4 கட்சிக்கு 5 சீட்டா? எப்படி பத்தும்?! 24 சீட் கேட்கும் முஸ்லிம் கட்சிகள்! திமுகவுக்கு அதிர்ச்சி?!
தமிழகத்தில் முஸ்லிம்கள் 10 சதவீதம் உள்ளனர். அதன்படி, முஸ்லிம்களுக்கு 24 தொகுதிகளை ஒதுக்க வேண்டும். தி.மு.க.,வின் பிரதான ஓட்டு வங்கியே முஸ்லிம்கள் தான்.
தமிழகத்தில் வரும் சட்டசபை தேர்தலில் ‘இண்டியா’ கூட்டணியின் முக்கிய பங்குதாரரான திமுகவுக்கும் முஸ்லிம் கட்சிகளுக்கும் இடையே தொகுதி பங்கீடு தொடர்பான இழுபறி தீவிரமடைந்துள்ளது. தமிழகத்தில் முஸ்லிம்கள் 10 சதவீதம் உள்ளதால், அவர்களுக்கு குறைந்தது 24 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று முஸ்லிம் லீக் தரப்பு வலியுறுத்தி வருகிறது. திமுகவின் பிரதான வாக்கு வங்கியாக முஸ்லிம்கள் உள்ளனர் என்றும், அவர்களின் வாக்குகள் சிதறினால் வெற்றி சாத்தியமில்லை என்றும் அக்கட்சி தரப்பு குறிப்பிடுகிறது.
2021 சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்குக்கு 3 தொகுதிகளும், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டன. ஆனால் முஸ்லிம் லீக் போட்டியிட்ட 3 தொகுதிகளிலும் தோல்வியடைந்தது. ம.ம.க. மட்டும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றது.
இப்போது வரும் தேர்தலில் எஸ்.டி.பி.ஐ. மற்றும் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சி ஆகியவை திமுக கூட்டணியில் இணைய பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. நடிகர் விஜயின் த.வெ.க. கட்சி சிறுபான்மை வாக்குகளை பிரிக்கும் என்ற அச்சம் திமுகவுக்கு இருப்பதால், முஸ்லிம் கட்சிகளை கூட்டணிக்குள் கொண்டு வர விரும்புகிறது.
இதையும் படிங்க: காங்., தலைமையில் கூட்டணி!! திமுகவுக்கு அதிர்ச்சி! யார் பெரிய கட்சி?! புதுச்சேரியில் கூட்டணிக்குள் சலசலப்பு!
கடந்த தேர்தலில் இரு முஸ்லிம் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட 5 தொகுதிகளை இப்போது நான்கு கட்சிகளுக்கும் பகிர்ந்தளிக்க திமுக முடிவு செய்துள்ளது. அதன்படி முஸ்லிம் லீக்குக்கு 2 தொகுதிகளும், மற்ற கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதியும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் முஸ்லிம் கட்சிகள் அதிருப்தியில் உள்ளன.
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா ஐந்து தொகுதிகள் வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். முஸ்லிம் லீக் தரப்போ “தமிழகத்தில் முஸ்லிம்கள் 10 சதவீதம் உள்ளனர். அதன்படி 24 தொகுதிகள் ஒதுக்க வேண்டும். திமுகவின் பிரதான வாக்கு வங்கி முஸ்லிம்கள் தான். குறைந்தது 10 தொகுதிகள் ஒதுக்கினால் மட்டுமே முஸ்லிம் இளைஞர்களின் வாக்குகள் முழுமையாக திமுகவுக்கு கிடைக்கும். இல்லாவிட்டால் வாக்குகள் சிதறும். இதை திமுக தலைமை உணர வேண்டும்” என்று கோரிக்கை வைத்துள்ளது.
திமுக கூட்டணியில் முஸ்லிம் கட்சிகள் புறக்கணிக்கப்படுவதாக உணர்ந்தால், சிறுபான்மை வாக்குகள் பிரிந்து செல்லும் அபாயம் உள்ளது. இது தேர்தல் களத்தில் திமுகவுக்கு பெரும் சவாலாக அமையும் என்று அரசியல் வட்டாரங்கள் கருத்து தெரிவிக்கின்றன. தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் இன்னும் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: ஜகா வாங்கிய அண்ணாமலை, டிடிவி! ஆக்ஷனில் இறங்கிய அமித்ஷா! தேஜ கூட்டணி நிர்வாகிகளுக்கு பறந்த உத்தரவு!