இபிஎஸ் மேல் பயம் போகல! ஜகா வாங்கிய டிடிவி!! பின்னணியில் இருக்கும் பக்கா ப்ளான்!
எடப்பாடி பழனிசாமியை கடுமையாக தாக்கிப் பேசிய தினகரன், திடீரென எடுத்த இந்த யூடர்ன் அவரது அரசியல் நம்பகத்தன்மை குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 நெருங்கி வரும் நிலையில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அதிரடி அறிவிப்பு அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வரும் சட்டசபைத் தேர்தலில் தான் போட்டியிட மாட்டேன் என்று தினகரன் வெளிப்படையாக அறிவித்துள்ளார். இந்த முடிவு அவரது ஆதரவாளர்களை ஏமாற்றியுள்ளது. அதேநேரம், அரசியல் எதிரிகளையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
தென் மாவட்டங்களில் முக்குலத்தோர் சமூகத்தில் கணிசமான செல்வாக்கு கொண்ட தினகரன், ஒருகாலத்தில் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்க முடியாது என்று கடுமையாக விமர்சித்தவர். அந்த நிலைப்பாட்டால் தான் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகி, அமமுக தனித்துப் பயணித்தது.
ஆனால் சமீபத்தில் மதுராந்தகம் பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியை "அண்ணன்" என்று அழைத்துப் பேசியது பெரிய திருப்பமாக அமைந்தது. இது தனிப்பட்ட பகை அல்ல, அண்ணன்-தம்பி இடையிலான கருத்து வேறுபாடு மட்டுமே என்றும், தமிழக மக்களின் நலனுக்காக மனப்பூர்வமாக என்டிஏ கூட்டணியில் இணைந்துள்ளதாகவும் அவர் விளக்கினார். எந்த அழுத்தமும் இல்லை என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: இதுதான் ஃபைனல்!! காங்கிரஸுக்கு திமுக கொடுத்த ஆஃபர்!! தொகுதி இழுபறிக்கு வச்சாச்சு புல்ஸ்டாப்!
இந்த யூடர்ன் அவரது அரசியல் நம்பகத்தன்மை குறித்து கேள்விகளை எழுப்பியது. ஓபிஎஸ் உள்ளிட்ட சில தலைவர்கள் தினகரனை நம்பி அரசியல் கணக்குகள் போட்டிருந்த நிலையில், இந்த திடீர் மாற்றம் அவர்களை ஏமாற்றியதாக விமர்சனம் எழுந்தது.
இப்போது தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்ற அறிவிப்பு அமமுக தொண்டர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. என்டிஏ இணைப்புக்கு அடிப்படைத் தொண்டர்களில் ஒரு பகுதி எதிர்ப்பு தெரிவித்து வந்தது. மேலும் தினகரனின் நெருங்கியவராகக் கருதப்பட்ட மாணிக்கராஜா அமமுகவை விட்டு விலகி திமுகவில் இணைந்தது, அமமுகவின் அமைப்பு பலவீனமடைந்து வருவதை வெளிப்படுத்தியது.
தேர்தலில் நேரடியாக போட்டியிட்டால் வெற்றி வாய்ப்பு குறையும் என்ற கணக்கீடும் இந்த முடிவுக்குப் பின்னால் இருக்கலாம் என்று ஊகங்கள் கிளம்பியுள்ளன. அமித் ஷாவுடனான தினகரனின் சந்திப்புகள் மீண்டும் பேசுபொருளாகியுள்ளன.
அதிமுக-அமமுக இணைப்புக்கு அமித் ஷாவே முக்கிய காரணம் என்றும், இந்த இணைப்பு 2021-லேயே நடந்திருக்க வேண்டும் என்று அவர் விரும்பியதாகவும் தினகரன் கூறியுள்ளார். என்டிஏ பேச்சுவார்த்தைகளின் போது தினகரன் ராஜ்யசபா எம்பி பதவியை கோரியிருக்கலாம் என்ற சந்தேகமும் வலுப்பெற்றுள்ளது.
அதிமுகவில் பல அணிகள் இருக்கும் நிலையில், தோல்வி பயம் காரணமாகவே தினகரன் பின்வாங்கியதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. கடந்த 2016-ல் வைகோ மக்கள் நலக் கூட்டணியை அமைத்து வேட்புமனு தாக்கல் வரை சென்று, திடீரென போட்டியிலிருந்து விலகியது போலவே தினகரனும் செயல்பட்டுள்ளார் என்று அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
இதையும் படிங்க: ஒத்தையில நிக்கிறாரு ஓபிஎஸ்!! அடுத்த விக்கெட்டும் அவுட்!! டிடிவி தினகரன் பக்கத்துல யாரு தெரியுதா?