“120 நாள் சாதனைக்கு அடையாளம்!” மதுராந்தகம், தாராபுரத்தில் தவெக வெற்றி உறுதி? அமைச்சர் விஸ்வநாதன் அதிரடி!
தலைமைச் செயலகம் அமைப்பது தொடர்பாக இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்றும், முதல்வர் தரப்பிலிருந்தோ அல்லது அரசின் சார்பிலோ அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
சென்னை: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்கள் நிச்சயம் வெற்றி பெறுவார்கள் என்றும், இந்த வெற்றி தவெக கூட்டணி ஆட்சியின் 120 நாள் சாதனைக்கு அடையாளமாக அமையும் என்றும் அமைச்சர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இடைத்தேர்தல் முடிவுகள் தமிழக அரசியலில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறினார். குறிப்பாக இந்த தேர்தலில் திமுக மிகப்பெரிய சரிவை சந்திக்கப் போவதாகவும் அவர் தெரிவித்தார். தவெக வேட்பாளர்களின் வெற்றியில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை என்றும் அமைச்சர் விஸ்வநாதன் நம்பிக்கை தெரிவித்தார்.
இடைத்தேர்தல் தொடர்பாக இடதுசாரி கட்சிகளின் நிலைப்பாடு வெளியான பின்னர் அதுகுறித்து கருத்து தெரிவிப்பதாகவும் அவர் கூறினார். இதனால் கூட்டணி அரசியலில் அடுத்தகட்ட நகர்வுகள் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: “யாருக்கு ஆதரவு என்பதை சொல்லுங்க!” கம்யூனிஸ்டுகளுக்கு நயினார் நாகேந்திரன் வைத்த செக்!
தலைமைச் செயலகம் அமைப்பது தொடர்பாக இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்றும், முதல்வர் தரப்பிலிருந்தோ அல்லது அரசின் சார்பிலோ அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
திருமாவளவன் தெரிவித்த கருத்து சரியானது என்றும் விஸ்வநாதன் கூறினார். தவெக இளைஞர்களை மையமாகக் கொண்ட இயக்கமாக உருவெடுத்துள்ளதாகவும், கடந்த தேர்தலில் கிடைத்த வாக்குகளில் பெரும் பகுதி இளைஞர்களிடமிருந்து கிடைத்ததாகவும் அவர் தெரிவித்தார். தமிழக இளைஞர்களை திமுக குறைத்து மதிப்பிட்டதே தவெக வளர்ச்சிக்கு காரணம் என்றும் அவர் கூறினார்.
இதனிடையே, உயர்கல்வித் துறையில் கொண்டு வரப்பட்டுள்ள தனியார் பல்கலைக்கழக மசோதா குறித்தும் அமைச்சர் விளக்கம் அளித்தார். சர்வதேச தரத்திலான உயர்கல்வி தமிழகத்திலேயே கிடைக்க வேண்டும் என்பதே இதன் நோக்கம் என்றும், மாணவர்கள் வெளிநாடுகளுக்கு செல்வதை குறைத்து, அன்னிய செலாவணி வெளியேறுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
திமுக ஆட்சியிலும் தனியார் பல்கலைக்கழக மசோதா அறிமுகப்படுத்தப்பட்டதாக குறிப்பிட்ட அவர், தற்போதைய மசோதாவில் தனித்தன்மை கொண்ட பல்கலைக்கழகங்களை உருவாக்குவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாக கூறினார். மேலும், பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள துணைவேந்தர் பணியிடங்களுக்கு விரைவில் நியமனங்கள் நடைபெறும் என்றும் அமைச்சர் விஸ்வநாதன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: த.வெ.க.வுக்கு ஆதரவா? தேர்தல் புறக்கணிப்பா? இடைத்தேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சியின் முடிவு என்ன? இன்று தெரியும்!!