×
 
☰

6,000 பணியிடங்கள் காலி! கல்வித்துறையில் சர்ச்சை! உடற்கல்வி ஆசிரியர் பற்றாக்குறையால் புதிய சிக்கல்!

மாநிலம் முழுவதும் சுமார் 6,000 உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும், 8,500 நடுநிலைப் பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்கள் இல்லாத நிலை இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மாணவர்களின் உடல்நலத்தையும் விளையாட்டுத் திறனையும் மேம்படுத்தும் நோக்கில் பள்ளிகளில் உடற்கல்வி பாடவேளைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. ஆனால், அதற்குத் தேவையான உடற்கல்வி ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படாதது கல்வித்துறையில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆசிரியர்கள் இல்லாமல் கூடுதல் பாடவேளைகளை எவ்வாறு நடத்துவது என்ற கேள்வியைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் எழுப்புகின்றனர்.

அக். 13ஆம் தேதி நடைபெற்ற கல்வி அதிகாரிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாணவர்களின் கல்வியுடன் விளையாட்டுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் உடற்கல்வி பாடவேளைகள் அதிகரிக்கப்படும் என்று அமைச்சர் ராஜ்மோகன் அறிவித்தார். இதையடுத்து, அதிகரிக்கப்பட்ட பாடவேளைகளுக்கான புதிய கால அட்டவணையும் நடைமுறைக்கு வந்துள்ளது.

புதிய அட்டவணையின்படி, 6 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வாரத்தில் மூன்று உடற்கல்வி பாடவேளைகளும், 1 முதல் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வாரத்தின் ஐந்து நாட்களிலும் உடற்கல்வி பாடவேளைகளும் இடம்பெறும் வகையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: ஷாக் கொடுக்கும் எலுமிச்சை விலை! தமிழகத்தில் ரூ. 23,500!! தெலுங்கானாவில் ரூ.1,750!! ஏன் இவ்வளவு இடைவெளி?

ஆனால், பாடவேளைகள் அதிகரிக்கப்பட்ட அளவுக்கு உடற்கல்வி ஆசிரியர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. மாநிலம் முழுவதும் சுமார் 6,000 உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும், 8,500 நடுநிலைப் பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்கள் இல்லாத நிலை இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதனால், புதிய நடைமுறையின் நோக்கம் முழுமையாக நிறைவேறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் சங்க மாநிலத் தலைவர் சங்கரப்பெருமாள் கூறுகையில், உடற்கல்வி பாடவேளைகளை அதிகரித்திருப்பது வரவேற்கத்தக்கது என்றார். அதேநேரத்தில், காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டியது அவசியம் என்றும் வலியுறுத்தினார்.

மேல்நிலைப் பள்ளிகளில் உடற்கல்வி வகுப்புகள் பெயரளவில் நடத்தப்படும் நிலை இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், உடற்கல்வியில் முதுகலைப் பட்டம் பெற்றவர்களைத் தகுதிக்கேற்ப உடற்கல்வி இயக்குநர்களாக நியமிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும், 2,700க்கும் மேற்பட்ட பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களே இல்லை என்றும் அவர் கூறினார்.

தற்போதைய அரசாணையின்படி, 250க்கும் மேற்பட்ட மாணவர்கள் உள்ள பள்ளியில் ஓர் உடற்கல்வி ஆசிரியரும், 550க்கும் மேற்பட்ட மாணவர்கள் இருந்தால் இரண்டு ஆசிரியர்களும், 850க்கும் மேற்பட்ட மாணவர்கள் இருந்தால் மூன்று ஆசிரியர்களும் நியமிக்கப்படுகின்றனர். ஆயிரம் முதல் 5,000 மாணவர்கள் வரை உள்ள பள்ளிகளிலும் அதிகபட்சம் மூன்று ஆசிரியர்கள் மட்டுமே நியமிக்கப்படும் நடைமுறை இருப்பதாக சங்கம் சுட்டிக்காட்டுகிறது.

எனவே, மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப உடற்கல்வி ஆசிரியர்களை நியமிக்கும் வகையில் விதிகளை மாற்ற வேண்டும் என்பது சங்கத்தின் கோரிக்கையாக உள்ளது. உடற்கல்வி பாடவேளைகளை அதிகரிப்பதுடன், ஆசிரியர் பற்றாக்குறையையும் சரிசெய்தால்தான் மாணவர்களுக்கு அதன் முழுப் பயனும் கிடைக்கும் எனக் கல்வித்துறையினர் வலியுறுத்துகின்றனர்.

இதையும் படிங்க: ரேஷன் கடைகளில் பாமாயில் விநியோகத்துக்கு தடை! தீபாவளிக்கு முன் சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share