×
 

அடக்கி வாசிங்க! உளறிக்கொட்டி வாங்கிக்கட்டிக்காதீங்க!! திமுக நிர்வாகிகள், அமைச்சர்களுக்கு மு.க.ஸ்டாலின் அட்வைஸ்!

அமைச்சர்களும், முன்னாள் அமைச்சர்களும், தேர்தல் பிரசாரங்களில், வாய்க்கு வந்தபடி பேசி, சர்ச்சையில் சிக்கி விடாமல் அடக்கி வாசிக்குமாறு, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

வரும் சட்டசபைத் தேர்தலை மனதில் வைத்து, தி.மு.க. அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள் தேர்தல் பிரசாரத்தில் அடக்கி வாசிக்க வேண்டும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் கடும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தி.மு.க. வட்டாரங்கள் தெரிவித்ததாவது: கடந்த 2021 சட்டசபைத் தேர்தலின்போது, முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா, அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியை இழிவுபடுத்தும் வகையில் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதனால் ஸ்டாலின் ராஜாவை பிரசாரத்துக்கே அனுப்ப வேண்டாம் என முடிவு செய்யும் அளவுக்கு நிலைமை மோசமானது.

ஆட்சிக்கு வந்த பிறகு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் “சனாதனத்தை ஒழிக்க வேண்டும்” என்று பேசியது தேசிய அளவில் பெரும் புயலை கிளப்பியது. அமைச்சர் பொன்முடி, மகளிர் விடியல் பேருந்து பயனாளிகளிடம் “ஓசி பஸ்” என்று பேசியதும், பெண்கள் மற்றும் ஹிந்து மக்கள் மத்தியில் ஆபாசமான கருத்துகளைத் தெரிவித்ததும் பெரும் எதிர்ப்பை சம்பாதித்தது. இறுதியில் பொன்முடி அமைச்சர் பதவியை இழக்க நேரிட்டது.

இதையும் படிங்க: அதிமுகவுக்கு எடப்பாடி பழனிசாமி செய்த துரோகம்? திமுகவில் இணைந்ததும் பற்ற வைக்கும் பன்னீர் செல்வம்!

அமைச்சர்கள் ராஜ கண்ணப்பன், சாத்தூர் ராமச்சந்திரன் உள்ளிட்டோரும் சர்ச்சைக்குரிய பேச்சுகளால் முதல்வரின் எச்சரிக்கைக்கு ஆளானார்கள்.

இந்த அனுபவங்களிலிருந்து பாடம் கற்ற முதல்வர் ஸ்டாலின், தேர்தல் நேரத்தில் ஒரு சிறிய சர்ச்சை கூட தி.மு.க.வுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என கருதுகிறார். எனவே, அமைச்சர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள் பொதுவெளியில் தனி நபர் தாக்குதல், சர்ச்சைக்குரிய கருத்துகள், ஆபாசமான பேச்சுகள் ஆகியவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

“தி.மு.க. அரசின் திட்டங்கள், சாதனைகள், மக்கள் நலப் பணிகள் ஆகியவற்றை மட்டுமே மக்களிடம் எடுத்துச் சொல்லுங்கள். தனிப்பட்ட விமர்சனங்கள், சர்ச்சை பேச்சுகள் எதுவும் வேண்டாம்” என ஸ்டாலின் தெளிவாக எச்சரித்துள்ளார்.

பொன்முடி, ராஜா உள்ளிட்ட மூத்த தலைவர்களுக்கு ‘வாய்ப்பூட்டு’ போடப்பட்டுள்ளதாகவும், தேர்தல் பிரசாரத்தில் அடக்கி வாசிக்குமாறு கடும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வரும் தேர்தலில் எந்த வித சர்ச்சையும் இல்லாமல், தி.மு.க.வின் சாதனைகளை மட்டும் முன்னிறுத்தி பிரசாரம் செய்ய வேண்டும் என்பதே முதல்வர் ஸ்டாலினின் திட்டம். இந்த உத்தரவு தி.மு.க.வினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதையும் படிங்க: கண்ட்ரோலை என்கைல கொடுங்க!! 40 பேருக்கு சீட்! லிஸ்டுடன் தயாரான உதயநிதி ஸ்டாலின்! திமுகவில் பரபரப்பு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share