×
 

கட்சி நிதி ரூ.675 கோடி என்னாச்சு? மம்தா பானர்ஜிக்கு நெருக்கடி! விசாரணை கோரும் அதிருப்தியாளர்கள்!!

ரிதாப்ரதா பானர்ஜி தலைமையிலான அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள், திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் நிதியான ரூ.675 கோடி குறித்து போலீசார் விசாரணை கோரியுள்ளதால் கட்சிக்குள் உட்கட்சி மோதல் வெடித்துள்ளது.

கொல்கத்தா: திரிணமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் தலைவர் ரிதாப்ரதா பானர்ஜி தலைமையிலான குழு, கட்சியின் ரூ.675 கோடி மதிப்பிலான நிதி குறித்து போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கட்சிக்குள் ஏற்பட்ட மோதலை பேசி தீர்த்துக் கொள்ளாமல் சபாநாயகர் வரை கொண்டு சென்றதாகக் கூறி, ரிதாப்ரதா பானர்ஜி உள்ளிட்ட அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். இதையடுத்து ரிதாப்ரதா தலைமையில் அணிவகுத்த 60 எம்.எல்.ஏ.க்கள் அவரை எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுத்தனர். மேலும், லோக்சபா எம்.பி.க்களில் 20 பேர் தேசியவாத இந்திய குடிமக்கள் கட்சியில் இணைந்தது கட்சியை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

தற்போது கட்சியின் நிதி விவகாரம் பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது. அதிருப்தி கோஷ்டியினர் மற்றும் முன்னாள் பொருளாளர், கட்சியின் வங்கிக் கணக்குகளை முடக்கவும், நிதியின் ஆதாரம் குறித்து விசாரணை நடத்தவும் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த நிதி சட்டவிரோதமான வழிகளில் பெறப்பட்டிருக்கலாம் என அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதன் அடிப்படையில் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 28 ஆண்டுகளாக கட்டி காத்த கட்சி! மம்தா மனவேதனை! இப்படி எல்லாம் கிளப்பி விடாதீங்க!

இதற்கிடையில், மேற்கு வங்க முன்னாள் அமைச்சர் ஜோதிப்ரியா மல்லிக் கட்சியின் அனைத்து பதவிகளிலிருந்தும் ராஜினாமா செய்தார். சிலிகுரி மேயர் கௌதம் தேப் தனது மாநகராட்சி பதவியிலிருந்து விலகினார். இந்த தொடர் ராஜினாமாக்கள் கட்சியின் உட்கட்சி பூசலை மேலும் தீவிரப்படுத்தியுள்ளன.

திரிணமுல் செய்தித் தொடர்பாளர் குணால் கோஷ், “கட்சியின் நிதியில் முறைகேடு இருப்பதாக எம்.எல்.ஏ.க்கள் கண்டறிந்திருந்தால், கட்சித் தலைவருக்கு தெரிவித்திருக்க வேண்டும். வெளியில் புகார் அளிப்பது சரியல்ல” என விமர்சித்துள்ளார்.

திரிணமுல் காங்கிரஸில் ஏற்பட்டுள்ள இந்த உட்கட்சி மோதல் மேற்கு வங்க அரசியலை பெரிதும் பாதிக்கும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மம்தா பானர்ஜியின் தலைமைக்கு இது பெரும் சவாலாக மாறியுள்ள நிலையில், கட்சியின் எதிர்காலம் குறித்து பல்வேறு ஊகங்கள் எழுந்துள்ளன. 

இதையும் படிங்க: மருமகன் வேணுமா? கட்சி வேணுமா? மம்தாவுக்கு எதிராக போர்க்கொடி! திரிணாமுல் எம்.பிக்கள் 19 பேர் அதிருப்தி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share