×
 

தமிழகத்தில் எல் நினோ எச்சரிக்கை... அரசின் அதிரடி முடிவு! கண்காணிப்பு குழுவில் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான்!

தமிழகத்தில் வலுப்பெறக்கூடிய எல் நினோ தாக்கத்தால் ஏற்படக்கூடிய வறட்சி, மழைப்பொழிவு குறைவு குறித்து ஆலோசனைக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் எல் நினோ (El Niño) தாக்கம் தீவிரமடையக்கூடும் என்ற எச்சரிக்கையைத் தொடர்ந்து, வறட்சி, மழைப்பொழிவு குறைவு மற்றும் வெள்ளம் உள்ளிட்ட இயற்கை பேரிடர்களை முன்கூட்டியே கண்காணித்து அரசுக்கு ஆலோசனை வழங்கும் வகையில் தமிழக அரசு முக்கிய நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக வருவாய் நிர்வாக ஆணையர் தலைமையில் சிறப்பு எல் நினோ கண்காணிப்பு ஆலோசனைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு சுற்றுச்சூழல் மற்றும் வானிலை ஆர்வலர்களிடையே கவனம் பெற்றுள்ளது.

இந்த ஆலோசனைக் குழுவில் அண்ணா பல்கலைக்கழகம், சென்னை ஐஐடி, தமிழ்நாடு கிரீன் கிளைமேட் நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த மொத்தம் ஏழு நிபுணர்கள் இடம்பெற்றுள்ளனர். குறிப்பாக, தனியார் வானிலை ஆய்வாளராக பொதுமக்களிடம் பரவலாக அறியப்படும் பிரதீப் ஜானும் இந்தக் குழுவில் உறுப்பினராக இடம்பெற்றிருப்பது முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் பருவமழை நிலவரம், மழைப்பொழிவு மாற்றங்கள், வறட்சி ஏற்படும் வாய்ப்புகள் மற்றும் வெள்ள அபாயங்கள் குறித்து தொடர்ந்து கண்காணித்து அரசுக்கு அறிவியல் அடிப்படையிலான பரிந்துரைகளை வழங்குவதே இந்தக் குழுவின் முக்கிய நோக்கமாகும். காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை முன்கூட்டியே கணித்து, எந்தெந்த மாவட்டங்களில் அதிக பாதிப்பு ஏற்படலாம் என்பதை அடையாளம் காணும் பணியையும் இந்தக் குழு மேற்கொள்ள உள்ளது.

இதையும் படிங்க: கர்நாடகாவின் மேகதாது அணை திட்டத்தில் பின்னடைவு... தமிழகத்திற்கு கிடைத்த மிகப்பெரிய நிம்மதி!

மேலும், வறட்சி தடுப்பு நடவடிக்கைகள், நீர் மேலாண்மை, வெள்ள பாதிப்பு குறைப்பு, பேரிடர் முன்எச்சரிக்கை மற்றும் அவசரகால திட்டமிடல் தொடர்பாக தமிழக அரசுக்கு தேவையான ஆலோசனைகளையும் இந்தக் குழு வழங்கும். இதன் மூலம் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் சவால்களை திறம்பட எதிர்கொள்ள அரசு முன்கூட்டியே திட்டமிட முடியும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

எல் நினோ தாக்கம் காரணமாக சில ஆண்டுகளில் தமிழகத்தில் பருவமழை குறைவது, சில பகுதிகளில் கடுமையான வறட்சி நிலை உருவாகுவது போன்ற சூழல்கள் ஏற்பட்டுள்ளன. அதே நேரத்தில், குறுகிய காலத்தில் அதிக மழை பெய்து வெள்ள பாதிப்பும் உருவாகும் வாய்ப்பு இருப்பதாக வானிலை நிபுணர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். இந்த நிலையில், பல்வேறு துறைகளின் நிபுணர்களை ஒருங்கிணைத்து தமிழக அரசு அமைத்துள்ள இந்த ஆலோசனைக் குழு, எதிர்கால காலநிலை சவால்களை அறிவியல் ரீதியாக அணுகும் முக்கிய முயற்சியாக பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: மதுபோதையில் பெண்ணிடம் சில்மிஷம்! 'நான் இன்ஸ்பெக்டர்' என மிரட்டிய போலீஸ் அதிகாரி கைது!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share