×
 

முதல்வர் விஜய் ஆட்சியின் 100 நாள் ரிப்போர்ட்! துறை வாரியாக சாதனைகளை திரட்ட தவெக அரசு உத்தரவு!

தவெக அரசு பதவியேற்று 100 நாட்கள் நிறைவடைவதை முன்னிட்டு ஒவ்வொரு துறையும் செய்த பணிகள், திட்டங்கள் மற்றும் செயல்படுத்தப்பட்ட நடவடிக்கைகளை உள்ளடக்கிய விரிவான பட்டியலை தயாரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

முதல்வர் விஜய் ஆட்சியின் 100 நாள் ரிப்போர்ட்! துறை வாரியாக சாதனைகளை திரட்ட தவெக அரசு உத்தரவு! 

தமிழகத்தில் த.வெ.க. அரசு பொறுப்பேற்று 100 நாட்களை நெருங்கி வரும் நிலையில், கடந்த காலகட்டத்தில் ஒவ்வொரு அரசுத் துறையும் மேற்கொண்ட முக்கிய நடவடிக்கைகள் மற்றும் திட்டங்களை தொகுத்து சாதனைப் பட்டியல் தயாரிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, அனைத்து துறைகளிலும் அதிகாரிகள் விவரங்களை சேகரித்து அறிக்கை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற த.வெ.க., விஜய் தலைமையில் ஆட்சி அமைத்தது. சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்ற விழாவில் கவர்னர் ஆர்.வி. அர்லேகர், விஜய்க்கு முதல்வராக பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். நீண்ட காலமாக தமிழக அரசியலில் ஆதிக்கம் செலுத்திய திராவிட கட்சிகளுக்கு மாற்றாக புதிய அரசியல் ஆட்சி அமைந்தது முக்கிய அரசியல் நிகழ்வாக பார்க்கப்பட்டது.

இதையும் படிங்க: #BREAKING விஜயபாஸ்கர்களுக்கு தவெகவில் பதவி... அதிமுக மாஜிக்களுக்கு விஜய் கொடுத்த அதிரடி ஆஃபர்...!

புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பது, ஊழலை கட்டுப்படுத்துவது உள்ளிட்ட அம்சங்களுக்கு முக்கியத்துவம் அளித்து வருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. லஞ்சம் தொடர்பான புகார்களை பொதுமக்கள் தெரிவிக்க முதல்வர் அலுவலகம் சார்பில் வாட்ஸ்அப் தொடர்பு எண்ணும் அறிவிக்கப்பட்டது.

பெண்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ‘சிங்கப்பெண் சிறப்புப்படை’ அமைப்பு, 200 யூனிட் இலவச மின்சாரம், 717 மதுக்கடைகள் மூடல், அம்மா உணவகங்களை சீரமைக்கும் நடவடிக்கை போன்றவை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் கூறப்படுகிறது.

விவசாயிகளுக்காக ரூ.134 கோடி மதிப்பிலான சிறப்பு தொகுப்பு திட்டம் அறிவிக்கப்பட்டதுடன், கூட்டுறவு வங்கிக் கடன் தள்ளுபடிக்காக ரூ.2,045 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம், கோவை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் புதிய தொழில் திட்டங்களுக்கான ஒப்பந்தங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

குடிநீர் திட்டம், பத்திரப்பதிவில் முறைகேடுகளை தடுக்கும் வகையில் வருகையில்லா ஆவணப்பதிவு, கனிம வளங்களை சட்டவிரோதமாக எடுத்துச் செல்வதை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளும் மேற்கொள்ளப்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், 100 நாட்கள் நிறைவடைவதை முன்னிட்டு ஒவ்வொரு துறையும் செய்த பணிகள், திட்டங்கள் மற்றும் செயல்படுத்தப்பட்ட நடவடிக்கைகளை உள்ளடக்கிய விரிவான பட்டியலை தயாரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த அறிக்கை விரைவில் வெளியிடப்படலாம் என தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

முதல் 100 நாட்கள் மாற்றத்திற்கான தொடக்கம் மட்டுமே என முதல்வர் விஜய் ஏற்கனவே சட்டசபையில் தெரிவித்திருந்த நிலையில், வெளியாக உள்ள இந்த சாதனைப் பட்டியல் அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: “தமிழர்களுக்கு அநீதி”..! தொகுதி மறுவரையறைக்கு எதிராக அமைச்சர் நிர்மல் குமார் காட்டம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share