சட்டசபை தேர்தலில் டிடிவி போட்டியில்லை?! எம்.பி சீட்டுக்கு குறி வைக்கும் தினகரன்?! அமித்ஷா பதில் என்ன?
தினகரன் தனக்கு ராஜ்யசபா சீட் ஒதுக்குமாறு மத்திய அமைச்சர் அமித்ஷாவிடம் கேட்டிருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 களம் தீவிரமடைந்து வரும் நிலையில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தரப்பிலிருந்து வந்துள்ள பரபரப்பு அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெறவுள்ள தேர்தலில் தான் போட்டியிட மாட்டேன் என்று தினகரன் தெளிவாக தெரிவித்துள்ளார். இதனால், அவர் ராஜ்யசபா எம்பி ஆகிறாரா என்பது குறித்து பல்வேறு ஊகங்கள் எழுந்துள்ளன.
தென் மண்டலங்களில் குறிப்பிடத்தக்க செல்வாக்கு கொண்ட தினகரன், எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்க மறுத்து தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து (என்டிஏ) வெளியேறியிருந்தார். இதையடுத்து பாஜக தரப்பிலிருந்து அவரை மீண்டும் இணைக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
சமீபத்தில் மதுராந்தகம் பொதுக்கூட்டத்தில் தினகரன், "அண்ணன் எடப்பாடி பழனிசாமி" என்று குறிப்பிட்டு, இது அண்ணன்-தம்பி சண்டை என்றும், பகையை மறந்து தமிழக மக்களின் நலனுக்காக மனப்பூர்வமாக என்டிஏ கூட்டணியில் இணைந்துள்ளேன் என்றும் அறிவித்தார். எந்த அழுத்தமும் இல்லை என்றும் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: அதிமுக - அமமுக இணைப்பின் பின்னணியில் RSS! சக்சஸில் முடிந்த ஆபரேஷன்!!
ஆனால், இதற்கு முன்பு எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்து, அவரை முதல்வர் வேட்பாளராக ஏற்றால் தற்கொலைக்கு சமம் என்று பேசிய தினகரன், இப்போது யூடர்ன் அடித்துள்ளது பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அவரை நம்பியிருந்த ஓபிஎஸ் உள்ளிட்டோர் டீலில் விடப்பட்டுள்ளனர் என்ற கருத்தும் நிலவுகிறது.
நியூஸ் தமிழ் சேனலில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தினகரன், "2026 சட்டசபை தேர்தலில் நான் போட்டியிடவில்லை. தேசிய ஜனநாயக கூட்டணியை முழு மனதுடன் ஏற்றுக்கொண்டுள்ளேன்" என்று தெளிவுபடுத்தினார். தவெக (தமிழக வெற்றிக் கழகம்) தலைவர் செங்கோட்டையன் தன்னை தொடர்ந்து அழைத்த போதும், தான் செல்லவில்லை என்றும், தவெகவுடன் கூட்டணி அமைப்பது குறித்து எந்த உறுதியும் தெரிவிக்கவில்லை என்றும் ட்விஸ்ட் கொடுத்தார்.
தினகரனின் இந்த முடிவுக்கு பின்னால், அமமுகவின் ஆதரவாளர்களுக்கு என்டிஏ இணைப்பு பிடிக்காதது முக்கிய காரணமாக கருதப்படுகிறது. அவரது வலது கை என்று அழைக்கப்பட்ட மாணிக்கராஜா கூட அமமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்துவிட்டார். இதனால் தனக்கு வெற்றி வாய்ப்பு குறைவாக இருக்கலாம் என்ற அச்சம் தினகரனுக்கு ஏற்பட்டிருக்கலாம் என்ற ஊகங்கள் எழுந்துள்ளன.
இதற்கிடையே, அமித் ஷாவுடனான தினகரனின் சந்திப்பு மற்றும் அதிமுக-அமமுக இணைப்புக்கு அமித் ஷாவே காரணம் என்று தினகரன் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 2021-லேயே இருவரும் இணைய வேண்டும் என்று அமித் ஷா விரும்பியதாகவும், இப்போது அது நடந்துவிட்டதாகவும் கூறியுள்ளார். எனவே, என்டிஏ இணைப்பு பேச்சுவார்த்தையின்போது தினகரன் ராஜ்யசபா எம்பி சீட் கோரியிருக்கலாம் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தேர்தலில் போட்டியிடாமல், ராஜ்யசபா பதவியை நோக்கி நகர்கிறாரா தினகரன்? அல்லது வேறு திட்டங்கள் உள்ளனவா? என்பது அடுத்த சில மாதங்களில் தெளிவாகும். தமிழக அரசியலில் தினகரனின் அடுத்த நகர்வு எப்போதும் எதிர்பாராத திருப்பங்களை ஏற்படுத்துவதால், இந்த அறிவிப்பு பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: டெல்லியில் இருந்து வந்த உத்தரவு!! விஜயை டீலில் விட்ட டிடிவி!! திடீர் யூ டர்ன்னுக்கு இதுதான் காரணம்!