ஓசூர்ல பிரசாரம் பண்ணா ஜெயிக்க முடியாது!! கலைஞர் கருணாநிதி காலத்து சென்டிமென்ட்! அஞ்சும் மு.க.ஸ்டாலின்!
ஓசூர் தொகுதி சென்டிமென்டை தி.மு.க., நம்புவதால், வேப்பனஹள்ளி தொகுதியில் தேர்தல் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, தி.மு.க.,வினர் கூறி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சட்டசபை தொகுதியில் தி.மு.க.வுக்கு ஒரு விசேஷ 'சென்டிமென்ட்' இருப்பதாகக் கருதப்படும் நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 19ஆம் தேதி நடத்தவிருக்கும் பொதுக்கூட்ட இடம் மாற்றப்பட்டுள்ளது.
ஓசூர் தொகுதியில் கருணாநிதி அல்லது ஸ்டாலின் பிரசாரம் செய்த தேர்தல்களில் தி.மு.க. ஆட்சி அமைக்க முடியவில்லை என்பது கட்சியினரிடையே பல ஆண்டுகளாக நிலவும் நம்பிக்கை. 1991ல் கருணாநிதி பிரசாரம் செய்தபோது, 2001ல் மற்றும் 2011ல் ஸ்டாலின் பிரசாரம் செய்தபோதும் தி.மு.க. ஆட்சியை இழந்தது. 2019 இடைத்தேர்தலிலும் ஸ்டாலின் ஓசூரில் பிரசாரம் செய்தபோது தி.மு.க. வேட்பாளர் சத்யா வெற்றி பெற்றாலும், தமிழக அளவில் ஆட்சி அமைக்க முடியவில்லை.
ஆனால் 1989, 1996, 2006 மற்றும் 2021 சட்டசபைத் தேர்தல்களில் ஓசூரில் கருணாநிதியோ ஸ்டாலினோ பிரசாரம் செய்யாமல் இருந்தபோது தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சியை அமைத்தது. இதனால் “ஓசூரில் பிரசாரம் செய்தால் ஆட்சி அமைக்க முடியாது” என்ற சென்டிமென்ட் தி.மு.க.வினரிடையே வலுவாக உள்ளது.
இதையும் படிங்க: காட்பாடி வேட்பாளர்னு என்னை சொல்லாதீர்கள்!! துரைமுருகன் கோவம்!! தலைமை அறிவிக்கட்டும் என சமாளிப்பு!
இந்த நிலையில், வரும் 19ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் ஓசூர் பகுதியில் பொதுக்கூட்டம் நடத்த இருப்பதாக அறிவிக்கப்பட்டது. பல இடங்கள் பரிசீலிக்கப்பட்ட நிலையில், இறுதியில் ஓசூர் தொகுதிக்கு அருகிலுள்ள வேப்பனஹள்ளி தொகுதிக்கு உட்பட்ட கோபசந்திரம் அருகே உள்ள தட்சிண திருப்பதி கோவில் பகுதியில் பொதுக்கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
தி.மு.க.வினர் கூறுகையில், “ஓசூர் சென்டிமென்ட் காரணமாகவே பொதுக்கூட்ட இடம் வேப்பனஹள்ளி தொகுதிக்கு மாற்றப்பட்டது” எனத் தெரிவித்தனர். முதல்வர் ஸ்டாலின் தனி விமானம் மூலம் ஓசூர் அருகே பேலகொண்டப்பள்ளியில் உள்ள தால் நிறுவனத்துக்கு வந்து, அங்கிருந்து சாலை மார்க்கமாக கோபசந்திரம் செல்ல உள்ளார். அவர் வரும் வழியில் ஓசூர் தொகுதிக்குள் பல இடங்கள் இருந்தும், சென்டிமென்ட் காரணமாக வேப்பனஹள்ளி பகுதியை தேர்வு செய்ததாகக் கூறப்படுகிறது.
சமீபத்தில் தஞ்சையில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் பார்வையில் பெரிய கோவில் கோபுரம் தெரியக்கூடாது என்பதற்காக திரை போடப்பட்ட சம்பவம் பெரும் பேசுபொருளானது. அதைத் தொடர்ந்து இப்போது ஓசூர் சென்டிமென்ட்டும் அரசியல் வட்டாரத்தில் விவாதத்துக்கு உள்ளாகியுள்ளது.
இந்த முடிவு தி.மு.க.வினருக்கு நம்பிக்கையை அளித்துள்ளது. ஓசூர் சென்டிமென்ட்டை மீறி ஆட்சியைத் தக்க வைக்க இந்த முறை வேப்பனஹள்ளி பகுதியில் பொதுக்கூட்டம் நடத்துவது உதவும் என்று கட்சியினர் எதிர்பார்க்கின்றனர். தேர்தல் பிரசாரம் இறுதிக் கட்டத்தில் இருக்கும் நிலையில், இந்தச் சென்டிமென்ட் பற்றிய விவாதம் தமிழக அரசியலில் புதிய கவனத்தை ஈர்த்துள்ளது.
இதையும் படிங்க: திமுகவுக்கு குறையும் கூட்டம்! உளவுத்துறை அதிர்ச்சி ரிப்போர்ட்! மருமகன் சபரீசனை களமிறக்கிய மு.க.ஸ்டாலின்!!