×
 

திருப்பதி கலப்பட நெய் விவகாரம்! குற்றவாளியை கண்டுபிடிக்க நடவடிக்கை! கமிஷன் அமைக்கிறது ஆந்திரா!

திருப்​பதி ஏழு​மலை​யான் கோயி​லில் நடை​பெற்ற கலப்பட நெய் விவ​காரம் தற்போது விஸ்​வரூபம் எடுத்​துள்​ளது

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடந்த கலப்பட நெய் ஊழல் விவகாரம் ஆந்திர அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க விசாரணை கமிஷன் அமைக்க ஆந்திர அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

2019 முதல் 2024 வரை திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் (TTD) கலப்பட நெய் பயன்படுத்தி பிரசாதம் தயாரிக்கப்பட்டதாக 2024-ல் சந்திரபாபு நாயுடு ஆட்சிக்கு வந்த பிறகு பகிரங்கமாக அறிவிக்கப்பட்டது. ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சி காலத்தில் நடந்த இந்த மோசடியை விசாரிக்க முதலில் ஆந்திர அரசு சிறப்பு புலனாய்வு குழு (SIT) அமைத்தது.

ஆனால் SIT விசாரணை பாரபட்சமாக நடக்கிறது என்று ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இதையடுத்து சிபிஐ தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது. இந்த குழு இதுவரை 14 பேரை கைது செய்துள்ளது. இவர்களில் பால் உற்பத்தி நிறுவனங்களை சேர்ந்தவர்களும், TTD அதிகாரி விஜயபாஸ்கர் ரெட்டி (ஏ-34 குற்றவாளி) உள்ளிட்டோர் அடங்குவர்.

இதையும் படிங்க: திருப்பதி பிரசாத லட்டில் விலங்கு கொழுப்பு இல்லை!! சிபிஐ ஆய்வில் தகவல்! கடுகடுக்கும் சந்திரபாபு நாயுடு!

விஜயபாஸ்கர் ரெட்டி வாக்குமூலத்தில், “கலப்பட நெய் இருப்பது தெரிந்தும் நிறுவனங்களுக்கு தெரிவித்தேன். ஆனால் அவர்கள் லஞ்சம் கொடுத்து தொடர்ந்து நெய் விநியோகம் செய்தனர். இதனால் தேவஸ்தானத்துக்கு ரூ.118 கோடி நஷ்டம் ஏற்பட்டது. 2023-ல் போலே பாபா நிறுவனத்தில் இருந்து ரூ.75 லட்சம், பிரீமியர் நிறுவனத்தில் இருந்து ரூ.8 லட்சம் லஞ்சமாக பெற்றேன்” என்று கூறியுள்ளார்.

இதையடுத்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. தேவஸ்தான நிர்வாக அதிகாரி அனில்குமார் சிங்காலை பதவியில் இருந்து நீக்கி, சீனியர் ஐஏஎஸ் அதிகாரி ரவிச்சந்திராவை நியமித்தது அரசு. ஆனால் ஜவஹர் ரெட்டி, தர்மா ரெட்டி போன்றோர் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அப்போதைய அறங்காவலர் குழு மீதும் எந்த நடவடிக்கையும் இல்லை.

நேற்று அமராவதியில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், SIT விசாரணை சரிவர நடக்கவில்லை என்று கூறி, உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க விசாரணை கமிஷன் அமைக்க ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த முடிவால் ‘கலப்பட நெய்’ விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. பல பெரிய தலைகள் சிக்கும் என்று அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. திருப்பதி தேவஸ்தானத்தின் புனிதத்தை பாதித்த இந்த ஊழல் ஆந்திர அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதையும் படிங்க: ஹப்பாடா! நிம்மதி பெருமூச்சு விடும் சந்திரபாபு நாயுடு!! ரூ.300 கோடி நிதி மோசடி வழக்கில் இருந்து விடுவிப்பு!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share