புதுச்சேரியில் 'தவெக' கூட்டணி கனவு கலைந்ததா? ரங்கசாமியை சந்தித்த பாஜக தேசியத் தலைவர்!
என். காங்கிரஸ் கட்சியுடன் தவெக கூட்டணி அமைக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், முதலமைச்சர் ரங்கசாமியுடன் நிதின் நபின் சந்தித்து கூட்டணியை உறுதிப்படுத்தியுள்ளார்.
தமிழகத்தைப் போலவே புதுச்சேரியிலும் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அவர்கள் புதுச்சேரியில் சமீபத்தில் நடத்திய பிரம்மாண்ட பொதுக்கூட்டம் மற்றும் முதலமைச்சர் ரங்கசாமியை அவர் புகழ்ந்து பேசியது, அங்கு ஒரு புதிய கூட்டணி உதயமாகப்போகிறதோ என்ற பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்தச் சூழலில், இன்று பாஜகவின் தேசிய மேலிடம் நேரடியாகக் களத்தில் இறங்கி அனைத்து ஊகங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
பாஜகவின் புதிய தேசியச் செயல் தலைவர் நிதின் நபின் மற்றும் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஆகியோர் இன்று புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்தச் சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, "புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) இப்போதும் தொடர்கிறது; வரும் தேர்தலிலும் தொடரும்" என்று தெளிவாக உறுதிப்படுத்தியுள்ளார். இதன் மூலம் விஜய் - ரங்கசாமி கூட்டணி அமையலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட கணக்குகள் தற்போதைக்குத் தவிடுபொடியாகியுள்ளன.
மறுபுறம், தமிழகத்தில் அதிமுகவுடன் கூட்டணி அமையாத நிலையில், விஜய் அவர்கள் காங்கிரஸ் கட்சியுடன் கைகோர்க்கலாம் என்று பேசப்பட்டது. ஆனால், காங்கிரஸ் மேலிடம் திமுகவுடன் தொகுதிப் பங்கீட்டுக் குழுவை அமைத்துவிட்டதால், அந்தக் கதவும் அடைக்கப்பட்டுவிட்டது. தற்போது ஓபிஎஸ், டிடிவி தினகரன் போன்றவர்கள் விஜய் பக்கம் செல்லலாம் எனப் பேச்சுக்கள் எழுந்தாலும், பாஜக அவர்களை மீண்டும் தனது அணிக்குள் இழுக்க முயற்சி செய்து வருகிறது. "எந்தச் சிறிய கட்சியும் தவெக-வுடன் வெளிப்படையாகக் கை கோர்க்கத் தயங்குவது ஏன்?" என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் 'விவாதப் பொருளாக மாறியுள்ளது. புதுச்சேரியில் பாஜக தனது கூட்டணியை உறுதி செய்த நிலையில், விஜய் தனித்துப் போட்டியிடுவாரா அல்லது கடைசி நேரத்தில் புதிய கூட்டணி அமையுமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
இதையும் படிங்க: தவெக-வில் இணைந்தார் ஃபெலிக்ஸ் ஜெரால்ட்: விஜய்யின் தேசிய செய்தித் தொடர்பாளராக நியமனம்!
இதையும் படிங்க: "நாங்கள் நாய் கிடையாது, பகுத்தறிவுள்ள தொண்டர்கள்" - அண்ணாமலைக்கு தவெக அருண்ராஜ் பதிலடி!