இல்ல 4 இல்ல 3 மாதமாவது தாங்குமா? என்ற நிலை இருப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் கூறினார்.

தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், தமிழக வெற்றிக் கழக அரசின் நிலைத்தன்மை குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கேள்வி எழுப்பியுள்ளார். “இந்த அரசு ஆறு மாதம் நீடிக்கும் என்று நினைத்தேன். ஆனால் தற்போது நடைபெற்று வரும் நிகழ்வுகளை பார்க்கும்போது, ஐந்து மாதம் கூட இல்லை, மூன்று மாதமாவது தாங்குமா என்ற சந்தேகம் எழுகிறது” என்று அவர் தெரிவித்தார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற கட்சி இணைவு நிகழ்ச்சியில், முன்னாள் விசிக நிர்வாகியும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பனையூர் பாபு திமுகவில் இணைந்தார். அவரை வரவேற்று பேசிய ஸ்டாலின், பனையூர் பாபுவை கொள்கை மற்றும் லட்சியங்களில் உறுதியாக செயல்படும் அரசியல் ஆளுமை என பாராட்டினார்.

பனையூர் பாபு தனது உரையில், தலித் மக்களின் பல்வேறு கோரிக்கைகள் திமுக ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றப்பட்டதாகவும், தற்போது ஆட்சியில் உள்ளவர்கள் உருவாக்கும் பிம்பம் உண்மைக்கு புறம்பானது என்றும் கூறினார். இந்த கருத்து அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.

இதையும் படிங்க: காங்., துரோகத்தை தோலுரித்து காட்டுங்க! திமுக நிர்வாகிகளுக்கு மு.க.ஸ்டாலின் கொடுத்த டாஸ்க்!

இதையடுத்து பேசிய ஸ்டாலின், “ஒரு கட்சியிலிருந்து மற்றொரு கட்சிக்கு வருபவர்களை வரவேற்கிறோம். ஆனால் அவர்கள் முன்பு இருந்த இயக்கத்தை விமர்சிக்க வேண்டிய அவசியம் இல்லை. அரசியலில் நாகரிகம் முக்கியம். யாரையும் குறைத்து பேசாமல் அரசியல் செய்ய முடியும் என்பதை பனையூர் பாபு நிரூபித்துள்ளார்” என்றார்.

மேலும், “இந்த அரசு பதவியேற்றபோது ஆறு மாதங்கள் எந்த விமர்சனமும் செய்ய மாட்டேன் என்று முடிவு செய்திருந்தேன். ஆனால் ஒரு மாத காலத்திலேயே பல்வேறு விமர்சனங்களும் சர்ச்சைகளும் எழுந்துள்ளன. மக்கள் மத்தியில் ஏராளமான கேள்விகள் உருவாகி வருகின்றன. அதனால் ஆறு மாதம் அல்ல, மூன்று மாதமாவது இந்த அரசு நீடிக்குமா என்ற சந்தேகம் பலரிடமும் ஏற்பட்டுள்ளது” என கூறினார்.

ஸ்டாலினின் இந்த கருத்து தமிழக அரசியல் அரங்கில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆட்சிக்கு வந்த சில வாரங்களிலேயே அரசின் செயல்பாடுகள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் வெளிப்படையாக கேள்வி எழுப்பியிருப்பது அரசியல் சூழலை மேலும் சூடுபிடிக்கச் செய்துள்ளது.

இதையும் படிங்க: முதல்வர் விஜயை சமாளிக்க கனிமொழியை களமிறக்கும் திமுக! உதயநிதி ஸ்டாலினின் பக்கா ஸ்கெட்ச்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share