×
 

MSME நிறுவனங்களுக்கு குட் நியூஸ்: சோலார் அமைத்தால் 100% மின்சார வரி விலக்கு! தமிழக அரசு அதிரடி!

புதிய வரிச்சலுகை நடைமுறைக்கு வந்தால் சோலார் மின் நிலையம் அமைக்க விரும்பும் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ஆரம்ப முதலீட்டுச் சுமை மற்றும் மின்சாரச் செலவில் ஓரளவு நிவாரணம் கிடைக்கும்.

மேற்கூரையில் சூரியசக்தி மின் நிலையம் அமைக்கும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு தமிழக அரசு முக்கிய சலுகையை அறிவிக்க உள்ளது. ‘வெற்றி சோலார்’ திட்டத்தின் கீழ் தகுதியான நிறுவனங்களுக்கு 5 ஆண்டுகளுக்கு 100 சதவீத மின்சார வரி விலக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கான அறிவிப்பை வெளியிடுவதற்கான ஆய்வை மின் துறை தொடங்க உள்ளது.

தொழில் நிறுவனங்களின் மின்சார செலவைக் குறைக்கும் நோக்கில், சொந்த கட்டடங்களில் மேற்கூரை சூரியசக்தி மின் நிலையங்களை அமைக்க தொழில்முனைவோர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதையடுத்து, தமிழக அரசு இந்த வரிச்சலுகையை வழங்க திட்டமிட்டுள்ளது.

தற்போது தொழிற்சாலைகள் மற்றும் பிற நிறுவனங்களின் மின் பயன்பாட்டுக் கட்டணத்தில் 5 சதவீதம் மின்சார வரியாக வசூலிக்கப்படுகிறது. சொந்த பயன்பாட்டிற்காக சூரியசக்தி மின் நிலையம் அமைத்து, அதில் உற்பத்தியாகும் உபரி மின்சாரத்தை மூன்றாம் தரப்பினருக்கு விற்பனை செய்தாலும் 5 சதவீத மின்சார வரி செலுத்த வேண்டியுள்ளது. மேலும், சொந்த மின் உற்பத்தி நிலையத்தில் தயாரிக்கப்படும் மின்சாரத்தை பயன்படுத்தும்போது யூனிட்டுக்கு 10 காசு வரியும் விதிக்கப்படுகிறது.

இதையும் படிங்க: டாஸ்மாக் முறைகேடு வழக்கு: லஞ்ச ஒழிப்பு அலுவலகத்தில் செந்தில்பாலாஜி ஆஜர்! அதிகாரிகள் விசாரணை!

இந்த நிலையில், புதிய வரிச்சலுகை நடைமுறைக்கு வந்தால் சோலார் மின் நிலையம் அமைக்க விரும்பும் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ஆரம்ப முதலீட்டுச் சுமை மற்றும் மின்சாரச் செலவில் ஓரளவு நிவாரணம் கிடைக்கும். ஆனால், வரிச்சலுகை எப்போது முதல் அமலுக்கு வரும், யார் யார் தகுதியானவர்கள் என்பது தொடர்பான இறுதி விதிமுறைகள் அரசு அறிவிப்புக்குப் பிறகே தெளிவாகும்.

இதற்கிடையில், வீடுகளுக்கான பிரதம மந்திரி சூரிய வீடு திட்டத்திலும் பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். கோவையில் மின்வாரியம் சார்பில் நடைபெற்ற சிறப்பு முகாமில், திட்டத்தில் விண்ணப்பிப்பது குறித்து பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்த திட்டத்தில் 1 கிலோவாட்டுக்கு ரூ.30 ஆயிரம், 2 கிலோவாட்டுக்கு ரூ.60 ஆயிரம், 3 கிலோவாட் மற்றும் அதற்கு மேல் ரூ.78 ஆயிரம் வரை மானியம் வழங்கப்படுகிறது. சோலார் நிறுவும் பணி முடிந்த பின்னர், விதிமுறைகளுக்கு உட்பட்டு 7 முதல் 30 நாட்களுக்குள் மானியம் பயனாளியின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஒரு கிலோவாட் சூரியசக்தி அமைப்பு தினமும் சராசரியாக 4 முதல் 5 யூனிட் வரை மின்சாரம் உற்பத்தி செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வீடுகளிலும் தொழில் நிறுவனங்களிலும் சூரியசக்தி பயன்பாட்டை அதிகரிக்கும் நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன.

இதையும் படிங்க: சென்னை 387! வளரட்டும் பெருநகரம்! உயரட்டும் மக்களின் வாழ்க்கைத்தரம்! முதல்வர் விஜய் வாழ்த்து!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share