திருப்பதி போல தமிழக கோவில்களிலும் புதிய நடைமுறை? அமைச்சர் ரமேஷ் வெளியிட்ட பரபரப்பு தகவல்!
கருவறை மற்றும் கோவில் வளாக காட்சிகளை சமூக வலைதளங்களில் வெளியிடுவதை கட்டுப்படுத்தும் நோக்கத்திலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கூறினார்.
திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர், ரேஷன் அரிசி தரம் முதல் சட்டசபை நடைமுறைகள், கோவில் நிர்வாகம், திருச்சி பாலங்கள் என பல்வேறு விவகாரங்கள் குறித்து விளக்கம் அளித்தார். ரேஷன் அரிசி தரம் தொடர்பாக எழுந்துள்ள புகார்களை சரிசெய்து, பொதுமக்களுக்கு தரமான பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
சட்டமன்ற உறுப்பினர் கே.என். நேரு, தான் ரேஷன் அரிசியை பயன்படுத்துவதாக தெரிவித்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக கூறிய அமைச்சர், அதே நேரத்தில் பல பகுதிகளில் பொதுமக்கள் ரேஷன் அரிசியை பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதாக புகார்கள் உள்ளன என்றார். இந்த குறைகளை கண்டறிந்து சரிசெய்யும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
சட்டசபையில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளிப்பது ஜனநாயக நடைமுறை என்றும், அவையில் பயன்படுத்தப்படும் சில வார்த்தைகள் அவை மரபுப்படி நீக்கப்படுவது வழக்கம் என்றும் அமைச்சர் கூறினார். தற்போதைய ஆட்சியில் ஜனநாயகத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதால் பல்வேறு கருத்துகள் வெளிப்படையாக முன்வைக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தரமில்லை எனில் வேண்டாம்! ரேஷன் அரிசி தரத்தில் அதிரடி சோதனை! தமிழகம் முழுவதும் அதிகாரிகள் ஆய்வு!
சட்டசபையில் சில எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமைச்சர்கள் பேசும்போது இடையூறு செய்வதாகவும், கூச்சல், முழக்கம் உள்ளிட்டவற்றில் ஈடுபடுவதாகவும் அமைச்சர் குற்றம்சாட்டினார். சட்டசபையை சந்தை போல நடத்துகிறார்களா என்ற கேள்வியையும் எழுப்பிய அவர், தங்களது தரப்பில் தவறான வார்த்தைகள் பயன்படுத்தப்படவில்லை என்றார்.
இந்து சமய அறநிலையத்துறையில் பல்வேறு புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டதை தொடர்ந்து, திமுக தரப்பில் சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் பரப்பப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான மற்றும் சிதிலமடைந்த கோவில்களை புதுப்பித்து வழிபாட்டுக்கு கொண்டு வரும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
திருச்செந்தூர் கோவிலில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளால் கடந்த காலத்தை விட நிலைமை பெரிதும் மாறியுள்ளதாகவும், வார இறுதி மற்றும் முக்கிய நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பதால் நிர்வாக ரீதியாக சவால்கள் இருப்பதாகவும் அமைச்சர் கூறினார். பணம் பெற்றுக்கொண்டு சிறப்பு தரிசனத்துக்கு அழைத்துச் செல்லும் நடைமுறையை கட்டுப்படுத்த தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
முதற்கட்டமாக 50க்கும் மேற்பட்ட முக்கிய கோவில்களில் மொபைல் போன்களை பாதுகாப்பாக ஒப்படைக்க மொபைல் கவுண்டர்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். கருவறை மற்றும் கோவில் வளாக காட்சிகளை சமூக வலைதளங்களில் வெளியிடுவதை கட்டுப்படுத்தும் நோக்கத்திலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கூறினார்.
திருப்பதியைப் போல தமிழக கோவில்களிலும் இந்த நடைமுறையை பக்தர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும், அமைதியாகவும் மனநிறைவுடனும் தரிசனம் செய்வதற்காகவே இந்த கட்டுப்பாடுகள் கொண்டு வரப்படுவதாகவும் அமைச்சர் விளக்கினார்.
இதையும் படிங்க: MSME நிறுவனங்களுக்கு குட் நியூஸ்: சோலார் அமைத்தால் 100% மின்சார வரி விலக்கு! தமிழக அரசு அதிரடி!