யாரு பணத்தை யாரு எடுக்குறது? கோயில் நிதியில் கட்டுமானங்கள்? ரத்து செய்தது தமிழக அரசு!
உயர் நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து, கோவில் நிதியில், பல்வேறு கோவில்களில், 246 கோடி ரூபாயில், திருமண மண்டபங்கள் மற்றும் வணிக வளாகங்கள் கட்டும் உத்தரவை ரத்து செய்து, தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.
தமிழக அரசு கோவில் நிதியை புனிதமான பணிகளுக்கு மட்டும் பயன்படுத்தும் முடிவை நடைமுறைப்படுத்தியுள்ளது. உயர் நீதிமன்ற தீர்ப்பை அடுத்து, திருமண மண்டபங்கள் மற்றும் வணிக வளாகங்கள் கட்டுவதற்காக ஒதுக்கப்பட்ட 246 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகளை ரத்து செய்து புதிய அரசாணை வெளியிட்டுள்ளது.
தி.மு.க. ஆட்சியின் போது ஹிந்து சமய அறநிலையத்துறை மூலம் பல கோவில்களில் திருமண மண்டபங்கள் மற்றும் வணிக வளாகங்கள் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்காக கோவில் நிதி பயன்படுத்தப்பட்டது. திண்டுக்கல், தேனி, பழனி உள்ளிட்ட 27 கோவில்களில் மட்டும் 80 கோடி ரூபாய் மதிப்பில் திருமண மண்டபங்கள் மற்றும் வணிக வளாகங்கள் கட்ட அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.
இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிக்குமார் மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். “கோவில் நிதியை வணிக நோக்கத்திற்கு பயன்படுத்துவது சட்டவிரோதம்” என அவர் வாதிட்டார். நீதிமன்றம் அரசின் விளக்கத்தை ஏற்காமல், 2025 ஆகஸ்ட் மாதம் வணிக வளாகங்கள் உள்ளிட்ட பணிகளுக்கு வழங்கப்பட்ட அரசாணைகளை ரத்து செய்து உத்தரவிட்டது.
இதையும் படிங்க: அரசு நிறுவனங்களில் முதலீடு செய்த கோயில் நிதி!! பாதுகாப்பாக இருக்கும் என ஹைகோர்ட்டில் அரசு உத்தரவாதம்!
தற்போது தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு, கவர்னர் உரையில் “கோவில் நிதி புனிதமான பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும்” என தெரிவிக்கப்பட்டது. அதனடிப்படையில், தி.மு.க. ஆட்சியில் அறிவிக்கப்பட்ட அனைத்து திருமண மண்டபம் மற்றும் வணிக வளாக கட்டுமான பணிகளுக்கான அரசாணைகளை ரத்து செய்து நேற்று அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அரசு வெளியிட்ட அறிக்கையின்படி, 115.77 கோடி ரூபாய் மதிப்பிலான 29 திருமண மண்டபங்கள் மற்றும் 130.08 கோடி ரூபாய் மதிப்பிலான 17 வணிக வளாகங்கள் உள்ளிட்ட மொத்தம் 46 பணிகளுக்கு வழங்கப்பட்டிருந்த நிர்வாக அனுமதிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்தப் பணிகள் நீதிமன்ற தடை மற்றும் கோவில்களின் நிதி சுமை காரணமாகவே தொடங்கப்படாமல் இருந்தன.
தஞ்சாவூர், தென்காசி, திருச்சி, திண்டுக்கல், தேனி, திருவள்ளூர், விழுப்புரம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, காஞ்சிபுரம், கோவை, சென்னை, செங்கல்பட்டு, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள கோவில்களில் இந்த 46 பணிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ரத்து செய்யப்பட்ட இந்த நிதியை கோவில்களின் புனரமைப்பு, பக்தர்கள் வசதிகள் உள்ளிட்ட புனிதமான திட்டங்களுக்கு பயன்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இந்த முடிவு கோவில் நிதியின் சரியான பயன்பாட்டை உறுதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: UPSC தேர்ச்சி பெற்றவர்களுக்கு ₹25,000 ஊக்கத்தொகை! தமிழக அரசு அறிவிப்பு!