×
 

வரிவிதிப்பால் பாதிக்கப்பட்ட தொழில்கள்!! தோளோடு தோள் நின்று துணை நிற்கும் தமிழகம்! முதல்வர் உறுதி!

வரிவிதிப்பால் பாதிக்கப்பட்ட தொழில்களுக்கு தொழில்களுக்கு தமிழகம் தொடர்ந்து தோளோடு தோள் நின்று துணை நிற்கும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.

கள்ளக்குறிச்சி: தமிழகத்தில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் தொடர்ந்து முன்னிலை வகிக்கும் தமிழக அரசு, வரி விதிப்பு சவால்களுக்கு மத்தியிலும் தொழில்களுக்கு தோளோடு தோள் நின்று துணை நிற்கும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் ரூ.1,350 கோடி செலவில் அமைக்கப்பட்டு வரும் தோல் இல்லா காலணி ஆலையின் பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். உலகின் மிகப்பெரிய பிராண்டட் காலணி உற்பத்தியாளர்களில் ஒன்றான தைவானைச் சேர்ந்த PouChen நிறுவனம் இந்த ஆலையை அமைக்கிறது. உலகளாவிய வரி விதிப்பு மற்றும் வர்த்தக நிச்சயமற்ற சூழல் இருந்த போதிலும், தமிழகத்தின் மீது இந்நிறுவனம் உறுதியான நம்பிக்கை வைத்துள்ளதாக முதலமைச்சர் பெருமிதம் தெரிவித்தார்.

PouChen நிறுவனம் தமிழக அரசுடன் செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, கள்ளக்குறிச்சியில் மொத்தம் ரூ.2,302 கோடி முதலீடு செய்ய உள்ளது. இதன்மூலம் சுமார் 20 ஆயிரம் பேருக்கு நேரடி வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது உள்ளூர் இளைஞர்களுக்கு பெரிய ஊக்கமளிக்கும் என்று முதலமைச்சர் கூறினார்.

இதையும் படிங்க: திமுக-வா? தவெக-வா? குழம்பி தவிக்கும் காங்.,!! முதல்வர் ஸ்டாலினுடன் பா.சிதம்பரம் திடீர் சந்திப்பு!

2024 ஜனவரியில் நடைபெற்ற தமிழக உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் போது இத்திட்டத்துக்கு அடிக்கல் நாட்டிய பெருமை தனக்கு கிடைத்ததாகவும், தற்போது பணிகளின் முன்னேற்றத்தை நேரில் காண வந்ததாகவும் ஸ்டாலின் தெரிவித்தார். 

இந்நிகழ்வில் நைக் இந்தியா நிறுவன இயக்குநர்கள் உதய் சிங் மேத்தா மற்றும் சாமி வைகுண்டமன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், புதிதாக தேர்வு செய்யப்பட்ட ஐந்து ஊழியர்களுக்கு பணி நியமனக் கடிதங்களை முதலமைச்சர் நேரில் வழங்கினார்.

“நாம் கொண்டு வரும் ஒவ்வொரு முதலீடும் தமிழக மக்களுக்கு வேலைவாய்ப்புகளாக மாறுகிறது. வரி விதிப்பால் பாதிக்கப்பட்ட தொழில்களுக்கு தமிழகம் தொடர்ந்து துணை நிற்கும்” என்று முதலமைச்சர் உறுதியளித்தார்.

இதேநேரம், கள்ளக்குறிச்சியில் ரூ.139.41 கோடி செலவில் புதிதாகக் கட்டப்பட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கட்டடத்தை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். அனைத்து வசதிகளுடன் கூடிய இக்கட்டடத்தில் அரசின் அனைத்துத் துறைகளும் ஒரே இடத்தில் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இத்திட்டங்கள் கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் உந்துதலாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: ரூ.3,000மா? ரூ.5,000மா? பொங்கல் பரிசு ரொக்கம் எவ்வளவு? இன்று வெளியாகும் முக்கிய அறிவிப்பு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share