திருவான்மியூர் - உத்தண்டி மேம்பால சாலைக்கான ஒப்பந்தம் ரத்து?! மறு டெண்டர் கோருவதா என அரசு ஆலோசனை?!
திருவான்மியூர் - உத்தண்டி இடையே, 2,100 கோடி ரூபாய் மதிப்பிலான, நான்கு வழி மேம்பாலச்சாலை திட்டத்திற்கான ஒப்பந்தத்தை, தமிழக அரசு ரத்து செய்ய முடிவு செய்துள்ள தகவல் வெளியாகி உள்ளது.
திருவான்மியூர் முதல் உத்தண்டி வரை 2,100 கோடி ரூபாய் மதிப்பில் நான்கு வழி மேம்பாலச் சாலை அமைக்கும் திட்டத்திற்கான ஒப்பந்தத்தை தமிழக அரசு ரத்து செய்ய முடிவு செய்துள்ளது. ஒப்பந்த நிறுவனம் தேர்வில் குளறுபடி மற்றும் திட்ட மதிப்பீடு அதிகமாக்கப்பட்டது உள்ளிட்ட சர்ச்சைகள் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை - புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையின் ஒரு பகுதியான இந்த 14.4 கிலோமீட்டர் தூர மேம்பாலம், போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கில் தி.மு.க. அரசால் தொடங்கப்பட்டது. திருவான்மியூரில் இருந்து உத்தண்டிக்கு 25 நிமிடங்களில் செல்ல வேண்டிய பயணம் தற்போது ஒரு மணி நேரத்துக்கு மேல் ஆகும் நிலையில், இந்தத் திட்டம் பொதுமக்களுக்கு பெரும் நிம்மதியை தரும் என எதிர்பார்க்கப்பட்டது.
கடந்த ஆண்டு ஆகஸ்டில் ஹைதராபாத் நிறுவனமான கே.என்.ஆர். கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது. சட்டசபைத் தேர்தலுக்கு முன்பு அப்போதைய முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். தற்போது மண் பரிசோதனை பணிகள் நடைபெற்று வரும் நிலையில், திட்ட மதிப்பீடு அதிகரிப்பு மற்றும் ஒப்பந்ததாரர் தேர்வில் முறைகேடு நடந்ததாக புகார்கள் எழுந்தன.
இதையும் படிங்க: டாஸ்மாக் மது மீதான கட்சி நிதி அரசுக்கு மாற்றம்!! ஆண்டுக்கு ரூ.1,200கோடி கூடுதல் வருவாய்! முதல்வர் விஜய் அதிரடி!
மாநில நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கூறுகையில், “52 லட்சம் ரூபாய் செலவில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது. நில எடுப்பு, மின்கம்பங்கள், குடிநீர் குழாய்கள் உள்ளிட்ட பணிகளுக்கும் நிதி உள்ளிட்டதால் தொகை அதிகரித்தது. இது பொது - தனியார் பங்களிப்பு திட்டம். 40 சதவீதத்தை அரசும், 60 சதவீதத்தை நிறுவனமும் ஏற்கும்” என்றனர்.
திட்டத்தை முழுமையாக கைவிடுவதா அல்லது மறு டெண்டர் கோருவதா என அரசின் உயர் மட்டத்தில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் இந்த முடிவை வரவேற்றுள்ளார். “1,400 கோடியில் முடிக்கக் கூடிய திட்டத்துக்கு 2,100 கோடி ஒதுக்கி 700 கோடி ஊழல் நடந்துள்ளது. ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது வரவேற்கத்தக்கது. ஊழலுக்கு பொறுப்பான அமைச்சர்கள், அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.
போக்குவரத்து நெரிசலால் அவதிப்படும் பொதுமக்கள், திட்டம் விரைவில் மறு தொடக்கம் பெற வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர். தமிழக அரசின் இறுதி முடிவு விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: காலைல 7 மணிக்கு களத்தில் இருக்கணும்! சுத்தம் முக்கியம்! உள்ளாட்சி ஆணையர்களுக்கு அரசு கறார் உத்தரவு!