நீதிமன்றங்கள் வழங்குவது நீதியா தீர்ப்பா?: அரசமைப்பு சட்ட பாதுகாப்பு மாநாட்டில் தமிமுன் அன்சாரி!
சென்னையில் நடைபெற்ற அரசமைப்புச் சட்ட பாதுகாப்பு மாநாட்டில் பேசிய தமிமுன் அன்சாரி, பாசிசத்தை வீழ்த்த ஒன்றுபட்ட செயல்திட்டம் அவசியம் என வலியுறுத்தினார்.
சென்னையை அடுத்த நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்று வரும் அரசமைப்புச் சட்ட பாதுகாப்பு மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான தமிமுன் அன்சாரி, நாட்டின் தற்போதைய நீதித்துறை செயல்பாடு மற்றும் ஆர்எஸ்எஸ், பாஜகவின் சித்தாந்த ஆக்கிரமிப்புகள் குறித்து மிகக் காட்டமாக உரையாற்றினார்.
நீதிபதி அரி பரந்தாமன் தலைமையில் நடைபெறும் இந்த முக்கிய மாநாட்டில் முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ், உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி செல்லமேஸ்வர், நடிகர் பிரகாஷ்ராஜ் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஜவாஹிருல்லா, நெல்லை முபாரக் உள்ளிட்ட பல முக்கிய ஆளுமைகள் கலந்துகொண்டு உரையாற்றினர்.
மாநாட்டில் ஆவேசமாக உரையாற்றிய சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி, "பாசிசத்தை வீழ்த்த வேண்டும் என்ற ஜனநாயகப் பயணத்தில் நமக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது. கடந்த காலங்களில் மத்தியில் ஆளும் பாஜக அரசு நமது அரசியல் சாசனத்திற்கு எதிராக ஏற்படுத்தியுள்ள நுண்ணிய சிதைவுகளையும் அபத்தங்களையும் எந்தவொரு புதிய ஆட்சி வந்தாலும் உடனே சரி செய்துவிட முடியாது; அதனைச் சீரமைக்கக் குறைந்தது 10 முதல் 15 ஆண்டுகள் வரை பிடிக்கும். அரசு அமைப்புகள், அதிகார மையங்கள் அனைத்திலும் தங்களது நச்சுச் சித்தாந்தங்களை அவர்கள் ஆழமாகப் புகுத்தியுள்ளனர். இதற்கு அண்மைக் கால மதுரை நீதிமன்ற நிகழ்வுகளே கண்முன்னே சாட்சியாக நிற்கின்றன" என்று சாடினார்.
இதையும் படிங்க: தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி உதயநிதி ஸ்டாலின் மனு: மிலானி பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு!
தொடர்ந்து பேசிய அவர், "இன்றைய காலகட்டத்தில் நீதிமன்றங்கள் வழங்குவது உண்மையான நீதியா அல்லது வெறும் தீர்ப்பா என்ற மிகப் பெரிய ஐயம் எழுகிறது; நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் போன்றவர்கள் வழங்கும் தீர்ப்புகள் குறித்து நாம் தீவிரமாகச் சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவிடம் ஒரு தெளிவான செயல் திட்டம் உள்ளது, ஆனால் பாசிசத்தை எதிர்க்கும் நம்மிடம் ஒன்றுபட்ட செயல்திட்டம் இல்லை என்பதை நாம் வெளிப்படையாக ஒப்புக்கொள்ள வேண்டும். ஜனநாயகத்தையும் அரசியல் சாசனத்தையும் பாதுகாக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து மக்கள் எழுச்சியை ஒரு செயல்திட்டமாக வகுத்துச் செயல்பட்டால் மட்டுமே இந்த பாசிசத்தை முழுமையாக வீழ்த்தி வெற்றி பெற முடியும்" என்று திட்டவட்டமாக முழங்கினார்.
இதையும் படிங்க: சீமைக்கருவேலம் அகற்றும் வழக்கு: தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் கடும் கண்டனம்!