×
 

த.வெ.க. தேர்தல் பிரசாரக்குழு நாளை ஆலோசனை: 234 தொகுதிகளுக்கும் விஜய் புதிய வியூகம்!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்காகப் புதிய தேர்தல் பிரசாரக் குழுவை அமைத்துள்ள நிலையில், அந்தக் குழுவின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நாளை (ஜனவரி 21) நடைபெற உள்ளது.

தமிழக அரசியலில் உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகம், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான தனது களப்பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, கடந்த ஜனவரி 16-ஆம் தேதி கட்சித் தலைவர் விஜய் 10 பேர் கொண்ட ‘தேர்தல் பிரசார மேலாண்மை குழுவை’ அமைத்தார். இந்தக் குழுவின் முதல் அதிகாரப்பூர்வ ஆலோசனைக் கூட்டம் நாளை சென்னையில் நடைபெறவுள்ள நிலையில், இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தக் குழுவில் கட்சியின் பொதுச்செயலாளர் என். ஆனந்த், தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, உயர்நிலைக் குழு ஒருங்கிணைப்பாளர் கே.ஏ. செங்கோட்டையன் உள்ளிட்ட நிர்வாகிகள் இடம் பெற்றுள்ளனர். நாளை நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில், தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் பிரம்மாண்ட பிரசாரக் கூட்டங்களை நடத்துவது, மாவட்ட வாரியாகப் பொறுப்பாளர்களை நியமிப்பது மற்றும் தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட உள்ளது. குறிப்பாக, சமூக நீதி மற்றும் ஊழலற்ற நிர்வாகம் என்ற கோஷத்தைத் தனது தேர்தல் அறிக்கையின் மையக்கருவாக மாற்ற விஜய் திட்டமிட்டுள்ளார்.

இதற்கிடையில், கட்சியின் கொள்கை மற்றும் பரப்புரைச் செயலாளர் அருண்ராஜ் கூறுகையில், எங்கள் தேர்தல் அறிக்கை என்பது வெறும் காகிதம் அல்ல, அது மக்களுக்கான வாக்குறுதி. இதற்காகத் தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு அமைப்புகள் மற்றும் பொதுமக்களிடம் கருத்துக்களைக் கேட்டு, மக்களின் விருப்பப்படியே அறிக்கை தயார் செய்யப்படும் எனத் தெரிவித்தார். ஏற்கனவே ஒருபுறம் திமுக மற்றும் அதிமுக தங்களின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தைக் கூட்டியுள்ள நிலையில், த.வெ.க.வின் இந்தத் தேர்தல் பிரசாரக்குழுவின் ஆலோசனை, 2026 களம் ஒரு மும்முனைப் போட்டியாக இருக்கப்போவதை உறுதி செய்துள்ளது. நாளை கூட்ட முடிவில் பிரசாரக் குழுவின் மற்றும் முதல்வரின் தொகுதிப் பயணங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: டெல்லியில நடக்குறது விசாரணையா? இல்ல டீலா? பாஜக-விடம் விஜய் சரணாகதி? காங்கிரஸ் கிளப்பும் புதுப் புகார்!


 

இதையும் படிங்க: "6 மணி நேர விசாரணை நிறைவு!" சிபிஐ அலுவலகத்திலிருந்து வெளியே வந்த விஜய்! நாளையும் ஆஜராக உத்தரவு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share