×
 

டெல்லி வரை பற்றி எரிந்த தி.குன்றம் தீபம் விவகாரம்!! சட்டசபையில் பாஜ, அதிமுக வாய் திறக்காத ஷாக்! கப்சிப்!

பட்ஜெட் மீதான விவாதம் நேற்று துவங்கிய நிலையில், எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமிக்கும், அமைச்சர்களுக்கும் இடையே, ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பல பிரச்னைகள் குறித்து வாக்குவாதம் நடந்தது.

தமிழகத்தை மட்டுமல்ல, நாட்டையே உலுக்கிய திருப்பரங்குன்றம் தீபத் தூண் விவகாரத்தில் மதுரை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆண்டுதோறும் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்றும், அதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது திமுக அரசுக்கு மிகப்பெரிய தோல்வியாக பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் வழங்கிய தீபம் ஏற்ற உத்தரவை செயல்படுத்தாததால், மதுரை கலெக்டர் மற்றும் போலீஸ் கமிஷனர் ஐகோர்ட்டில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினர். 

இந்நிலையில், மதுரை ஐகோர்ட் தற்போது அரசுக்கு கடும் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த தீர்ப்பு தேசிய அளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. லோக்சபாவில் கூட இப்பிரச்னை எழுப்பப்பட்டு, நீதிபதி சுவாமிநாதனை தகுதி நீக்கம் செய்யக் கோரி காங்கிரஸ், திமுக உள்ளிட்ட இண்டி கூட்டணி கட்சிகள் சபாநாயகரிடம் நோட்டீஸ் அளித்தன.

இதையும் படிங்க: ஐயோ! திருப்பரங்குன்றம் தொகுதி வேணாம்! திமுக கூட்டணியில் குழப்பம்! மார்க்., கம்யூ கல்தா!!

இந்நிலையில், 16-வது தமிழக சட்டசபையின் கடைசி கூட்டத் தொடர் இடைக்கால பட்ஜெட் தாக்கலுடன் தொடங்கியது. பட்ஜெட் விவாதத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி மற்றும் அமைச்சர்களுக்கு இடையே ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கடுமையான வாக்குவாதம் நடந்தது. ஆனால் ஆச்சரியமாக, திருப்பரங்குன்றம் தீபம் விவகாரத்தை அதிமுகவோ பாஜகவோ எழுப்பவில்லை. பாஜக சார்பில் யாரும் பேசவில்லை.

இது குறித்து பாஜக நிர்வாகி ஒருவர் கூறுகையில், "கவர்னர் உரை விவாதத்தின்போது பாஜக, அதிமுக எம்எல்ஏக்கள் இப்பிரச்னையை எழுப்பினர். ஆனால் அவை அனைத்தும் சட்டசபை குறிப்பில் இருந்து சபாநாயகரால் நீக்கப்பட்டன. இருப்பினும் இன்று (கூட்டத்தில்) திருப்பரங்குன்றம் விவகாரத்தை எம்எல்ஏக்கள் எழுப்புவார்கள் என்று நம்புகிறோம்" என்றார்.

இந்த மௌனம் தமிழக அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே நீதிமன்றத்தில் தோற்ற திமுக அரசுக்கு சட்டசபையில் எதிர்க்கட்சிகள் அழுத்தம் கொடுக்காதது ஏன்? என்ற கேள்வி எழுந்துள்ளது. திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம் மத உணர்வுகளுடன் தொடர்புடையது என்பதால், இந்த தீர்ப்பு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

திமுக அரசு இனி இந்த உத்தரவை எப்படி செயல்படுத்தப் போகிறது என்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த விவகாரம் 2026 சட்டமன்றத் தேர்தலில் முக்கிய பிரசார அம்சமாக மாறலாம் என்று அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

இதையும் படிங்க: மதுரையில் மோடி!! திருப்பரங்குன்றத்தில் வழிபாடு! பாஜகவின் அடுத்தக்கட்ட ப்ளான்!! உறைந்து போன திமுக!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share