கோவைக்கு ரூ.408 கோடி மதிப்பில் திட்டங்கள்..! முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்த முதல்வர் விஜய்..!!
கோவையில் பெரியார் அறிவுலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய் நலத்திட்ட உதவிகள் வழங்கி உள்ளார்.
கோவையின் காந்திபுரம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பெரியார் அறிவுலகம் என்றழைக்கப்படும் பெரியார் நூலகம் மற்றும் அறிவியல் மையத்தை தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று திறந்து வைத்தார். சிறைத்துறைக்குச் சொந்தமான சுமார் ஏழு ஏக்கர் பரப்பளவில் நஞ்சப்பா சாலையில் மத்திய பேருந்து நிலையத்திற்கு எதிரே கட்டப்பட்ட இந்தப் பிரம்மாண்ட வளாகம், ஒரு லட்சத்து தொண்ணூற்றெட்டாயிரம் சதுர அடி பரப்பளவில் தரைத்தளத்துடன் ஏழு தளங்களைக் கொண்டுள்ளது. முந்நூறு கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்பட்ட இந்தத் திட்டத்தில் இருநூற்று நாற்பத்தைந்து கோடி கட்டுமானப் பணிக்கும், ஐம்பது கோடி புத்தகங்கள் வாங்குவதற்கும், ஐந்து கோடி இ-புத்தகங்களுக்கும் ஒதுக்கப்பட்டிருந்தது.
முதலமைச்சர் விஜய் சென்னையிலிருந்து தனி விமானத்தில் கோவை விமான நிலையம் வந்து, அங்கிருந்து வாகனத்தில் வளாகத்திற்குச் சென்றார். அவினாசி சாலை வழியாக சுமார் பத்து கிலோமீட்டர் தூரம் ரோடுஷோ நடத்தி சென்ற போது ஆயிரக்கணக்கான மக்கள் இருபுறமும் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர். மக்களைப் பார்த்து கையசைத்தபடி அவர்களின் அன்பை ஏற்றுக்கொண்டார். வளாகத்தில் காவல்துறையினர் அணிவகுப்பு மரியாதை அளித்தனர். முதலில் பெரியார் திருவுருவச் சிலையைத் திறந்து வைத்த பின்னர் நூலக வளாகத்தின் கல்வெட்டைத் திறந்து வைத்து, அதன் பல்வேறு தளங்களையும் பார்வையிட்டார்.
குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் போட்டித் தேர்வுக்குத் தயாராகும் இளைஞர்களுக்கான தனித்தனியான வசதிகள் இந்த மையத்தை ஒரு முழுமையான அறிவுத் தளமாக மாற்றியுள்ளன. முதலமைச்சர் உள்ளூர் மாநகராட்சிப் பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடினார்.இதையடுத்து கோவை மாவட்டத்தில் ரூபாய் நானூற்று எட்டு கோடியே இருபத்தைந்து லட்சம் மதிப்பிலான எண்பத்தொன்பது முடிவுற்ற திட்டப்பணிகளை முதலமைச்சர் திறந்து வைத்தார். அதேபோல் ரூபாய் முப்பத்திரண்டு கோடியே முப்பத்திரண்டு லட்சம் மதிப்பில் நூற்று நாற்பத்து நான்கு புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
இதையும் படிங்க: கோவையின் பெருமை..! "ரூ.300 கோடியில் பிரம்மாண்டம்..!! பெரியார் அறிவுலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய்..!!
மேலும் ரூபாய் முப்பத்து நான்கு கோடியே எழுபத்திரண்டு லட்சம் மதிப்பில் ஒன்பதாயிரத்து முந்நூற்று நாற்பத்து மூன்று பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சிகள் முடிந்ததும் ஹெலிகாப்டர் மூலம் கேரளாவின் திருச்சூருக்குப் பயணம் மேற்கொண்டார். இந்தப் பெரியார் அறிவுலகம் கோவையின் புதிய அடையாளமாக உருவெடுத்துள்ளது. இளைய தலைமுறைக்கு அறிவு, அறிவியல் மற்றும் ஆராய்ச்சி வாய்ப்புகளை வழங்கும் இந்த மையம் மாவட்டத்தின் கல்வி வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: இனி இவர்களுக்கு மின் இணைப்பு கிடைக்குமா?... புறம்போக்கு நிலங்களில் வசிப்பவர்களுக்கு அமைச்சர் முக்கிய அறிவிப்பு...!