கோவில்களில் மொபைல் தடை விவகாரத்தில் திடீர் திருப்பம்! அடுத்தடுத்து சிக்கல்கள்! தீர்வாக புதிய யோசனை!
ஆனால், மொபைல் போனை பாதுகாப்பு அறையில் ஒப்படைப்பது தொடர்பாக பக்தர்கள் சில நடைமுறை சிக்கல்களை சந்திப்பதாக தெரிவிக்கின்றனர்.
சென்னை: முதுநிலை கோவில்களுக்குள் மொபைல் போன் எடுத்துச் செல்ல விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடு, ஆன்மிக சூழலை பாதுகாக்கும் நோக்கத்துடன் அமல்படுத்தப்பட்டாலும், நடைமுறையில் பக்தர்களுக்கு பல்வேறு சிரமங்களை ஏற்படுத்தி வருவதாக புகார்கள் எழுந்துள்ளன. இதற்கு மாற்றாக, கோவிலுக்குள் போட்டோ அல்லது வீடியோ எடுப்பவர்களிடம் மட்டும் கடுமையான நடவடிக்கை எடுக்கலாம் என பக்தர்கள் தரப்பில் ஆலோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
கடந்த 1-ம் தேதி முதல் முதுநிலை கோவில்களில் மொபைல் போன் எடுத்துச் செல்வதற்கு தடை அமல்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கோவில்களின் புனிதத்தன்மை மற்றும் அமைதியான சூழலை பாதுகாக்க முடியும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், மொபைல் போனை பாதுகாப்பு அறையில் ஒப்படைப்பது தொடர்பாக பக்தர்கள் சில நடைமுறை சிக்கல்களை சந்திப்பதாக தெரிவிக்கின்றனர்.
மொபைல் போன் பாதுகாப்புக்காக வசூலிக்கப்படும் ரூ.5 கட்டணத்தில் சில்லரை தொடர்பான பிரச்னைகள் ஏற்படுவதாகவும், சில இடங்களில் சர்வர் மெதுவாக இயங்குவது அல்லது செயல்படாமல் போவதால் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: அறநிலையத் துறைக்கு செக் வைத்த தகவல் ஆணையம்! கோவில் நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மைக்கு உத்தரவு!
இன்றைய டிஜிட்டல் காலத்தில் பெரும்பாலானோர் பணப்பரிவர்த்தனை உள்ளிட்ட தேவைகளுக்கு மொபைல் போனையே சார்ந்துள்ளனர். இதனால் கோவில் வளாகத்தில் பிரசாதம் அல்லது அர்ச்சனை பொருட்கள் வாங்கும்போதும் சிலருக்கு சிரமம் ஏற்படுவதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், கோவிலுக்கு வரும் பெரும்பாலான பக்தர்கள் போட்டோ, வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடுவதில்லை என்பதால், அனைவருக்கும் மொபைல் போன் தடையை அமல்படுத்துவதற்கு பதிலாக விதிமீறுபவர்களை மட்டும் கண்காணிக்கலாம் என ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவிலுக்குள் போட்டோ, வீடியோ எடுப்பவர்களின் மொபைல் போனை பறிமுதல் செய்து, குறிப்பிட்ட காலத்துக்கு பிறகு வழங்கும் நடைமுறையை கொண்டு வரலாம் என்றும் சிலர் கூறுகின்றனர். இதற்காக தனியாக கண்காணிப்பு குழு அமைத்து, பறிமுதல் செய்யப்படும் போன்களை பாதுகாப்பாக வைக்க ஏற்பாடு செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, மூத்த குடிமக்கள், கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் குழந்தைகளுடன் வரும் தாய்மார்களுக்கு சில தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மொபைல் போன் தடையால் ஏற்பட்டுள்ள சிரமங்கள் குறித்து அறநிலையத் துறை அதிகாரிகளிடம் கருத்துகள் கேட்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கருவறையில் மொபைல் போனுக்கு முழுமையான கட்டுப்பாடு விதித்துவிட்டு, வெளிப்பிரகாரங்களில் குறிப்பிட்ட விதிமுறைகளுடன் அனுமதிப்பது குறித்தும் ஆலோசனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இதனால், இந்த விவகாரத்தில் விரைவில் சில மாற்றங்கள் அல்லது தளர்வுகள் குறித்த அறிவிப்பு வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு பக்தர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: திருப்பதி போல தமிழக கோவில்களிலும் புதிய நடைமுறை? அமைச்சர் ரமேஷ் வெளியிட்ட பரபரப்பு தகவல்!