ரூ.1.50 டிரில்லியன் பொருளாதார இலக்கு! தமிழகத்தில் அதிரடியாக களமிறங்கும் 20 துறைகள்!
இந்த 20 துறைகள் சார்ந்த தொழில் நிறுவனங்களை மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் தொடங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
சென்னை: தமிழகத்தில் உயர்திறன் வேலைவாய்ப்புகளை அதிகரிக்கவும், இளைஞர்கள் வேலைக்காக வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு செல்வதை குறைக்கவும், செமிகண்டக்டர், செயற்கை நுண்ணறிவு, குவான்டம் தொழில்நுட்பம் உள்ளிட்ட 20 புதிய தொழில் துறைகளை ஊக்குவிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
ஜவுளி, மோட்டார் வாகனம், தோல் பொருட்கள் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி உள்ளிட்ட துறைகளில் தமிழகம் ஏற்கனவே முன்னணி மாநிலங்களில் ஒன்றாக உள்ளது. அடுத்தகட்ட தொழில் வளர்ச்சியை வேகப்படுத்தும் நோக்கில், 2036-ம் ஆண்டுக்குள் தமிழகத்தின் பொருளாதாரத்தை 1.50 டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு உயர்த்த அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
இதன் ஒரு பகுதியாக புதிய தொழில் கொள்கையை அரசு வெளியிட உள்ளது. இதில் வளர்ந்து வரும் புதிய தொழில்நுட்ப துறைகள் மற்றும் ஏற்றுமதி வாய்ப்புகள் அதிகம் உள்ள துறைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட உள்ளது. இதற்காக பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணர்களிடம் கருத்துகள் பெறப்பட்டு வருகின்றன.
இதையும் படிங்க: தமிழ்நாட்டை முந்திய புதுச்சேரி! பள்ளிக் கல்வி தரவரிசையில் வெளியான அதிர்ச்சி ரேங்க்! முழு விவரம்!
அதன் அடிப்படையில் அதிக வளர்ச்சி வாய்ப்புள்ள 20 துறைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. ஒவ்வொரு துறைக்கும் தனித்தனியாக தொழில்துறை மாற்றத்துக்கான செயல்திட்டங்கள் உருவாக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அடையாளம் காணப்பட்டுள்ள துறைகளில் செமிகண்டக்டர், செயற்கை நுண்ணறிவு மற்றும் டேட்டா சென்டர் ஹார்டுவேர், குவான்டம் தொழில்நுட்பம், ஆழ்தொழில்நுட்பம், தொலைத்தொடர்பு வலையமைப்பு, தொழில்துறை தானியக்கம், உலகளாவிய திறன் மையங்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு ஆகியவை இடம்பெற்றுள்ளன.
இதுதவிர ஆளில்லா விமானம், கப்பல் கட்டுமானம், ரயில்வே, மின்சார வாகனங்கள் மற்றும் தானியங்கி போக்குவரத்து, விண்வெளி மற்றும் வான்வெளி தொழில்நுட்பம், எரிசக்தி அமைப்புகள், அரிய பூமிக்கனிமங்கள் செயலாக்கம், கடல்சார் பொருளாதாரம் ஆகிய துறைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட உள்ளது.
நிதி தொழில்நுட்பம், உணவு பதப்படுத்துதல், உயிரி மருந்துகள் மற்றும் தொழில்நுட்ப ஜவுளி ஆகியவையும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
இதுகுறித்து தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், தமிழகத்தின் முன்னணி உயர் கல்வி நிறுவனங்களில் படிப்பை முடிக்கும் பல மாணவர்கள் உயர்திறன் வேலைவாய்ப்புக்காக பெங்களூரு, ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் செல்கின்றனர். எனவே, புதிய தலைமுறை தொழில்களை தமிழகத்திலேயே உருவாக்குவதன் மூலம் அவர்களுக்கு உள்ளூரிலேயே அதிக திறன் தேவைப்படும் வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும் என தெரிவித்தார்.
இந்த 20 துறைகள் சார்ந்த தொழில் நிறுவனங்களை மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் தொடங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் மூலம் சென்னை உள்ளிட்ட சில முக்கிய நகரங்களை மட்டும் சார்ந்திராமல், தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் புதிய முதலீடுகள் மற்றும் வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதே நேரத்தில், புதிய துறைகளில் முதலீடுகளை ஈர்ப்பது மட்டுமின்றி, அதற்குத் தேவையான திறன் கொண்ட பணியாளர்களை உருவாக்குவதும் முக்கிய சவாலாக இருக்கும். தொழில்நுட்பக் கல்வி, பயிற்சி மற்றும் தொழில் நிறுவனங்களின் தேவைகளுக்கு ஏற்ப திறன் மேம்பாடு ஆகியவை இந்த திட்டத்தின் வெற்றியில் முக்கிய பங்கு வகிக்கும்.
தமிழகத்தின் 1.50 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை நோக்கிய பயணத்தில், இந்த 20 புதிய துறைகள் முக்கிய பங்களிப்பை வழங்கும் என அரசு எதிர்பார்க்கிறது.
இதையும் படிங்க: நேபாள வெள்ளம்: முதல்வர் விஜய் உத்தரவில் தமிழர்களை மீட்க டெல்லியில் முகாமிட்ட 4 அமைச்சர்கள்! முக்கிய முடிவு?