×
 

"இந்து விழாக்களுக்கு வாழ்த்து சொல்ல மறுப்பது ஏன்?" - முதலமைச்சருக்கு தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி!

இன்று இந்து தர்மம் மிகப்பெரிய சவாலுக்கு உள்ளாகி இருக்கிறது. இந்து மக்களின் விழாக்களுக்கு ஏன் நீங்கள் வாழ்த்து தெரிவிப்பதில்லை? என்று தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்து தர்மம் இன்று மிகப்பெரிய சவாலுக்கு உள்ளாகி இருப்பதாகத் தெரிவித்த தமிழக பாஜக மூத்தத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், இந்து மக்களின் விழாக்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உட்பட திமுகவினர் வாழ்த்துச் சொல்ல மறுப்பது ஏன் என்று பகிரங்கமாகக் கேள்வியெழுப்பினார். இது ஒரு கடமை என்பதைச் சுட்டிக்காட்டினார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் ஆளும் கட்சியின் நிலைப்பாட்டைக் கடுமையாக விமர்சித்த தமிழிசை சௌந்தரராஜன், அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபுவின் செயல்பாடுகள் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்றார். "நீதிமன்றத்தில் திருப்பரங்குன்றம் வழக்கு இன்னும் நிலுவையில் இருக்கும்போது, ஒரு முறைதான் தீபம் ஏற்றப்படும், மற்றபடி கேட்க அவர்களுக்கு உரிமை இல்லை என்று சொல்வதற்கு இவருக்கு உரிமையைத் தந்தது யார்?" என்று அவர் கடுமையான விவாதத்தை முன்வைத்தார். மேலும், அங்கேயுள்ள பூசாரிகளே, "நாங்கள் சொல்லாததையும் சொன்ன மாதிரி வெளிப்படுத்தி இருக்கிறார்கள்" என்று கூறியிருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

பாஜக ஆட்சி செய்யும் இடங்களில் மதநல்லிணக்கம் இருப்பதால்தான் மக்கள் அமைதியாக இருந்து மீண்டும் மீண்டும் வாக்குகளைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று கனிமொழி எம்.பி.க்கு அவர் பதிலடி கொடுத்தார்.  மத வேற்றுமையை ஏற்படுத்துவது திமுகதான் என்றும், இந்து மக்களை வேற்றுமைப்படுத்திப் பார்க்கவில்லை என்றால், ஏன் இந்து மக்களின் விழாக்களுக்கு முதலமைச்சர் வாழ்த்துச் சொல்ல மறுக்கிறார் என்றும் அவர் பிரதான கேள்வியை எழுப்பினார். திருப்பரங்குன்றத்தை கலவர பூமியாக்கினது அவர்கள்தான் என்றும், அனுமதி கொடுத்திருந்தால் அது அமைதியாகப் போயிருக்கும் என்றும் அவர் குற்றப்பத்திரிகை வாசித்தார்.

இதையும் படிங்க: மதுரை மாநாட்டில் ரூ.36,660 கோடி முதலீடு! 56,766 பேருக்கு வேலைவாய்ப்பு!- முதல்வர் ஸ்டாலினின் மெகா திட்டம்!

அம்பேத்கர் சிலைக்கு மாலையிடச் சென்றபோது, 'வெளியேறு, வெளியேறு' என்று சத்தம் போட்டதாகவும், இது பாரதிய ஜனதா கட்சியின் முழுமையான உரிமையைப் பறிக்கும் செயல் என்றும் அவர் குறை கூறினார்.  மத்திய அமைச்சர் முருகன் விளிம்பு நிலை குடும்பத்தில் பிறந்து பாராளுமன்றத்தில் பேசும் உரிமையைப் பெற்றுத் தந்ததன் மூலம் சமூக நீதியைப் பாதுகாப்பது பாஜகதான் என்று அவர் கொள்கை விளக்கம் அளித்தார்.

"நீங்கள் உதயநிதியைத் துணை முதலமைச்சராக வைத்திருக்கின்ற வரை, நீங்கள் சமூக நீதியைப் பற்றிப் பேச முடியாது" என்றும், வாரிசு மற்றவர்களுக்கான அங்கீகாரத்தை மறுத்துவிட்டு எப்படிச் சமூக நீதியைப் பற்றிப் பேச முடியும் என்றும் அவர் அனல் கக்கினார்.

தாங்கள் ஆர்ப்பாட்டத்துக்கு நேரம் கேட்டால் கொடுக்க மறுக்கும் காவல்துறை, நேற்று நீதியரசர்களை எதிர்த்துக் கம்யூனிஸ்டுகள் ஆர்ப்பாட்டம் நடத்த எப்படி அனுமதி கொடுத்தது? என்று கேள்வி எழுப்பி, காவல்துறையின் பாரபட்சத்தை அவர் சுட்டிக்காட்டினார். இதுபோலவே, தம்பி விஜய் போன்றவர்கள் ஆர்ப்பாட்டத்துக்கு நேரம் கேட்டால் அனுமதி கொடுக்க மறுப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.  அமித் ஷா கட்டளையிடுவதாகச் சொல்வதை வன்மையாகக் கண்டித்த அவர், ஒரு கூட்டணி கட்சி என்று வரும்போது அரசியல் தர்மத்தை மதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.


 

இதையும் படிங்க: கூடங்குளம் அணு உலை ஆபத்து: பெட்ரோலை வைத்து கொள்ளை; மத்திய அரசை அட்டாக் செய்த சபாநாயகர் அப்பாவு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share