தரமில்லை எனில் வேண்டாம்! ரேஷன் அரிசி தரத்தில் அதிரடி சோதனை! தமிழகம் முழுவதும் அதிகாரிகள் ஆய்வு!
கிடங்குகளில் அரிசியின் தரம் உறுதி செய்யப்பட்ட பிறகே, அவை ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழக ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு தரமான அரிசி மட்டுமே வழங்கப்படுவதை உறுதி செய்ய, அரசு அதிரடி நடவடிக்கையை தொடங்கியுள்ளது. இதற்காக மாவட்ட வாரியாக கூட்டுறவு மற்றும் உணவுத் துறை அதிகாரிகள் அடங்கிய சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு, அரிசியின் தரம் குறித்து தீவிர ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் சுமார் 2.25 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரேஷன் கடைகள் மூலம் இலவச அரிசி வழங்கப்படுகிறது. இதற்காக மாதந்தோறும் சுமார் 3.75 லட்சம் டன் அரிசி தேவைப்படுகிறது. மத்திய அரசின் ஒதுக்கீட்டின் அடிப்படையில் கிடைக்கும் அரிசியை, தமிழக நுகர்பொருள் வாணிபக் கழகம் கொள்முதல் செய்து, கிடங்குகளில் இருப்பு வைக்கிறது. பின்னர் கூட்டுறவு துறை மூலம் ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்பட்டு, பயனாளிகளுக்கு விநியோகிக்கப்படுகிறது.
ரேஷன் அரிசியின் தரம் தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து அவ்வப்போது புகார்கள் எழுவது வழக்கம். அரிசியின் தரம் குறைவதற்கு கொள்முதல் மற்றும் விநியோகத்தில் எந்த கட்டத்தில் குறைபாடு ஏற்படுகிறது என்பது தொடர்பாக இரு துறைகளிடையே குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன.
இதையும் படிங்க: ரேஷன் அரிசியில் ரூ.10.82 கோடி முறைகேடு? 6,000 டன் பழைய அரிசி சிக்கியது; 2 அதிகாரிகள் சஸ்பெண்ட்!
இந்த விவகாரம் தொடர்பாக சமீபத்தில் சட்டசபையில் நடைபெற்ற கூட்டுறவு மற்றும் உணவுத் துறை மானியக் கோரிக்கை விவாதத்திலும் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சியினர் இடையே கடும் விவாதம் நடைபெற்றது. அப்போது ரேஷன் கடைகளில் தரமான அரிசி வழங்கப்படும் என உணவுத் துறை அமைச்சர் உறுதியளித்தார்.
இதையடுத்து, ஒவ்வொரு மாவட்டத்திலும் கூட்டுறவு மண்டல இணைப் பதிவாளர், நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் மற்றும் தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் இடம்பெறும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுக்கள் நேற்று முதல் மாவட்டங்களில் உள்ள நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கிடங்குகளுக்கு நேரில் சென்று அரிசியின் தரத்தை ஆய்வு செய்து வருகின்றன. இந்த சிறப்பு ஆய்வு நாளை வரை நடைபெறுகிறது.
கிடங்குகளில் அரிசியின் தரம் உறுதி செய்யப்பட்ட பிறகே, அவை ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இரு துறைகளின் அதிகாரிகளும் இணைந்து ஆய்வு செய்வதால், அரிசியின் தரத்தை உறுதி செய்வதில் கூடுதல் கவனம் செலுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஆய்வு அறிக்கை கூட்டுறவு மற்றும் உணவுத் துறை செயலரிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளது. இந்த நடவடிக்கையால் ரேஷன் கடைகளில் தரமற்ற அரிசி விநியோகிக்கப்படுவது கட்டுப்படுத்தப்படும் என அரசு தரப்பில் எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: MSME நிறுவனங்களுக்கு குட் நியூஸ்: சோலார் அமைத்தால் 100% மின்சார வரி விலக்கு! தமிழக அரசு அதிரடி!