×
 

பேனர்களில் கோஷ்டி தலைவர்கள் படங்களுக்கு தடை! தமிழக காங்கிரசில் அதிரடி உத்தரவு!

'காங்கிரஸ் கட்சியின் பேனர், விளம்பரங்களில், கோஷ்டி தலைவர்களின் படங்கள் இடம்பெறக் கூடாது' என, தமிழக காங்., தலைவர் மாணிக்கம் தாகூர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழக காங்கிரஸ் கட்சிக்குள் நிலவி வரும் கோஷ்டி அரசியலை கட்டுப்படுத்தும் வகையில், கட்சி நிகழ்ச்சிகள் மற்றும் விளம்பரங்களில் தலைவர்களின் படங்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் பொறுப்பேற்ற பின்னர், கட்சியின் அமைப்பு ரீதியான செயல்பாடுகளை மாற்றியமைக்கும் நடவடிக்கைகளில் கவனம் செலுத்தி வருகிறார். அதன் ஒரு பகுதியாக, கட்சி நிகழ்ச்சிகள், பொதுக்கூட்டங்கள் மற்றும் பேனர் விளம்பரங்களில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரின் படங்கள் மட்டுமே இடம்பெற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மாநிலத்தில் உள்ள பல்வேறு கோஷ்டி தலைவர்களின் படங்களை தவிர்க்க வேண்டும் என்ற இந்த முடிவு, கட்சிக்குள் உள்ள பிரிவினைகளை குறைக்கும் முயற்சியாக பார்க்கப்படுகிறது. சமீபத்தில் சேலத்தில் நடைபெற்ற நீட் எதிர்ப்பு கருத்தரங்க நிகழ்ச்சியிலும் பேனரில் ராகுல் காந்தியின் படம் மட்டுமே இடம்பெற்றதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: ஜூலையில் தமிழகம் வரும் ராகுல்காந்தி!! தமிழக காங்கிரசில் புதிய நிர்வாகிகள் நியமனம்?!

மேலும், நிகழ்ச்சிகளின் போது மேடையில் பேசுபவர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும், தேவையற்ற தலைவர்களின் அணிவகுப்பை தவிர்க்க வேண்டும் என்றும் கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.

சென்னையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற மாவட்ட தலைவர்கள் கூட்டத்திற்கான பேனரிலும் ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோரின் படங்கள் மட்டுமே இடம்பெற்றிருந்தன. இதன் மூலம் கட்சியில் தனிநபர் ஆதிக்கம் மற்றும் கோஷ்டி அடையாளங்களை குறைக்க முடியும் என மாணிக்கம் தாகூர் கருதுவதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே, மாவட்ட நிர்வாகிகளின் செயல்பாடுகளை ஆய்வு செய்யும் பணியிலும் அவர் ஈடுபட்டு வருகிறார். தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சென்று கட்சி பணிகளை ஆய்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், முன்னாள் முதல்வர் காமராஜர் அமைச்சரவையில் இடம்பெற்ற தலைவர்களின் குடும்பத்தினரையும் சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, சட்டசபை தேர்தலுக்கு முன்பு நியமிக்கப்பட்ட மாவட்ட நிர்வாகிகள் தொடர்ந்து பதவியில் உள்ள நிலையில், புதிய நிர்வாகிகள் நியமனம் குறித்து கட்சியினர் எதிர்பார்த்து வருகின்றனர். ஆனால், கட்சி சீரமைப்பு விதிமுறைகளை பின்பற்றிய பிறகே புதிய நியமனங்கள் மேற்கொள்ளப்படும் என மாணிக்கம் தாகூர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழக காங்கிரசில் அமைப்பு மாற்றம் மற்றும் கோஷ்டி அரசியலை கட்டுப்படுத்தும் இந்த நடவடிக்கைகள், கட்சியின் எதிர்கால தேர்தல் வியூகத்தில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்துமா என்பது அரசியல் வட்டாரங்களில் கவனிக்கப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: செல்வப்பெருந்தகை அவுட்! மாணிக்கம் தாகூர் இன்!! நாளை பதவியேற்பு!! வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share