அரைச்ச மாவு! புளித்த பலகாரம்!! தேர்தல் ஜெயிக்க இது போதுமா? தமிழக பாஜக குமுறல்!
சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில், தமிழக பா.ஜ.,வில், நிர்வாகிகள் பங்கேற்கும் கூட்டங்கள் அடிக்கடி நடத்தப்படுகின்றன
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பாஜகவில் உள்ள உள் அதிருப்தி வெளிப்படத் தொடங்கியுள்ளது. கட்சி நிர்வாகிகள் கூட்டங்கள் அடிக்கடி நடத்தப்படுகின்றன. ஆனால் இந்தக் கூட்டங்களில் பாஜக கொள்கைகள், மத்திய அரசு திட்டங்கள் குறித்து மட்டுமே விவாதிக்கப்படுகிறது. இதனால் நேரம் வீணாகிறது என்று கட்சித் தொண்டர்கள் குமுறல் வெளியிட்டு வருகின்றனர்.
பாஜக வட்டாரங்கள் கூறுவதாவது: தமிழக பாஜகவில் மாநில நிர்வாகிகள், அணிகள், பிரிவுகள் பொறுப்பாளர்களுடன் தொடர்ந்து ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. இந்தக் கூட்டங்களில் ஒருவர் பேசும் விஷயம் மற்றவர்களுக்கு ஏற்கனவே தெரிந்ததுதான். இரண்டு மணி நேரம் முதல் மூன்று மணி நேரம் வரை நடக்கும் இந்தக் கூட்டங்கள் சடங்கு போன்று நடக்கின்றன. அரைத்த மாவையே திரும்பத் திரும்ப அரைப்பது போன்ற நிலைதான்.
இதனால் கட்சிக்கு எந்த பயனும் ஏற்படுவதில்லை என்று தொண்டர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். மாற்றம் தேவை என்றால் புதிய மக்களிடம் சென்று பேச வேண்டும். உதாரணமாக, சைவ உணவு சாப்பிடுபவர்களிடம் மட்டும் சைவ உணவின் நன்மைகளை தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தால் என்ன பயன்? அதே போல்தான் இப்போது நடக்கிறது.
இதையும் படிங்க: இரட்டை இலக்க தொகுதி வேணும்!! திமுகவுக்கு CPM அழுத்தம்! விழிபிதுங்கும் ஸ்டாலின்! நீடிக்கும் இழுபறி!
எஸ்சி, எஸ்டி மக்கள், சிறுபான்மையினர், இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள் உள்ளிட்ட பலதரப்பட்ட மக்களை சந்திக்க வேண்டும். அவர்களிடம் பாஜகவின் கொள்கைகளையும், மத்திய அரசின் நலத் திட்டங்களையும் விளக்க வேண்டும். புதிய பகுதிகளுக்கு சென்று கிராமங்கள், நகர்ப்புற ஏழை மக்கள், புதிய வாக்காளர்களை அணுக வேண்டும். அப்போதுதான் தமிழகம் முழுவதும் பாஜகவின் அடித்தளத்தை வலுப்படுத்த முடியும்.
தற்போது நடக்கும் கூட்டங்கள் பெரும்பாலும் அதே நிர்வாகிகளுக்குள் சுற்றி வருவதால், கட்சி வளர்ச்சிக்கு உதவவில்லை என்று தொண்டர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். தேர்தல் நெருங்கும் நிலையில் வீதி வீதியாக சென்று மக்களை சந்திக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
பாஜக மாநிலத் தலைமை இந்தக் கருத்துக்களை கவனத்தில் கொண்டு, களப்பணியை தீவிரப்படுத்தினால் மட்டுமே தமிழகத்தில் கட்சி வளர்ச்சி ஏற்படும் என்று அரசியல் வட்டாரங்கள் கருத்து தெரிவிக்கின்றன. தேர்தல் நெருங்கும் நிலையில் இந்த உள் அதிருப்தி கட்சிக்கு சவாலாக மாறியுள்ளது.
இதையும் படிங்க: அமைச்சரவையில் 6 சீட்! துணை முதல்வர் பதவி! காங்கிரஸுக்கு வாரி வழங்கும் தவெக! ராகுல் - விஜய் டீல்!