×
 

"எங்கள் நேரம் வரட்டும்... குறி வைத்து காத்திருக்கிறோம்!" - முதலமைச்சர் விஜய்க்கு திருச்சி சிவா எச்சரிக்கை!

சட்டமன்ற தேர்தலில் திமுக, அதிமுக கூட்டணிகளை தோற்கடித்து தவெக ஆட்சியமைத்துள்ளது. தவெக தலைமையில் புதிய கூட்டணி உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில், கட்சியின் துணைப் பொதுச்செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான திருச்சி சிவா ஆற்றிய பேச்சு அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது. முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது அரசியல் செயல்பாடுகளை மறைமுகமாக விமர்சித்த அவர், "எங்கள் நேரம் வரட்டும், குறி வைத்து காத்திருக்கிறோம்" என்று பேசியது புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், புதிய கூட்டணி முயற்சிகள் மற்றும் ஆளுங்கட்சி - எதிர்க்கட்சி இடையேயான அரசியல் மோதல்கள் தீவிரமடைந்துள்ள சூழலில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய திருச்சி சிவா, திமுக பொறுமையுடன் செயல்பட்டு வருவதாகவும், அதனை பலவீனமாக யாரும் கருத வேண்டாம் என்றும் கூறினார்.

"நான் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் தனிப்பட்ட கருத்தாக அல்ல; திமுகவின் பிரதிநிதியாகவே பேசுகிறேன். கட்சிக்கு வலிமை சேர்க்கும் வகையில்தான் எங்கள் கருத்துகள் இருக்கும். திசை தெரியாமல் இருப்பவர்கள் திமுகவில் வந்து இணைய வேண்டும்," என்று அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: சென்னையில் பயங்கரம்... திமுக நிர்வாகிக்கு ஓட, ஓட அரிவாள் வெட்டு... பகீர் காட்சிகள் வெளியீடு...!

மு.க.ஸ்டாலினின் அரசியல் பயணத்தை எடுத்துக்காட்டிய திருச்சி சிவா, இளைஞரணியில் தொடங்கிய அவரது பயணம் மேயர், அமைச்சர், துணை முதலமைச்சர், முதலமைச்சர் என பல்வேறு பொறுப்புகள் வழியாக வளர்ந்ததாகக் குறிப்பிட்டார். மக்களுடன் தொடர்ந்து பணியாற்றிய அனுபவமே அரசியல் வளர்ச்சிக்குக் காரணம் என்றும் அவர் கூறினார்.

முதலமைச்சர் விஜயை மறைமுகமாக விமர்சித்த அவர், அரசியலில் அனுபவமும் முதிர்ச்சியும் மிகவும் அவசியம் என்றார். "ஒரு முதலமைச்சர் எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கு அரசியல் அனுபவம் முக்கியம். மக்களின் பிரச்சினைகளை அணுகுவதில் முதிர்ச்சி தேவை. நாங்கள் அமைதியாக இருக்கிறோம் என்பதற்காக எதையும் பேச மாட்டோம் என்று நினைக்க வேண்டாம்," என்று அவர் தெரிவித்தார்.

மேலும், கொக்கு தனது இரையை பிடிக்க பொறுமையாக காத்திருப்பதை எடுத்துக்காட்டாக கூறிய திருச்சி சிவா, "நாங்களும் எங்கள் நேரத்திற்காக காத்திருக்கிறோம். சரியான நேரத்தில் அரசியல் ரீதியாக பதிலளிப்போம்" என்றார்.

அதேநேரத்தில், தற்போதைய ஆட்சி மக்களுக்காக என்ன சாதனை செய்துள்ளது என்ற கேள்வியையும் அவர் எழுப்பினார். திருச்சி சிவாவின் இந்தப் பேச்சு, தமிழக அரசியலில் திமுக - தமிழக வெற்றிக் கழகம் இடையேயான வார்த்தைப் போருக்கு மேலும் வலு சேர்த்துள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

இதையும் படிங்க: விஜய்க்கு மு.க.ஸ்டாலின் செக்!! தவெக கதையை முடிச்சாகணும் இடைத்தேர்தலில் தனித்து போட்டி?!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share