மீண்டும் மக்கள் முன் விஜய்! அ.தி.மு.க., மாஜிக்கள் இணைய வாய்ப்பு! ரகசியம் காக்கும் நிர்வாகிகள்!
த.வெ.க., தலைவர் விஜய், இன்று கோவை வர உள்ள நிலையில், அ.தி.மு.க., முன்னாள் எம்,எல்.ஏ., உள்ளிட்டோர், அவரது முன்னிலையில் கட்சியில் இணைய உள்ளதாக, த.வெ.க., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) தலைவர் நடிகர் விஜய், 2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு கட்டமாக, இன்று (டிசம்பர் 18) கொங்கு மண்டலத்தில் முதல்முறையாக ஈரோடு மாவட்டத்தில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
2024 பிப்ரவரியில் த.வெ.க.வைத் தொடங்கிய விஜய், அதே ஆண்டு அக்டோபரில் விக்கிரவாண்டியில் முதல் அரசியல் மாநாட்டையும், ஆகஸ்ட்டில் மதுரையில் இரண்டாவது மாநாட்டையும் நடத்தினார்.
அதன்பிறகு தொடங்கிய சுற்றுப்பயணத்தில், செப்டம்பர் 27ஆம் தேதி கரூரில் நடந்த நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல் காரணமாக 41 பேர் உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்தது. இதனால் சிறிய இடைவெளிக்குப் பிறகு, நவம்பர் 23இல் சுற்றுப்பயணத்தை மீண்டும் தொடங்கிய விஜய், டிசம்பர் 9ஆம் தேதி புதுச்சேரியில் பொதுக்கூட்டத்தில் பேசினார்.
இதையும் படிங்க: விஜயின் ஈரோடு மக்கள் சந்திப்பு! த.வெ.க.,வில் இணையும் பிரபலங்கள் யார்? லிஸ்ட் ரெடி!
இதன் தொடர்ச்சியாக, இன்று காலை 9.30 மணிக்கு சென்னையிலிருந்து சிறப்பு விமானம் மூலம் கோவை விமான நிலையத்துக்கு வருகை தருகிறார் விஜய். அங்கிருந்து சின்னியம்பாளையத்தில் உள்ள தனியார் ஓட்டலுக்கு சென்று, அரை மணி நேரம் கட்சி நிர்வாகிகளைச் சந்திக்கிறார். அங்கு முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஒருவர் தலைமையில் பலர் த.வெ.க.வில் இணைய உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்குப் பிறகு, காலை 11.30 மணிக்கு ஈரோடு மாவட்டத்துக்கு புறப்பட்டு செல்லும் விஜய், விஜயமங்கலம் சுங்கச் சாவடி அருகே சரளை கிராமத்தில் உள்ள விஜயபுரி அம்மன் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் நடக்கும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றுகிறார். இந்த நிகழ்ச்சி மதியம் 1 மணி வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுமார் 35,000 பேர் கலந்துகொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நிகழ்ச்சி முடிந்த பிறகு, இரவு 7.30 மணிக்கு கோவை விமான நிலையம் வழியாக சென்னை திரும்புகிறார் விஜய். அவரது வருகை குறித்து அதிக கூட்டம் திரள வாய்ப்புள்ளதால், பயணத் திட்டத்தை த.வெ.க. நிர்வாகிகள் ரகசியமாக வைத்துள்ளனர்.
கரூர் சம்பவத்துக்குப் பிறகு தமிழகத்தில் விஜயின் முதல் பொது நிகழ்ச்சி இதுவாகும். கொங்கு மண்டலத்தில் த.வெ.க.வின் செல்வாக்கை வலுப்படுத்தும் வகையில் இந்த சுற்றுப்பயணம் அமையும் என கட்சியினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: காஞ்சியில் மக்கள் சந்திப்பு… முன்னெச்சரிக்கை… முன்கூட்டியே வந்த விஜய்..!