×
 

அறநிலையத்துறை கோவில்களில் அதிரடி மாற்றம்!! டெண்டர் முறையில் புதிய விதிகள்!

அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய அமைச்சர் ரமேஷ், ஒரே நபர்கள் தொடர்ந்து டெண்டர் பெறும் நிலையை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் விதிமுறைகளை மாற்றுமாறு உத்தரவிட்டுள்ளார்.

தமிழக அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் கோவில்களின் நிர்வாகத்தில் முக்கிய மாற்றங்களை மேற்கொள்ள அமைச்சர் ரமேஷ் உத்தரவிட்டுள்ளார். கோவில்களில் டெண்டர் எடுக்கும் நடைமுறையை வெளிப்படையாக மாற்றுவதோடு, அனைத்து கோவில்களிலும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கவும், தற்போது ஒருகால பூஜை மட்டுமே நடைபெறும் கோவில்களில் இனி மூன்றுகால பூஜை நடத்தவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் அறநிலையத்துறையின் கீழ் சுமார் 44 ஆயிரம் கோவில்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் அதிக வருவாய் தரும் கோவில்களில் பூக்கடை, பழக்கடை, வாகன நிறுத்தம், காலணி பாதுகாப்பு உள்ளிட்ட சேவைகள் ஆண்டுதோறும் டெண்டர் மூலம் ஒப்படைக்கப்படுகின்றன.

ஆனால், அரசியல் செல்வாக்கு கொண்ட சிலரே தொடர்ந்து இந்த டெண்டர்களை கைப்பற்றி வருவதாகவும், கோவில் நிர்வாகத்தின் அனுமதி இல்லாமல் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் அமைச்சருக்கு தொடர்ந்து புகார்கள் வந்ததாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: அறநிலைய அமைச்சருக்கு காத்திருக்கும் சவால்!! அறங்காவலர்கள், தக்காருக்கு கோவில் நிர்வாகத்தில் சுதந்திரம்?!

இதையடுத்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய அமைச்சர் ரமேஷ், ஒரே நபர்கள் தொடர்ந்து டெண்டர் பெறும் நிலையை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் விதிமுறைகளை மாற்றுமாறு உத்தரவிட்டுள்ளார்.

இதன் காரணமாக 2026–27ஆம் ஆண்டுக்கான டெண்டர் அறிவிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. புதிய விதிமுறைகளுடன் ஜூலை முதல் வாரத்தில் மீண்டும் டெண்டர் அறிவிக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் தகுதியுள்ள அனைவருக்கும் சம வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே, இதுவரை பிரசாதம் வழங்கப்படாத கோவில்களிலும் இனி கோவில் நிர்வாகமே பிரசாதத்தை தயாரித்து பக்தர்களுக்கு வழங்க வேண்டும் என்று அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். மேலும், பெரிய கோவில்களின் கீழ் செயல்படும் உபகோவில்களுக்கும் அதே தரத்தில் பிரசாதம் கிடைக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன.

அதேபோல் தற்போது ஒருகால பூஜை மட்டுமே நடைபெறும் கோவில்களை அடையாளம் கண்டு, மூன்று வேளைகளிலும் பூஜை நடைபெற தேவையான நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய நடவடிக்கைகள் கோவில் நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பதுடன், பக்தர்களுக்கு கூடுதல் வசதிகளையும் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: யாரு பணத்தை யாரு எடுக்குறது? கோயில் நிதியில் கட்டுமானங்கள்? ரத்து செய்தது தமிழக அரசு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share