ஒப்பந்ததாரர் தேர்வில் வெளிப்படை தன்மை! பொதுப்பணி துறையில் அமலுக்கு வருகிறது புதிய நடைமுறை!
ஒப்பந்ததாரர் தேர்வில், வெளிப்படை தன்மையை பின்பற்றும் வகையில், பொதுப்பணித் துறையில் வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டு உள்ளன.
சென்னை: ஒப்பந்ததாரர் தேர்வில் முழு வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் வகையில் பொதுப்பணித் துறை முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் தேவையற்ற கட்டுப்பாடுகள், சாதக-பாதக நிபந்தனைகள் மற்றும் ஊழல் சாத்தியங்களைத் தடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது.
பொதுப்பணித் துறை செயலர் வெளியிட்ட அரசாணையில், ஒப்பந்ததாரர் தேர்வு செயல்முறையை முழுமையாக சீர்திருத்தம் செய்ய பல முக்கிய உத்தரவுகள் இடம் பெற்றுள்ளன. ஒப்பந்தப் போட்டியை குறைக்கும் வகையில் தேவையற்ற கட்டுப்பாடுகளை விதிப்பது அல்லது குறிப்பிட்ட ஒரு நபருக்கு சாதகமாக நிபந்தனைகளை வகுப்பது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒப்பந்ததாரர்களுக்கு சாதகமாகவோ பாதகமாகவோ அமையும் எந்த நிபந்தனையும் விதிக்கக் கூடாது. ஒப்பந்தப்புள்ளி செயல்முறை முழுவதும் 100 சதவீதம் ஆன்லைன் முறையிலேயே நடைபெற வேண்டும். ஒப்பந்தப்புள்ளியின் வெளிப்படைத்தன்மையை பாதிக்கும் எந்தவித தலையீடும் அல்லது நேரடித் தொடர்பும் அனுமதிக்கப்பட மாட்டாது.
இதையும் படிங்க: திமுக ஆட்சியில் பிறப்பித்த உத்தரவு! புத்துயிர் கொடுத்தார் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா! அதிகாரிகள் ஷாக்!
ஒப்பந்தப்புள்ளி கோரும் அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் போதுமான கால அவகாசம் பெறும் வகையில் நேரத்தை ஒதுக்க வேண்டும். போட்டியை கட்டுப்படுத்தும் நோக்கில் ‘பேக்கேஜ் டெண்டர்’ முறையை தவிர்க்க வேண்டும். தகுதி வாய்ந்த அனைத்து ஒப்பந்ததாரர்களும் போட்டியில் பங்கேற்க நியாயமான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.
மேலும், ஒப்பந்ததாரரைத் தகுதி நீக்கம் செய்யும் அல்லது ஒப்பந்தப்புள்ளியை நிராகரிக்கும் போது, அதற்கான காரணங்களை எழுத்துப்பூர்வமாக ஒப்பந்தப்புள்ளி மதிப்பீட்டுக் குழு தெரிவிக்க வேண்டும் என தெளிவாக உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தப் புதிய வழிகாட்டுதல்கள் மூலம் பொதுப்பணித் துறையில் ஒப்பந்தப் பணிகள் மிகவும் வெளிப்படையாகவும், நேர்மையாகவும், போட்டித்தன்மையுடனும் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தரமான பணிகளுக்கு வழிவகுக்கும் மற்றும் அரசுக்கும், ஒப்பந்ததாரர்களுக்கும், பொதுமக்களுக்கும் நன்மை பயக்கும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுப்பணித் துறையில் நீண்ட காலமாக இருந்து வந்த புகார்கள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு இந்த நடவடிக்கை முக்கிய தீர்வாக அமையும் என அரசியல் மற்றும் நிர்வாக வட்டாரங்கள் பார்க்கின்றன. இந்த உத்தரவு அனைத்து அதிகாரிகளுக்கும் உடனடியாக அனுப்பப்பட்டு செயல்படுத்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: விஸ்வரூபம் எடுக்கும் மின்தடை பிரச்னை! விழிபிதுங்கும் தவெக! அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் அறிவுரை!