பள்ளி மாணவிக்கு லிப்ட் கொடுத்து பாலியல் வன்கொடுமை! வனப்பகுதிக்குள் நடந்த கொடூரம்! ஆந்திராவில் பரபரப்பு!
ஆத்திரம் அடைந்த ராகேஷ் மாணவியை கொலை செய்து விடுவதாக மிரட்டினார். வனப்பகுதிக்கு அழைத்துச் சென்ற மாணவியை ராகேஷ் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
ஆந்திரப் பிரதேசத்தின் திருப்பதி மாவட்டத்தில் பள்ளி மாணவியிடம் பாலியல் வன்கொடுமை நடந்ததாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் நாயுடுப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். தலைமறைவாக உள்ளதாக கூறப்படும் ராகேஷ் என்ற இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.
போலீசார் தெரிவித்த தகவலின்படி, நாயுடுப்பேட்டை நகரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வரும் மாணவி, பள்ளி முடிந்த பிறகு வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது விண்ணமாலா கிராமத்தைச் சேர்ந்த ராகேஷ் என்ற இளைஞர் மோட்டார் சைக்கிளில் வந்து, மாணவியை வீட்டில் இறக்கிவிடுவதாக கூறியதாக தெரிவிக்கப்படுகிறது. இதை நம்பி மாணவி அவரது வாகனத்தில் சென்றதாக கூறப்படுகிறது.
ஆனால், வீட்டிற்குச் செல்ல வேண்டிய வழிக்குப் பதிலாக, பிரதவாடா கிராமம் அருகிலுள்ள வனப்பகுதி நோக்கி மோட்டார் சைக்கிள் சென்றதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மீண்டும் தலைதூக்கும் கொரோனா!! ஆந்திராவில் 4 பேர் பலி! அரசு வெளியிட்ட அவசர எச்சரிக்கை!
இதனால் சந்தேகமடைந்த மாணவி, தப்பிக்க முயற்சி செய்ததாகவும், அப்போது இளைஞர் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. பின்னர் வனப்பகுதியில் மாணவியிடம் பாலியல் வன்கொடுமை நடந்ததாக மாணவி போலீசில் புகார் அளித்துள்ளார்.
சம்பவத்திற்குப் பிறகு, மாணவியை அவரது வீட்டின் அருகே இறக்கிவிட்டு, அந்த இளைஞர் அங்கிருந்து தப்பிச் சென்றதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து மாணவி தனது குடும்பத்தினரிடம் நடந்த சம்பவத்தை தெரிவித்து, நாயுடுப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார், சம்பவம் நடந்ததாக கூறப்படும் இடத்தில் விசாரணை நடத்தி ஆதாரங்களை சேகரித்து வருகின்றனர். மேலும், தலைமறைவாக உள்ள ராகேஷை கைது செய்ய தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் அனைத்து கோணங்களிலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், குற்றவாளி விரைவில் கைது செய்யப்படுவார் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: "என்னை கொலை செய்துவிடுவாரோ என பயமாக இருக்கிறது"... பெற்றோரிடம் கதறிய இளம்பெண் அதே இரவில் வெட்டிக்கொலை!