×
 
☰

வீட்டு உரிமையாளர்களுக்கு ஷாக்? தமிழகத்தில் சொத்து வரி 100% வரை உயர்த்த திட்டம்!

தமிழக நகர்ப்புற உள்ளாட்சி விதிகளின்படி, பொதுவான வரி மறுசீரமைப்பு நடைபெறாத ஆண்டுகளில், சொத்து மதிப்பை ஆண்டுதோறும் மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி அல்லது 6 சதவீதம் ஆகியவற்றில் அதிகமான அளவுக்கு உயர்த்தும் நடைமுறை உள்ளது.

தமிழகத்தில் மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளின் நிதி நிலையை மேம்படுத்தும் வகையில், சொத்து வரி உள்ளிட்ட சில உள்ளாட்சி வரிகளை உயர்த்துவது குறித்து அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, தற்போதுள்ள சொத்து வரியை ஒருமுறை 100 சதவீதம் வரை உயர்த்துவது குறித்தும், அதன் பின்னர் ஆண்டுதோறும் 6 முதல் 10 சதவீதம் வரை உயர்த்துவது குறித்தும் ஆலோசனை நடைபெற்று வருவதாக நகராட்சி நிர்வாகத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தமிழகத்தில் நகராட்சி நிர்வாகத்துறையின் கீழ் 25 மாநகராட்சிகள், 146 நகராட்சிகள் மற்றும் 479 பேரூராட்சிகள் உள்ளன. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் வருவாயில் சொத்து வரி முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால், வருவாயை விட நிர்வாகச் செலவுகள் அதிகமாக இருப்பதால் பல உள்ளாட்சி அமைப்புகள் நிதி நெருக்கடியை சந்தித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2025-ம் ஆண்டில் சென்னை மாநகராட்சியில் மட்டும் ரூ.1,765 கோடி அளவுக்கு சொத்து வரி வசூலிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதர மாநகராட்சிகளில் ரூ.1,814.59 கோடியும், நகராட்சிகளில் ரூ.646.62 கோடியும், பேரூராட்சிகளில் ரூ.311.62 கோடியும் வசூலிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: அண்ணா அறிவாலயத்தில் முக்கிய ஆலோசனை!! மதுராந்தகம், தாராபுரம் தேர்தலுக்காக மு.க.ஸ்டாலின் போட்ட திட்டம்!

இதற்கிடையே, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் வருவாயை அதிகரிப்பது தொடர்பாக நிதி ஆணைய பரிந்துரைகளும் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, சொத்து வரி வசூல் மற்றும் வரி சீரமைப்பு ஆகியவை மத்திய அரசின் மானியங்களை பெறுவதற்கான முக்கிய அம்சங்களில் ஒன்றாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழக நகர்ப்புற உள்ளாட்சி விதிகளின்படி, பொதுவான வரி மறுசீரமைப்பு நடைபெறாத ஆண்டுகளில், சொத்து மதிப்பை ஆண்டுதோறும் மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி அல்லது 6 சதவீதம் ஆகியவற்றில் அதிகமான அளவுக்கு உயர்த்தும் நடைமுறை உள்ளது.

இந்த நிலையில், தற்போதுள்ள வரி வசூல் முறையை சீரமைத்து, ஒருமுறை பெரிய அளவில் திருத்தம் செய்வது குறித்து அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் ஒரு பகுதியாக அதிகபட்சமாக 100 சதவீதம் வரை உயர்த்தும் திட்டமும் பரிசீலனையில் இருப்பதாக கூறப்படுகிறது.

அதன்பிறகு, வரி திடீரென பெரிய அளவில் உயர்த்தப்படுவதை தவிர்த்து, ஆண்டுதோறும் 6 முதல் 10 சதவீதம் வரை படிப்படியாக உயர்த்தும் முறையை செயல்படுத்துவது குறித்தும் ஆலோசனை நடைபெற்று வருகிறது. இந்த திட்டம் இறுதி செய்யப்பட்டால், வீட்டு உரிமையாளர்கள் மற்றும் வணிக நிறுவனங்களின் சொத்து வரி செலுத்தும் தொகையில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனினும், இறுதி முடிவு மற்றும் நடைமுறை விதிகள் அரசு உத்தரவுக்குப் பிறகே தெளிவாகும்.

இதையும் படிங்க: டாஸ்மாக் கடை முன்பு திடீர் தகராறு! 2 பேருக்கு அரிவாள் வெட்டு; 7 பேர் கைது! தலைமறைவானவரை தேடும் போலீஸ்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share