100 வருஷ கோயிலை இடிச்சிருக்கேன்! ஓட்டு எப்பிடி வரவழைக்கிறதுனு தெரியும்! வைரலாகும் டி.ஆர்.பாலு வீடியோ!!
நூறு வருஷ கோயிலை இடித்து இருக்கிறேன் என்று திமுக எம்பி டிஆர் பாலு பெருமை பொங்க பேசும் பழைய வீடியோவை நடிகையும் பாஜ பிரமுகருமான கஸ்தூரி வெளியிட்டுள்ளார்.
சென்னை: திருப்பரங்குன்றம் தீப சர்ச்சை தமிழகத்தில் மத அரசியலை சூடேற்றி வரும் நிலையில், “100 வருட கோயில்களை இடித்தேன்” என்று திமுக எம்பி டி.ஆர்.பாலு பெருமையுடன் பேசும் பழைய வீடியோவை நடிகை கஸ்தூரி, பாஜக, இந்து முன்னணி உள்ளிட்டோர் பரவலாக பகிர்ந்து “திமுக இந்து விரோதிகள்” என்று தாக்கி வருகின்றனர். ஆனால், அந்த வீடியோவின் முழு உண்மை வெளியானதும், பாலுவின் பேச்சு வெட்டி-ஒட்டி திரிக்கப்பட்டு தவறாக பரப்பப்படுவது தெரிய வந்துள்ளது.
2023 ஜனவரி 27 அன்று நடந்த “சேது சமுத்திர கால்வாய் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தும் மாநாட்டில்” பாலு பேசிய முழு வீடியோவில், நான்கு வழிச்சாலை, தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்காக கோயில், மசூதி, மாதா கோயில் என அனைத்து வழிபாட்டுத் தலங்களையும் இடித்து, அதே இடத்தில் பெரிய கோயில்களை கட்டிக் கொடுத்ததைத்தான் அவர் விளக்கினார்.
வைரலாகும் வீடியோவில், “100 வருட கோயிலை இடித்திருக்கிறேன்… என் தொகுதியில் சரஸ்வதி கோவில், லட்சுமி கோவில், பார்வதி கோவில் என மூன்று கோயில்களையும் நான்தான் இடித்தேன்” என்று பாலு கூறுவது மட்டும் எடிட் செய்யப்பட்டு பரப்பப்படுகிறது. ஆனால், தனியார் செய்தி சேனல் வெளியிட்ட முழு வீடியோவில் (49:53 நிமிடத்தில்) பாலு தொடர்ந்து, “நான்கு வழி சாலைக்காக 100 வருட கோயிலை இடித்துள்ளேன், மேற்கு வங்கத்தில் 100 வருட மசூதியை இடித்துள்ளேன்.
இதையும் படிங்க: பாஜவில் 287 வாரிசுகளுக்கு பதவி?! திமுகவை நீங்க குறை சொல்லலாமா? அப்பாவு அதிரடி!
கோயில், மசூதி, மாதா கோயில்களை இடித்துள்ளேன்… அவர்களுக்கு இதை விட சிறப்பாக, 100 பேர் அமரும் மண்டபத்துடன் கோயில்களை கட்டிக் கொடுத்தேன். இதுபோன்று பல இடங்களில் மத நம்பிக்கை என்று சொல்லப்பட்ட இடங்களில் அவர்களுக்கு புரிய வைத்து நான் செய்தேன்” என்று தெளிவாகக் கூறுகிறார். அதாவது, உள்கட்டமைப்பு திட்டங்களுக்காக வழிபாட்டுத் தலங்களை இடித்து, அதே மக்களுக்கு பெரிய கோயில்கள் கட்டிக் கொடுத்ததைத்தான் பாலு பெருமையுடன் கூறினார்.
"நூறு வருஷ கோயிலை இடிச்சிருக்கேன். வோட்டு விழாதுன்னு தெரியும்... அந்த வோட்டை எப்படி வரவழைப்பதுன்னும் தெரியும். " TRBalu அவர்களின் கெக்கலிப்பு.
— Kasturi (@KasthuriShankar) December 5, 2025
அவரு வாங்குன வோட்டை விற்ற மக்களை சொல்லணும்.#தமிழர்விரோதிதிமுக #இந்துவிரோதிதிமுக pic.twitter.com/VxWjbXx1iJ
ஆனால், இந்த வீடியோவை வெட்டி, “கோயில்களை இடித்தேன்” என்ற பகுதியை மட்டும் எடுத்து, “மசூதி இடித்தேன், மாதா கோயில் இடித்தேன்” என்ற பகுதிகளை நீக்கி, “திமுக இந்து விரோதிகள்” என்று பரப்பி வருகின்றனர் பாஜகவினரும் இந்து அமைப்புகளும். கஸ்தூரி தனது எக்ஸ் பக்கத்தில் இதை பகிர்ந்து, “திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுகவின் உண்மை முகம்” என்று குற்றம் சாட்டினார். அண்ணாமலை, “நான்கரை ஆண்டுகளில் 161 கோயில்களை இடித்தது திமுக” என்று கூறிய நிலையில், இந்த வீடியோ பாஜகவுக்கு புதிய ஆயுதமாக மாறியுள்ளது.
திமுக தரப்பில், “இது வெட்டி-ஒட்டி வீடியோ. பாஜகவினர் கட்-பேஸ்ட் அரசியல் செய்கிறார்” என்று பதிலடி கொடுக்கின்றனர். “சாலை விரிவாக்கம் போன்ற உள்கட்டமைப்பு திட்டங்களுக்காக எல்லா மத வழிபாட்டுத் தலங்களும் இடிக்கப்பட்டு, புதியவை கட்டிக் கொடுக்கப்பட்டன. அதைத்தான் பாலு விளக்கினார்” என்று திமுக பேச்சாளர்கள் தெரிவிக்கின்றனர்.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக அரசு நீதிமன்ற உத்தரவை மீறியதாக பாஜக குற்றம் சாட்டி வரும் நிலையில், இந்த வீடியோ புதிய திருப்பமாக அமைந்துள்ளது. ஆனால், முழு உண்மையை மறைத்து திரிக்கப்பட்ட வீடியோவை பரப்புவது, மத உணர்வுகளை தூண்டும் முயற்சியாகவே பார்க்கப்படுகிறது. உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ள நிலையில், இந்த விவகாரம் 2026 தேர்தலுக்கு முன் மத அரசியலாக மாறலாம் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
இதையும் படிங்க: அண்ணா பல்கலை 'Sir'ஐ விட... இது பயங்கரமான 'SIR'இல்லை!! நயினார் மாஸ் பேச்சு!